விமானத்தில் வந்த சிறுவனின் கல்லீரல் 63 வயது முதியவருக்கு பொருத்தி சாதனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: பெலகாவியில் இருந்து விமானத்தில் எடுத்துவரப்பட்ட 16 வயது சிறுவனின் கல்லீரல், 63 வயது முதியவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.பெலகாவியில் உள்ள கே.எல்.இ., மருத்துவமனையில், நேற்று, 16 வயது சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.தேவைப்படும் நபர்களை மருத்துவர்கள் கண்டறியத் துவங்கினர். அப்போது சிறுவனின் கல்லீரல், பெங்களூரில் உள்ள முதியவருக்கு பொருத்துவது என முடிவு செய்தனர். இதற்கான பணிகள் ஆரம்பமாயின. சிறுவனின் உடலில் இருந்து கல்லீரல் அகற்றப்பட்டு, பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.நேற்று காலை 6:30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து, ஹுப்பள்ளி விமான நிலையத்திற்கு, கல்லீரலை மருத்துவ குழுவினர் எடுத்து வந்தனர். இதற்காக சாலையில் 'ஜீரோ டிராபிக்' ஏற்படுத்தப்பட்டது.விமான பயணியரிடம் கல்லீரல் இருப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெங்களூருக்கு காலை 9:35 மணிக்கு விமானம் வந்து சேர்ந்தது.பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கல்லீரலை தானமாக பெறும் நோயாளி உள்ள யஷ்வந்த்பூர் 'ஸ்பர்ஷ்' மருத்துவமனை வரை 'ஜீரோ டிராபிக்' செயல்படுத்தப்பட்டது. மருத்துவமனையில், மகேந்திரா, 63, என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.கல்லீரல் தானம் அளிக்க யாரும் முன்வராததால், அவர் ஒரு ஆண்டாக மகேந்திரா காத்திருந்தார்.மருத்துவமனை தலைவர் சரண் ஷிவராஜ் பாட்டீல் கூறுகையில், ''இண்டிகோ ஏர்லைன்ஸ், போக்குவரத்து போலீசார், கர்நாடக மாநில உறுப்பு மாற்று அமைப்பு என அனைவரின் கூட்டு முயற்சியே, அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதற்கு காரணம். உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும். இதன் மூலம், இறப்பிலும் ஒருவரை வாழ வைக்க முடியும்,'' என்றார்.