உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பஞ்சமே இல்லாமல் குளறுபடிகள்!

பஞ்சமே இல்லாமல் குளறுபடிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அந்த நாளுக்காக கொங்கு மண்டலமே தவம் இருந்தது. ஆம்... அந்த திருநாளும் வந்தது. ஒட்டுமொத்த தமிழகமே அவிநாசிக்கு திரண்டு வந்ததை போல, எங்குபார்த்தாலும் மக்கள். நான்கு ரத வீதிகள் மட்டுமின்றி, பஸ் ஸ்டாண்ட் ரோடு, கோவை ரோடு, சேவூர் ரோடு, மங்கலம் ரோடு என, கோவிலைச்சுற்றியுள்ள சாலைகளில், எங்கெங்கும் பக்தர்கள் வெள்ளம்.காலை, 6:30 மணிக்கு. அவ்வளவு பெரிதாக கூட்டமில்லை. 'சரி எப்படியும் சாமிய பாத்திடலாம்,' என்றே பலரும் நினைத்தனர். நேரம் செல்லச் செல்ல எல்லா சாலைகளிலும் சாரை சாரையாக மக்கள், குடும்பத்துடன். இன்னும் சிலர் கைக்குழந்தைகளுடனும், காத்திருக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில், நிற்க முடியாத நெரிசல். வெயில் ஒருபுறம், கூட்ட நெருக்கடி ஒருபுறம், என லட்சக்கணக்கான பக்தர்கள் தவித்து தான் போயினர்.'இப்படியொரு மெகா கூட்டத்தை, நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை...' என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் சாதாரணமாக மொபைல் போனில் யாரிடமோா அரட்டை அடித்து கொண்டிருந்தார்.கும்பாபிேஷக தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, 'இன்னும் ஆறு மாசத்துக்கு வேல இருக்குது. அதுக்குள்ள எப்டி முடிப்பாங்க' என்பதில் துவங்கியது, அவிநாசி கோவில் கும்பாபிேஷகம் குறித்த பேச்சு. இருந்தாலும், பல கோடி ரூபாய் மதிப்பில், அதுவும் நன்கொடையாளர்களை தேடித்தேடி பிடித்து, அறங்காவலர் குழுவினர் ஒரு வழியாக அனைத்து திருப்பணிகளையும் முடித்தனர்.அதன்பின், பத்திரிக்கை வினியோகம் செய்யவே காலதாமதம் ஏற்பட்டது. அதுவும் எப்படியோ முடிந்து, திருமாளிகை பத்தி மண்டபம், சீரான கல்தளம், வண்ணமயமாக காட்சியளிக்கு ராஜகோபுரம் உட்பட பிற கோபுரங்கள், தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம், 'டக்ட்' முறையில் ஒயரிங், அபிேஷக நீர் தேங்காமல் செல்ல முறையான வடிகால், புத்தம் புதிய பர்னிச்சர்களுடன், 'ஏசி' வசதியுடன் அலுவலர் அலுவலகம் என பல ஜொலித்தது.அதனை தொடர்ந்து, அழகான பிரமாண்ட யாகசாலை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. எட்டு கால யாகசாலை பூஜையுடன், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடந்தது.

பேசுபொருளாக மாறிய குளறுபடிகள்

இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும், தற்போது பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மத்தியில், கோவில் நிர்வாகத்தினர் குளறுபடிகள் குறித்த செய்தி மட்டுமே இப்போது பேசு பொருளாக இருந்து வருகிறது.

'பாஸ்' வழங்குவதில் பாகுபாடு

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 'பாஸ்' வழங்குவதில், பாகுபாடு காட்டப்பட்டது. திருப்பணிக்கு நிதியளித்த நன்கொடையாளர்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டியது தான். அதனை தவிர்த்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள், சாமானியர்கள் என அனைவருமே 'பாஸ்' கேட்டு கோவிலுக்கு நடைநடையாய் நடந்தார்கள்.வழக்கம்போல, 'இப்ப தர்றோம்... அப்ப தர்றோம்' என்று சொல்லியே, கும்பாபிேஷகத்துக்கு முதல் நாள் வரை இழுத்தடித்தனர். இதற்காக கட்சி பாகுபாடின்றி, செயல் அலுவலரையும், ஒரு கட்டத்தில் அறங்காவலர்களையும் முற்றுகையிட்டு, 'தாளித்து' விட்டனர்.நிலையை 'சீரியஸ்' என்பதை சற்று தாமதமாக உணர்ந்து கொண்ட செயல் அலுவலர் , இரவோடு இரவாக, மீண்டும் 'பாஸ்' தயார் செய்து, அங்கங்கே ஆட்களை வைத்து வினியோகம் செய்தார். ஒரு வழியாக 'பாஸ்' கிடைத்தவர்கள், கோவிலுக்கு சென்று பார்த்தால், கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஏறத்தாழ, 4 ஆயிரம் பேர் வரை கோவிலுக்குள் இருக்கலாம் என்ற நிலையில், ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே இருந்தனர். கோவில் வளாகத்தில், நிறைய இடங்கள் காலியாகவே காட்சியளித்தன.இதில், உச்சகட்ட கொடுமை என்னவென்றால், இந்த 'பாஸ்', இந்த இடம் என்ற ஒரு குறிப்பும் போலீசாருக்கு கடைசி வரை சொல்லவில்லை. ஒரு கட்டத்தில், கடுப்பான டி.எஸ்.பி., சிவகுமார், ''பாஸ் கண்ணில் காட்டவே மாட்டடேங்கிறீங்க. இப்படியிருந்தா, போலீசை எப்படி 'அலர்ட்' பண்ணுவது,' என்று அறங்காவலரிடம் பேசினார்.

அகன்ற திரைகளுக்குமா பஞ்சம்!

கும்பாபிேஷகத்துக்காக திருப்பூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை என்பதால், பல லட்சம் மக்கள் வருவார் என்பது சின்னக்குழந்தைக்கு கூட தெரியும். இதனால், பக்தர்களை ஓரளவு திருப்தி அடைய செய்ய, அகன்ற டிவி திரைகளை, பல இடங்களில் வைத்திருக்க வேண்டும். ஆனால், வைக்கவில்லை. இதனால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக காட்சிகள் காண முடியாமல், நொந்து கொண்டனர்.இதேபோல கும்பாபிேஷகம் குறித்த அறிவிப்பு, நேர்முக வர்ணனையிலும் சில குறைபாடு இருந்தாகவும் பக்தர்கள் மனம் வேதனைப்படுகின்றனர். குறைந்தபட்சம் நான்கு ரத வீதிகளில் ஒலி பெருக்கியை வைத்திருக்க வேண்டும். இவ்வளவு பக்தர்கள் வருவர், இப்படி செய்ய வேண்டும் என்று எந்தவொரு திட்டமிடலும் இல்லை என்பது கும்பாபிேஷக நாளன்று வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

தெளிக்கப்படாத தீர்த்தம்

பொதுவாக கும்பாபிஷேகம் என்றாலே, பக்தர்கள் பெரிதும் விரும்புவது, தீர்த்தம் தெளிப்பதை தான். சிறியசிறிய கோவில்களில் கூட, தீர்த்தம் தெளிப்பதை தெளிவாக செய்யும் போது, அவிநாசி போன்ற பெரிய கோவில்களில் எப்படி செய்திருக்க வேண்டும்! ஆனால், செய்யவில்லை.இது பக்தர்களை பெரிதும் வேதனையில் ஆழ்த்தியது. கோவில் உள்பிரகாரம், முன்புற வளாகத்தில் 'ஸ்பிரிங்லர்' வாயிலாக தீர்த்தம் தெளித்தனர். கோவில் முன் வளாகம் மற்றும் தெற்கு ரத வீதியில், தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த 'ராட்சத ட்ரோன்' வாயிலாக தீர்த்தம் தெளித்தனர். அதனை, பக்தர்களும் வரவேற்றனர்.அதேநேரம், மேற்கு மற்றும் வடக்கு ரத வீதி உட்பட பல பகுதிகளில் காத்திருந்த மக்களும் தீர்த்தம் கிடைக்கவே இல்லை என்பது உச்சகட்ட வேதனை. ஒருவேளை தீர்த்தம் பரவலாக தெளிக்கப்பட்டிருந்தால், 'அவிநாசியப்பா இதுவே போதும்,' என்று பக்தர்கள் சென்றிருப்பர். கூட்டமும் குறைந்திருக்கும்.எங்கே கழிப்பிடம் உள்ளது, எங்கு அன்னதானம், குடிநீர் வழங்குகின்றனர் என்பதற்கும் வழிகாட்டி பலகை வைக்கப்படவே இல்லை. இதனாலும், பக்தர்கள் கடுமையாக அவதிப்பட்டனர் மற்றும் அலைக்கழிந்தனர்

அதிகாரிகள் அலட்சியம்

இவ்வளவு பெரிய கோவில், மிகப்பெரிய விழா, மாவட்டம் முழுதும் விடுமுறை என்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, விழாவுக்கு கூட்டம் அதிகம் இருக்கும் என்பதை உளவுத்துறை போலீசார் சரியாக கணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இருப்பினும், ஆயிரம் போலீசார் என்ற அளவில், கூட்டத்தை போலீசார் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினர்.கும்பாபிேஷகம் முடிந்து ஒரு சில நிமிடங்களில், மக்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட துவங்கியது. ஒரு வழியில் பக்தர்கள் எதிரும் புதிருமாக சென்றதில், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. குழந்தைகள் அழுதனர். முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நெரிசல் அனைத்து வீதிகளிலும், ஏறத்தாழ, 3 மணி நேரம் நீடித்தது.இத்தனை சொதப்பல்களுக்கும் முற்றிலும் பொறுப்பேற்க வேண்டியது அறநிலையத்துறை அதிகாரிகள் தான். ஏனெனில், பெரிய கோவில், பெரிய கும்பாபிேஷகம், பெரியளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதை அதிகாரிகள் கட்டாயம் கணித்திருக்க வேண்டும்.அதிலும், இவ்வளவு பெரிய கோவில் விழாவை கையாள நன்கு அனுபவம் மற்றும் நிர்வாகத்திறன் வாய்ந்த செயல் அலுவலரை கூடுதலாக நியமித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இத்தனைக்கும் இணை ஆணையரும், உதவி ஆணையரும் அடிக்கடி அவிநாசிக்கு கோவிலுக்கு 'ஆய்வுக்காக' வந்து சென்றனர். ஆனால், ஏற்பாடுகளை சரியாக திட்டமிடவில்லை என்றே பக்தர்கள் குமுறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raa
பிப் 05, 2024 11:28

இத்தனை கூட்டம் வரும் கோயிலுக்கு ஆனால் தேடிப்போய் நாத்திக கும்பலுக்குத்தான் வோட்டு போடுவார். பின்பு எப்படி வசதிகள் கிடைக்கும்?


sridhar
பிப் 10, 2024 08:26

ஆமாம், திமுகவுக்கு வோட்டு போடும் பக்தர்கள் கொஞ்சம் சிரமப்பட்டால் அறிவு வருதா பார்க்கலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை