சென்னை:சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், 2024 - 2025ம் கல்வியாண்டில், எட்டாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், டி.சி., வாங்க மறுத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை வட்டம், பங்களா தெருவில், பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது, இங்கு படிக்கும் மாணவர்களின் நீண்ட கால கோரிக்கை. அலட்சியம்
ஆனாலும், 70 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பள்ளி தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால், இங்கு எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் பார்வையற்ற மாணவர்களில் பலர், உயர் வகுப்புகளில் சேருவதில்லை. அரசு விதிப்படி, பார்வை யற்றோர் பள்ளிகளில், 60 பேர் படித்தால், உயர்நிலை பள்ளியாகவும், 80 பேர் படித்தால் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த வேண்டும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், சேலம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் செயல்படும், நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சேலம் அரசு பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், இதே பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை படிக்க வேண்டும் என்று கூறி, மாற்றுச் சான்றிதழான டி.சி., வாங்காமல் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் கருப்பையா கூறியதாவது:பார்வையற்றோருக்கான நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பை நிறைவு செய்வோரில் பலர் உயர் வகுப்புகளில் சேருவதில்லை. சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பை நிறைவு செய்த, இரு மாணவியர் உட்பட, 14 மாணவர்கள், இதே பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பை படிக்க விரும்புவதாகக் கூறி, டி.சி., வாங்காமல் புறக்கணித்து வருகின்றனர். விரும்புவதில்லை
தஞ்சை, திருச்சி, சென்னை மாவட்டங்களில், பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், அதிக தொலைவு, திருச்சியில் பார்வையற்ற மாணவி மர்ம மரணம் உள்ளிட்ட காரணங்களால், அங்கு அனுப்ப, பெற்றோர் விரும்புவதில்லை. எனவே, இடைநிற்றலை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.