| ADDED : ஜூன் 19, 2024 01:21 AM
புதுடில்லி, :டில்லியைச் சேர்ந்த ஜெயின் சமூக இளைஞர்கள் பக்ரீத் அன்று முஸ்லிம் போல் உடையணிந்து சென்று, 124 ஆடுகளை 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அவற்றை பலியிடுவதில் இருந்து காப்பாற்றிய தகவல் வெளியாகி உள்ளது. டில்லி சாந்தினி சவுக் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் ஜெயின், 30. பட்டயக் கணக்காளரான இவர், பக்ரீத் அன்று ஆடுகள் பலியிடப்படுவதை தன்னால் முடிந்த அளவுக்கு தடுத்து, அவற்றை காப்பாற்ற முடிவு செய்தார்.இதற்காக தன் நண்பர் சிராக் ஜெயின் என்பவருடன் இணைந்து, வாட்சாப் வாயிலாக கடந்த 15ம் தேதி ஒரு குழு துவங்கினார். அதில் ஆடுகளை விலை கொடுத்து வாங்கி, அவற்றை பலியிடுவதை தடுக்கப் போவதாக கூறி நிதி திரட்டியுள்ளார். இதற்காக குஜராத், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து ஜெயின் சமூகத்தினர் பலர், 15 லட்சம் ரூபாய் வரை நன்கொடை அனுப்பியுள்ளனர்.அந்த பணத்தை வைத்து, கடந்த 16ல் டில்லியில் ஆடு சந்தை நடக்கும் மீனா பஜார், மதியா மஹால் ஆகிய பகுதிகளுக்கு முஸ்லிம்கள் போல், குர்தா, தொப்பி அணிந்து சென்று, 124 ஆடுகளை வாங்கி வந்துள்ளனர்.அவற்றை சாந்தினி சவுக்கில் உள்ள ஜெயின் கோவிலில் கட்டி வைத்து தற்போது பராமரிக்கின்றனர்.இது குறித்து விஜய் ஜெயின் கூறியதாவது: பக்ரீத் அன்று ஆடுகளை பலியிடக் கூடாது என்று சொல்ல முடியாது; அது, அவர்களது உரிமை. அதே சமயம், யாருக்கும் பிரச்னையில்லாத வகையில் ஆடுகளை காப்பாற்ற முடிவு செய்தோம். அதற்காக நிதி திரட்டி, சந்தைக்கு சென்று பேரம் பேசி ஆடுகளை வாங்கி வந்தோம். இதனால் ஆடுகளும் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆடுகளை சந்தைக்கு எடுத்து வந்தவர்களும் சம்பாதித்துள்ளனர். மீதமான பணத்தில் ஆடுகளுக்கான தீவனங்களை வாங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.