| ADDED : ஏப் 28, 2025 06:47 AM
பெங்களூரு : 'மொபைல் போனில் மூழ்கியிருக்க வேண்டாம்' என கண்டித்த கணவரை, கத்தியால் குத்திய மனைவி கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம், விஜயபுரா நகரின் ஆலகுன்டே நகரில் வசிப்பவர் அஜித் ரத்தோட், 30; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி தேஜு, 27. இவர், மொபைல் போனுக்கு அடிமையானவர். வீட்டை கவனிக்காமல், எந்த நேரமும் 'சாட்டிங்' செய்து பொழுது போக்குவார். கணவர் பல முறை அறிவுரை கூறியும் பலன் இல்லை. தினமும் சாட்டிங்கில் இருந்ததால், மனைவிக்கு வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு இருக்கலாம் என அஜித் சந்தேகம் அடைந்தார்.இது குறித்து கேட்டால், தேஜு பதில் அளிக்காமல் சண்டை போட்டுள்ளார். இதனால் கணவரின் சந்தேகம் அதிகமானது. நேற்று முன்தினம் நள்ளிரவும் தேஜு மொபைல் போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்தார். கோபம் அடைந்த அஜித், 'யாருடன் சாட்டிங் செய்கிறாய்; பதில் சொல்' என விசாரித்தார்.ஆனால், தேஜு பதில் அளிக்கவில்லை. நீண்ட நேரம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அதன்பின் அஜித் உறக்கத்தில் ஆழ்ந்தார். அவரது மனைவியின் கோபம் குறையவில்லை. அதிகாலை 3:00 மணியளவில், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, கணவர் அஜித்தின் கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக குத்தினார்.அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் உள்ளே வந்து பார்த்தனர். ரத்தக் காயங்களுடன் கிடந்த அஜித்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆதர்ஷா நகர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். தேஜுவை போலீசார் கைது செய்தனர்.