சென்னை,  உடல் உறுப்பு தானம் வாயிலாக பலருக்கு மறுவாழ்வு அளித்து மறைந்த இளைஞரின் 2 வயது பெண்குழந்தைக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள், மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சுவால்பேட்டையை சேர்ந்தவர் மகேஷ்வரன், 26. அவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதிக்கு சாய்னா சன்வி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 4ம் தேதி நேர்ந்த சாலை விபத்தில்,  மகேஷ்வரன் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிகிச்சை பலனளிக்காமல், கடந்த 6ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்தார். பின், அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் அளித்தனர்.அதன்படி, இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், விழிவெண்படலம் ஆகியவை தானமாக பெறப்பட்டு, பலருக்கு பொருத்தப்பட்டது. உடல் உறுப்பு தானம் அளித்த மகேஷ்வரனுக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். இந்நிலையில், அவரது 2 வயது பெண் குழந்தைக்கு, கடந்த 12ம் தேதி பிறந்த நாள் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை துணை முதல்வர் கவிதா உள்ளிட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், குழந்தையின் வீட்டிற்கு சென்று, 'கேக்' வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.அப்போது, அனைவரும் தனித்தனியாக குழந்தைக்கு பரிசு பொருட்களை வழங்கினர். டாக்டர்கள் மற்றும் மாணவர்களின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.