பண்ணையில் தப்பிய எருமைகள்; பத்திரமாக மீட்கப்பட்ட சுவாரசியம்
வீரபாண்டி அருகேயுள்ள தனியார் தோட்டம்; பனிரெண்டுக்கும் அதிகமான எருமைகள், கட்டி வைக்காமல் வளர்க்கப்பட்டு வந்தன. கடந்த 17ம் தேதி எட்டு எருமைகளை திடீரெனக் காணவில்லை. பண்ணையில் இருந்த தடுப்பை முட்டித்தள்ளி, அப்படியே மேய்ந்தபடி சென்றுள்ளன. பண்ணை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள், பல்வேறு பகுதிகளுக்கு எருமைகளைத் தேடிச்சென்றுள்ளனர். அன்று இரவு 8:00 மணியளவில், 14 கி.மீ. துாரம் கடந்து, பல்லடம் தாலுகா, மாதப்பூர் கிராமத்துக்கு இந்த எருமைகள் சென்றுள்ளன. பொதுமக்கள் தகவல் கொடுத்ததும், வருவாய்த்துறையினர் எருமைகளை மீட்டனர். எருமைகளுக்குச் சிலர் சொந்தம் கொண்டாடத் துவங்கினர். குழப்பமடைந்த வருவாய்த்துறையினர், பல்லடம் போலீசாரை வரவழைத்தனர். விசாரணையில், அங்கிருந்த யாரும் எருமைகளின் உரிமையாளர் இல்லை என்று தெரியவந்தது. தீவனம் மற்றும் தண்ணீர் கொடுத்து, பாதுகாப்பு வேலியுடன் இருந்த நிலத்தில் எருமைகள் தங்க வைக்கப்பட்டன. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. இதையறிந்து, பண் ணையில் இருந்து எருமைகளை காணவில்லையென, பணியாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்களிடம் விசாரித்துள்ளனர். அலுவலர்கள் விசாரணை நடத்தியபின், எருமைகளை பண்ணையாளரிடம் ஒப்படைத்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு கைகூப்பி நன்றி கூறிவிட்டு, எருமைகளுடன் பண்ணையாளரும், பண்ணை ஊழியரும் மகிழ்ச்சிபொங்க பண்ணைக்குப் புறப்பட்டனர். ஒப்படைத்தது எப்படி?: வழிதவறி வந்த எருமைகளை, மாதப்பூர் அருகே வசிக்கும் சிலர், தங்களுடையது என கேட்டனர். இருப்பினும், போலீஸ் விசாரணைக்கு பிறகு உண்மையான உரிமையாளர் இல்லை என்பது தெரியவந்தது. எருமைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்தோம். உண்மையான உரிமையாளர் தேடி வந்த பிறகு, அவரிடமும் விசாரித்து, தாலுகா அலுவலகத்தில் வாக்குமூலம் எழுதி வாங்கிய பிறகு ஒப்படைத்தோம். பண்ணையில் பணியாளர் காவலில் இருந்தும், தட்டிகளை முட்டித்தள்ளிவிட்டு, எட்டு எருமைகளும் கூட்டமாக வெளியேறி, வழிதவறி மாதப்பூர் வரை வந்திருந்தது. - குமரவேல்: நில வருவாய் ஆய்வாளர்: