உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி: தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி கலகலத்து போய் உள்ளது. தமிழகத்துக்கு பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எத்தனை முறை வந்தாலும், பா.ஜ.,வுக்கு தோல்விதான் மிஞ்சும். தமிழக காங்கிரஸ் கட்சியினர், நடிகர் விஜயின் அப்பா சந்திரசேகரை சந்தித்து பேசியதால், எந்த விளைவும் ஏற்பட போவதில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து, ஒரு செங்கலை கூட உருவ முடியாது. டவுட் தனபாலு: 'தன் தந்தையின் பேச்சை எல்லாம் விஜய் கேட்க மாட்டார்'னு தைரியமா இருக்கீங்களா... அல்லது, 'நாடு முழுக்க பல மாநிலங்கள்லயும் நடந்த தேர்தல்கள்ல, அடி மேல அடி வாங்கி பலவீனமா இருக்கும் காங்., கட்சியை, எங்களை தவிர வேற யாரும் துாக்கி சுமக்க மாட்டாங்க'ன்னு சொல்ல வர்றீங்களா என்ற, 'டவுட்' தான் வருது! அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக காங்., அரசு, 30 அதிகாரிகள் அடங்கிய, உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. தி.மு.க., தலைமை, தங்களது சுயநலத்துக்காகவும், கர்நாடகாவில் தங்கள் குடும்பத்தினர் நடத்தும் தொழில்களை பாதுகாக்கவும், கர்நாடக அரசுக்கு ஆதரவாக உள்ளது. தி.மு.க.,வின் இந்த துரோக செயல், மன்னிக்க முடியாத குற்றம். டவுட் தனபாலு: காவிரி பிரச்னையில், தி.மு.க., துரோகம் செய்றதாகவே இருக்கட்டும்... நீங்க, பா.ஜ., கூட்டணியில் தானே இருக்கீங்க... மத்திய பா.ஜ., அரசிடம் பேசி, 'மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரக்கூடாது'ன்னு வலியுறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் என்ற, 'டவுட்' வருதே! தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி செயலர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நடந்த எழுத்து தேர்விலும் குளறுபடிகள் உள்ளன. கோவை பெண் ஒருவர், 500க்கு 494 மதிப்பெண் வாங்கி, 'செலக்ட்' ஆகியுள்ளார். ஆனால், 496 மதிப்பெண் வாங்கியவர் தோல்வி அடைந்துள்ளார். இதில், லஞ்சம் கைமாறி இருப்பதாக, பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. டவுட் தனபாலு: ஏற்கனவே, நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த பணி நியமனங்களில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் பண்ணிட்டதா, அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கு... 'இதுலயும் மாட்டிக்க வேண்டாம்'னு தான், நேர்முகத் தேர்வை ரத்து பண்ணிட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
டிச 15, 2025 10:21

மத்தியில் ஆட்சிள்ளுவர்களுக்கு நெருக்கமாயுள்ளவர்கள்தான் தமிழ்நாட்டுக்கு தேவையானதை வாங்கி தரவேண்டும் என்றால் ஆட்சியில் இருபவராகள் வேலை என்னவாகயிருக்கும் என்ற டவுட்டு வரேவேயில்லையா ?


D.Ambujavalli
டிச 15, 2025 06:14

காங்கிரசுடன் கூட்டணியால் விஜய் கட்சிக்கு எந்த பெரும்பயனும் ஏற்படப்போவதில்லை1 திமுக தங்களுக்கு ஒதுக்கும் சீட் எண்ணிக்கையால் இன்று அதிருப்தி, நாளையே, இன்னும் 8 தொகுதி கொடுத்துவிட்டால் ‘ஊடல்’ மறைந்துவிடும் இதையா ‘மெகா கூட்டணி’ என்று கொண்டாடுகிறார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை