தஞ்சாவூர்: தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியும், சட்டசபை தேர்தலில் அக்கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை வைத்தும், லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு அ.தி.மு.க., புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.'கண்டா வரச் சொல்லுங்க' என குறிப்பட்டு, தமிழகம் முழுதும் அக்கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அ.தி.மு.க.,வினர் இந்த போஸ்டர்களை சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=twktwo45&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், 'மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களே! இவர்களை நீங்கள் பார்த்தீர்களா?' என, எம்.பி., போட்டோக்களை போட்டு, 'கண்டா வரச் சொல்லுங்க' எனவும், 'மதுவிலக்கு அமல்படுத்தப்படும்னு சொன்னவரும், மது விலையை ஏத்துனவரும் ஒரே ஆளா? அவரை கண்டா வரச் சொல்லுங்க' என, கூறப்பட்டுள்ளது.மேலும், 'என்னை தவிர என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறியவரை கண்டா வரச் சொல்லுங்க... 'நீட்' தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்ற சின்னவரை கண்டா வரச் சொல்லுங்க' என, பலவகையான மீம்ஸ் உருவாக்கி, அ.தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.இதற்கு தி.மு.க.,வினர் பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., கூட்டணியில் இருந்தபோது, தமிழகத்திற்கு எதிராக பேசிவிட்டு, இப்போது நல்லவரு போல பேசும் பழனிசாமியை கண்டா வரச் சொல்லுங்க, என பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி போட்டி போட்டு பதிவிட்டு வருகின்றனர்.அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற போஸ்டர், அ.தி.மு.க., சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுதும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒட்டப்பட்டுள்ளது.தொகுதி பக்கமே எட்டி பார்க்காத எம்.பி.,க்கள் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து, நிறைய போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு கையிருப்பில் உள்ளன. விரைவில் அந்த போஸ்டர்களும் ஒட்டப்படும்.தி.மு.க., எதிர்கட்சியாக இருந்த போது, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க., செயல்பாடுகளை விமர்சித்து, பல்வேறு வகைகளிலும் குடைச்சல் கொடுத்தது போல, வரும் காலங்களில் தி.மு.க.,வுக்கு நாங்களும் குடைச்சல் ஏற்படுத்துவோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.