வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பெ.நா.பாளையம்; கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தார்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணான் கோவில் பிரிவு உள்ளது. இங்கு பா.ஜ., முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநில செயலாளர் பரமேஸ்வரன் வசித்து வருகிறார். அவருடன் மாமனார் ராதா கிருஷ்ணன், 92. மாமியார் சரோஜா, 82. வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு வயது முதிர்வு காரணமாக ராதா கிருஷ்ணன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து பராமரித்து வந்த சரோஜாவுக்கு இதனால் பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. கணவர் ராதாகிருஷ்ணன் மறைவு, மனைவி சரோஜாவை அதிகமாக பாதித்தது. ''எங்கு சென்றாலும், என்னையும் அழைத்துச் செல்வீர்களே, இன்று நீங்கள் மட்டும் என்னை விட்டுவிட்டு போய் விட்டீர்களா'' என்று கூறி நெடுநேரம் அழுது புலம்பியபடி இருந்தார். பின்னர் சரோஜா திடீரென மயக்கமாகி சாய்ந்தார். உறவினர்கள் சரோஜாவை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சரோஜா உயிரிழந்து விட்ட தாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணிக்கு ராதாகிருஷ்ணன், சரோஜா ஆகியோரது உடல்கள் பெரியநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. இது குறித்து உயிரிழந்த தம்பதியினரின் மருமகன் பரமேஸ்வரன் கூறுகையில், ''எங்களது மாமனார், மாமியார் ஆகியோருக்கு திருமணம் ஆகி, 69 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, 30க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர். ஒரு நாளும் பிரியாமல் அன்னியோன்யமாக இருந்தவர்கள், இன்று சாவிலும் இணைந்து இருக்கிறார்கள்'' என்றார்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி