| ADDED : மே 29, 2024 01:22 AM
திருச்சூர், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மூன்னுபீடிகா அருகே உள்ள பெருஞ்சாணம் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் கடந்த 25ம் தேதி சிலர் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டனர்.உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 85க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், திருச்சூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உசைபா, 56, என்ற பெண் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குறிப்பிட்ட ஹோட்டலில் குழிமந்தி சாப்பிட்ட சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் உசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.குழிமந்தியுடன் பரிமாறப்பட்ட மையோனைஸ் தான் உயிரிழப்புக்கு காரணம் என சந்தேகிக்கிறோம். அந்த ஹோட்டல் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.குழிமந்தி என்பது, மேற்காசிய நாடான ஏமனில் மிக பிரபலமான, பிரியாணி போன்ற உணவு. இந்த உணவை, கேரளாவில் வசிப்பவர்கள் அதிகம் விரும்புவதால், இங்குள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் இது அதிக அளவில் விற்பனையாகிறது.