மதுரை: மதுரை மாநகராட்சி டிரைவர் மனோகரன் தான் பணி ஓய்வு பெற்ற நாளில், தன்னை வாழ வைத்த மாநகராட்சிக்கு நன்கொடையாக மினி வேன், நீர் உறிஞ்சும் மோட்டார், உறிஞ்சும் பைப் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கி நன்றிக்கடன் செலுத்தினார்.மதுரை, அண்ணா நகர், சதாசிவம் நகரைச் சேர்ந்தவர் மனோகரன், 60; மாநகராட்சியில் 1992ல் டிரைவராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 32 ஆண்டுகள் பணியாற்றி நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற கையோடு, அடுத்த நாள் மாநகராட்சிக்கு குடும்பத்துடன் வந்து, அவர் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.தன்னை, 32 ஆண்டுகளாக வாழ வைத்த மாநகராட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில, மக்கள் பணிக்காக மாநகராட்சிக்கு உபயோகப்படும் நீர் உறிஞ்சும் மோட்டார், உறிஞ்சும் பைப், மினி வேன் ஆகியவற்றை நன்கொடையாக மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோரிடம் வழங்கினார்.வேனின் உரிமை, ஆர்.சி., புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் மாநகராட்சி பெயருக்கு மாற்றி வழங்கினார்.மனோகரன் கூறியதாவது: உதவி பொறியாளர், உதவி கமிஷனர், நகர் பொறியாளர் என, பல அதிகாரிகளுக்கு டிரைவராக பணியாற்றினேன். அதிகாரிகள் ஆய்வுப் பணிக்கு செல்லும் போதெல்லாம், மாநகராட்சி வார்டுகளில் சாக்கடை அடைப்பு பிரச்னை அவர்களுக்கு சவாலாக இருந்தது. பல ஆண்டுகளாக நான் இதை நேரடியாக அறிந்தேன். பணி ஓய்வுக்கு பின் என் சிறிய பங்களிப்பாக மாநகராட்சிக்கு ஏதாவது செய்ய நினைத்தேன்.அப்போது, மக்களுக்கு உபயோகப்படும் வகையில் அடைப்புகளை சரி செய்ய பயன்படும் நீர் உறிஞ்சும் மோட்டார், உறிஞ்சு பைப் உடன் மினி வேனை நன்கொடையாக வழங்கினேன். நான், 58 வயதில் ஓய்வு பெற இருந்த நேரத்தில் கூடுதலாக இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு கிடைத்தது. பணிக்காலத்தில் என் குடும்பத்தை வாழ வைத்த மாநகராட்சிக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த அன்பளிப்பை அளித்தேன். மன நிம்மதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.