| ADDED : ஏப் 22, 2024 01:28 AM
புதுடில்லி: கடும் வெப்ப அலை காரணமாக, கோல்கட்டா துார்தர்ஷன் பெண் செய்தி வாசிப்பாளர் நேரலையில் மயங்கி விழுந்தார்.நாடு முழுதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. முதற்கட்டமாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் சமீபத்தில் வெப்ப அலை வீசின. தற்போது, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் வெப்ப அலை வீசுகின்றன. மேற்கு வங்கத்தில் வழக்கத்தை விட ஏழு முதல் எட்டு டிகிரி செல்ஷியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகி வருகிறது. மித்னாபூர், பன்குரா உள்ளிட்ட இடங்களில் 44.5 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.நிலப்பரப்புகளில் 40 டிகிரிக்கு அதிகமாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரிக்கு அதிகமாகவும், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரிக்கு அதிகமாகவும் வெப்பம் பதிவாகும்போது அது வெப்ப அலையின் உச்சம் என கணக்கிடப்படுகிறது.இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள அரசு தொலைக்காட்சி நிறுவனமான துார்தர்ஷனில், செய்தி வாசிப்பாளர் லோபமுத்ரா சின்ஹா என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். வெப்ப அலை தொடர்பான செய்தியை அவர் வாசித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவரது வார்த்தைகள் குழன்று இருக்கையிலேயே மயங்கி சரிந்தார். பணியாளர்கள் உடனடியாக அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். ஒரு சில நிமிடங்களுக்குப் பின், அவர் கண் விழித்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.இந்த காட்சிகளை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த லோபமுத்ரா, கடும் வெப்ப அலை காரணமாக தன் ரத்த அழுத்தம் திடீரென குறைந்த காரணத்தினால் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார்.அன்றைய தினம், செய்தி அரங்கில் உள்ள 'ஏசி' சரிவர வேலை செய்யாததால், வெப்பம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே, கோடைக் காலத்தில் அனைவரும் அதிக அளவு திரவ உணவு உட்கொள்ளும்படி அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.