கட்டாக்; ஒடிசாவில், மர்மமான முறையில் பெண் உயிரிழந்த வழக்கில் துப்பு கிடைக்காத நிலையில், குற்றம் நடந்த இடத்துக்கு அருகில் கிடந்த ரத்தக்கறை படிந்த சட்டையில் இருந்த தையல் கடையின் குறியீடு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவியது. நியூ ஸ்டார்
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள கத்ஜோதி ஆற்றங்கரையில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடலை போலீசார் கடந்த 13ம் தேதி கைப்பற்றினர். இறந்தவர் பற்றிய அடையாளம் தெரியவில்லை.குற்றம் நடந்த இடத்தில் கத்தி மட்டுமே கிடைத்தது. மற்றபடி எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இந்த மர்மமான கொலை வழக்கை முடிக்க முடியாமல் போலீசார் திணறினர். கத்ஜோதி ஆற்றங்கரையில் மீண்டும் ஆய்வு செய்த போலீசார், பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகே, ரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் பேன்ட்டை கண்டுபிடித்தனர்.அவற்றில், 'நியூ ஸ்டார் டெய்லர்ஸ்' என்ற 'டேக்' இணைக்கப்பட்டிருந்தது. இந்த குறியீட்டில் கவனம் செலுத்திய போலீசார், நியூ ஸ்டார் டெய்லர்ஸ் என்ற பெயரில், ஒடிசாவில் உள்ள தையல்காரர்களிடம் விசாரணை நடத்தினர்.ஆனால், சட்டை, பேன்ட்டில் இருந்த குறியீடு, இந்த தையல்காரர்களிடம் ஒத்துப் போகவில்லை. இதே போன்ற குறியீடு, குஜராத்தில் பயன்படுத்தப்படுவதாக, கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த தையல்காரர் ஒருவர், விசாரணையின் போது போலீசாரிடம் தெரிவித்தார். இதன்படி, குஜராத் போலீசை தொடர்பு கொண்டு, ஒடிசா போலீசார் உதவி கேட்டனர். சூரத்தில் நியூ ஸ்டார் டெய்லர்ஸ் என்ற பெயரில் ஒரு தையல் கடை இருப்பதாக ஒடிசா போலீசாருக்கு குஜராத் போலீசார் தகவல் கொடுத்தனர். மொபைல் போன்
அங்கு சென்ற ஒடிசா போலீசார், அந்த தையல்காரரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, குற்றம் நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சட்டை மற்றும் பேன்ட்டை, தான் தைத்து கொடுத்ததாக அவர் தெரிவித்தார். மேலும், பாபு என்பவருக்கு இவற்றை தைத்து கொடுத்தாகவும், 100 ரூபாய் சில்லரை இல்லை என்பதால், அவரது மொபைல் போன் எண்ணுக்கு அந்த பணத்தை அனுப்பியதாகவும் தையல்காரர், போலீசாரிடம் கூறினார். அந்த எண், பாபுவின் நண்பருடையது என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி, அந்த சட்டை மற்றும் பேன்ட், கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகநாத் துஹுரி, 27, என்பவருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.ரயிலில் சூரத் சென்ற அவரை, ராயகடாவில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கொல்லப்பட்ட பெண்ணின் மைத்துனர் ஜகநாத் துஹுரி என்பது தெரிந்தது. சகோதரர் பலராம் துஹுரி, உறவினர் ஹபி துஹுரி ஆகியோரின் உதவியுடன் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால் கொலை செய்ததாக பலராம் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.