ஹைதராபாத், தெலுங்கானாவின், ஹைதராபாதை சேர்ந்தவர் சலபதி ராவ். இவர் இங்குள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் சந்துலால் பிரதாரி கிளையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றினார். வங்கியில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 2002ல் சி.பி.ஐ., இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. 2004ல் இவர் மீது இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவரது மனைவியும், இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மோசடி
கடந்த 2004ல், சலபதி ராவ் மாயமானார். அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். ஏழாண்டுகளாக சலபதி ராவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் உயிரிழந்துவிட்டதாக ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும், சலபதி ராவை தொடர்ந்து தேடி வந்த சி.பி.ஐ., தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லுார் என்ற கிராமத்தில் கடந்த 4ம் தேதி அவரை கைது செய்தது. இடைப்பட்ட காலத்தில் நடந்தவை குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:ஹைதராபாதில் இருந்து மாயமான சலபதி ராவ், தொடர்ந்து பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றியபடி பல ஊர்களுக்கு பயணப்பட்டுள்ளார்.கடந்த 2007ல் தமிழகத்தின் சேலத்துக்கு சென்ற அவர் வினீத் குமார் என பெயரை மாற்றி, ஆதார் அட்டை வாங்கியுள்ளார். அங்கு ஒரு பெண்ணை மணந்துள்ளார். இந்த விபரத்தை கண்டுபிடித்தோம். அவரை நெருங்குவதற்குள் அங்கிருந்து எந்த தகவலும் தெரிவிக்காமல் மாயமான அவர், 2014ல் மத்திய பிரதேசத்தின் போபாலுக்கு சென்றார். அங்கு, கடன் வசூலிக்கும் ஏஜன்டாக வேலை பார்த்தார். அங்கிருந்து உத்தரகண்டின் ருத்ராபுர் சென்றவர் பள்ளியில் வேலை செய்தது எங்களுக்கு தெரியவந்தது. இதை கண்டுபிடித்து ருத்ராபுர் சென்று பார்த்தபோது 2016ல் அங்கிருந்து அவர் மாயமாகிவிட்டார். மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் உள்ள வெருல் என்ற கிராமத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் தஞ்சம் அடைந்தார். பெயரை சுவாமி விதிதாத்மானந்த தீர்த்தர் என மாற்றி ஆதார் அட்டையும் பெற்றுள்ளார். அங்கு 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு 2021ல் தப்பினார். இலங்கை
அங்கிருந்து ராஜஸ்தானின் பரத்புர் சென்றவர் இந்தாண்டு ஜூலை வரை சுவாமி விதிதாத்மானந்த தீர்த்தர் என்ற பெயரிலேயே அங்கு வசித்து வந்தார். அங்கிருந்து தன் சீடர் ஒருவருடன் நெல்லை சென்றபோது எங்களிடம் பிடிபட்டார். அங்கிருந்து கடல் மார்க்கமாக இலங்கை செல்ல அவர் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.ஆதாருக்கு பெயரை பதிவு செய்யும்போது கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இப்படியிருந்தும், சலபதி ராவ் எப்படி, பல பெயர்களில் பல ஆதார் கார்டு பெற்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.