உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில், 30 தொகுதிகளிலும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம். தமிழகத்தில் பொது தொகுதியில் போட்டியிட, 15,000 ரூபாயும், தனி தொகுதிக்கு, 10,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணம். புதுச்சேரியில் பொது தொகுதிக்கு, 10,000 ரூபாயும், தனி தொகுதிக்கு, 5,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டவுட் தனபாலு: கூட்டணியில், ஒற்றை இலக்கத்தில் வாங்க போற சீட்களுக்கு, 264 தொகுதிகளுக்கும் சேர்த்து விருப்ப மனுக்கள் வாங்கும் உங்க தைரியத்தை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... 264 தொகுதிகளுக்கும் உங்க கட்சியினர் போட்டி போட்டு மனுக்கள் தர்றதை பார்த்துட்டு, பெரிய கட்சிகள் உங்களை கூட்டணியில் சேர்த்துக்க ஓடோடி வரும்னு நம்புறீங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!l தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: த.வெ.க., தேர்தல் அறிக்கை, ஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும். அதற்காக தயாராகும் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து, எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பான இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம். டவுட் தனபாலு: ஆட்சியை பிடிக்கணும்னு இலவச திட்டங்களா வாரி விட்டுறாதீங்க... அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி இலவசங்களை குடுத்து தான், தமிழகம் இன்னைக்கு, 9.50 லட்சம் கோடி ரூபாய் கடன்ல மூழ்கியிருக்கு... இந்த கடன்களை அடைக்கிற விதமா, உங்க தேர்தல் அறிக்கையில் திட்டங்களை தந்தா, 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: மதுரை ஜீவா நகரில், ஐந்து பள்ளி மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன், தெருக்களில் உலவும் காட்சிகள், நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. அரசு பள்ளிகளும், அதில் படிக்கும் மாணவர்களும், கெட்டு சீரழிந்து கொண்டிருப்பதை காணும் நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், சாவகாசமாக கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. டவுட் தனபாலு: துணை முதல்வர் உதயநிதியுடன் நிழல் போல பயணித்தும், அவரது புகழ் பாடியும் பொழுதை போக்கும் அமைச்சருக்கு, இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்பது, 'டவுட்'தான்... அந்த மாணவர் களின் பெற்றோர் தான், தங்களது பிள்ளைகளை திருத்தணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GUNA SEKARAN
பிப் 08, 2026 23:02

சுமார் 3 கோடி ரூபாயை வெள்ளையாக்கலாம்.


D.Ambujavalli
பிப் 08, 2026 06:42

வருஷம் பிறந்ததுமே முதல் ஜோக்கை பிரேமலதா அவர்கள் கூறியிருக்கிறார்கள் 274 தொகுதிக்கு விருப்ப மனுவாம் அவர்களின் தொண்டர்களே இப்படியாவது பணம் சேர்க்கும் இந்த சாமர்த்தியத்தை நிச்சயம் வியாபாரிகள் ஆனால் எத்தனை பேர் கண்ணைத்திறந்துகொண்டு, கையிலும் விலக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழ துணிவார்கள் என்று பார்க்கலாம்


Rajan A
பிப் 08, 2026 06:15

சீட் கிடைக்காதவர்களுக்கு பணம் திருப்பி தரப்படுமா இல்லை தேர்தல் நிதியாக எடுத்து கொள்வார்களா? ஆனாலும் ஆட்டம் கொஞ்சம் ஓவராகத்தான் போகிறது. விஜயகாந்த் பெயரை வைத்து இன்னும் எவ்வளவு காலம் ஓட்டுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை