உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மாணவியரை செருப்பால் அடித்த ஆசிரியைக்கு ரூ.4 லட்சம் அபராதம்

மாணவியரை செருப்பால் அடித்த ஆசிரியைக்கு ரூ.4 லட்சம் அபராதம்

சென்னை: மாணவியரை செருப்பால் அடித்து துன்புறுத்திய, அரசு பள்ளி ஆசிரியைக்கு, 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஆறுமுகம், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: என் மகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த, 2017 நவம்பர் 29ல், இப்பள்ளி ஆசிரியை சாந்தி, மாணவியருக்கான கழிப்பறைக்கு வந்து, கதவை மூடாமல் பயன்படுத்தியுள்ளார். அதை கண்ட, ஆறாம் வகுப்பு மாணவியர் இருவர், கழிப்பறை கதவை மூடியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, 'கழிப்பறை கதவை ஏன் மூடினீர்கள்' என கேட்டு, இரு மாணவியரை செருப்பால் அடித்துள்ளார்; தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார், சக மாணவியர் முன் செருப்பால் அடி வாங்கியதால், அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தும், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரித்த, ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: ஆணையத்தின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர், சின்னசேலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டார். அவர் அளித்த அளித்த அறிக்கையில், ஆறாம் வகுப்பு மாணவியர் இருவரை, ஆசிரியை செருப்பால் அடித்தது உண்மைதான் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட மாணவியர் இருவருக்கும், தமிழக அரசு ஒரு மாதத்திற்குள், தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த 4 லட்சம் ரூபாயை, ஆசிரியை சாந்தியிடம் இருந்து, தமிழக அரசு பெற்றுக் கொள்ளலாம். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
மே 30, 2025 17:02

அடப்பாவிகளா... 2017 ல நடந்திச்சா இது? இன்னிக்கி முழிச்சிக்கிட்டீங்களா?


வாத்தியார் வாசு
மே 30, 2025 17:00

ஏற்கனவே பராமரிப்பு இல்லாம பள்ளிக்குய்ட கக்கூசெல்லாம் நாறும். உள்ளே தாழ்ப்பாள் போட வசதி இருக்காது. ஆசிரியர்களுக்கு தனியா கழிப்பறை வசதியும் கிடையாது. இதையெல்லாம் ம.உ ஆ க்கு கண்ணிலே படாது. மணிக்கணக்கா நாத்தத்தில் இருந்த ஆசிரியைக்கு பத்து லட்சம் இழப்பீடு ம.உ.ஆ வாங்கித்தருமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை