UPDATED : ஜூலை 18, 2024 11:10 AM | ADDED : ஜூலை 17, 2024 08:11 PM
திருப்புத்துார்:மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே வஞ்சினிபட்டியில் ஹிந்து, முஸ்லிம்கள் இணைந்து பூக்குழி இறங்கினர்.திருப்புத்துார் அருகே வஞ்சினிபட்டியில் 17 ம் நுாற்றாண்டில் இருந்து 350 ஆண்டுக்கும் மேலாக ஹிந்து, முஸ்லிம்கள் இணைந்து மதநல்லிணக்கத்திற்காக 10 நாள் பூக்குழி விழா கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கியது. மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூக்குழி விழா நடத்தினர். இதற்காக ஹிந்து, முஸ்லிம்கள் விருந்து வைத்து விழா நடத்தினர். மக்கள் நல்வாழ்வு, மத ஒற்றுமைக்காக விழா நடத்தி வருகின்றனர். வஞ்சினிபட்டியை பூர்வீகமாக கொண்ட சையது முகைதீன் குடும்பத்தினர் இந்தவிழாவை ஹிந்துக்களுடன் இணைந்து நடத்துகின்றனர். 2004 ம் ஆண்டுக்கு பின் சையது முகைதீன் குடும்பத்தினரால் இந்த விழா கொண்டாடப்படாமல் இருந்தது. இக்கிராம மக்கள், அக்குடும்பத்தினரை கண்டறிந்து சையது முகைதீனின் மகன் சையது மொய்நுதீன், அவரது சகோதரர்களை அழைத்து வந்து, 17 ஆண்டிற்கு பின் இந்த விழாவை மீண்டும் நடத்தினர்.சுற்றுப்புற கிராம மக்கள் மல்லிகை பூ, சர்க்கரை வைத்து வழிபட்டனர். தொழுகைக்கு பின் சுவாமி புறப்பாடு ஆனது. அங்கு தயாரான பூக்குழியை மூன்று முறை வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நெருப்பை கையில் எடுத்து வீசியும் பெண்களின் முந்தானையில் நெருப்பை கொட்டி நேர்த்தி செலுத்தினர். திருமணம், குழந்தை வரம் வேண்டி இப்பகுதி மக்கள் மொகரம் பண்டிகையில் பூக்குழி இறங்குகின்றனர். /////