உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மாற்றுத்திறனாளிகளுக்கு ரோல் மாடல் பெண்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரோல் மாடல் பெண்

அனைத்து துறைகளிலும், சாதனை படைத்தவர்கள் இருப்பர். அவர்களை தங்களின் 'ரோல் மாடலாக' நினைத்து பலரும் சாதனை படைத்து வருகின்றனர்.இந்த வகையில், பெங்களூரை சேர்ந்த மாலதி கிருஷ்ணமூர்த்தி ஹொல்லாவும் ஒருவர். 1958 ஜூலை 6ல் பிறந்தார். இவரது தந்தை சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார். தாய், குழந்தைகளை கவனித்து வந்தார். 3 வயது இருக்கும் போது மாலதி கிருஷ்ணமூர்த்தி, போலியாவால் பாதிக்கப்பட்டார்.அப்போதே, தமிழகத்தின் சென்னையில் உள்ள எலும்பு முறிவு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கால்களின் எலும்பை சரி செய்ய, 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அத்துடன் அவருக்கு, மின்சார ஷாக் சிகிச்சை முறை அளிக்கப்பட்டால், இடுப்புக்கு மேல்பகுதியை அவரால் அசைக்க முடிந்தது. ஆனால், கீழ்பகுதி செயல்படவில்லை.

துயரம்

அந்த மையத்தில் 15 ஆண்டுகளாக இருந்த மாலதி கிருஷ்ணமூர்த்தி, தன்னை போன்று மாற்றுத்திறனாளி மாணவர்கள் படும் துயரத்தை கண்டு வேதனை அடைந்தார். இதை மாற்ற வேண்டும் என்று எண்ணினார். மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டு போட்டிகளை பார்த்து ரசித்தார். விளையாட்டு போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்த முடிவு செய்தார்.இதற்கு அவரின் தந்தை உறுதுணையாக இருந்தார். மகளின் மன உறுதி, தைரியம், நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று தந்தை நினைத்தார்.பள்ளி காலத்தில், வீல் சேர் விளையாட்டு குறித்து கேள்விப்பட்டார். அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.சென்னையில் 15 ஆண்டுகள் மையத்தில் இருந்த மாலதி, குடும்பத்துடன் பெங்களூரு வந்தார். ஆனால் இச்சமூகம், மாற்றுத் திறனாளிகளை ஒதுக்குவதை வெறுத்தார். இருந்தாலும் தன்னுள் இருந்த விளையாட்டு ஆசைக்காக, தயாரானார்.

வீல் சேர்

தேசிய, சர்வதேச அளவில் வீல் சேர் ஓட்டப்பந்தயத்தில் 38 தங்கம், 27 வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை அள்ளினார். பெரும்பாலான போட்டிகளில், வாடகை வீல் சேரை தான் பயன்படுத்தினார். 56 வயது வரை, 'வீல்சேரில் வேகமாக ஓடும் பெண் வீராங்கனை' என்ற பட்டத்தை வென்றார். நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி வீரர் - வீராங்கனைகளுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.சியோல், பார்சிலோனா, ஏதென்ஸ், பெய்ஜிங்கில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும்; பெய்ஜிங், பாங்காக், தென் கொரியா, கோலாலம்பூரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, பதக்கங்களை பெற்றார்.சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்றார்.

அமைப்பு

சிண்டிகேட் வங்கியில் மேலாளராக பணியாற்றிய மாலதி கிருஷ்ணமூர்த்தி, மாற்றுத்திறனாளிகளுக்காக 2002ல் 'மாத்ரு பவுண்டேஷன்' என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த பவுண்டேஷன், மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பெங்களூரு அத்திப்பள்ளி சர்ஜாபூர் சாலையில் மாத்ரு பவுண்டேஷன் அமைந்து உள்ளது. மேலும் விபரங்களுக்கு 98800 80133, 98860 15552 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தற்போது 66 வயதாகும் அவர், மற்றவர்களுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். இவரின் செயலை பாராட்டி, மத்திய அரசு, 'அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்துள்ளது. 2009ல் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகமான, 'ஏ டிபரென்ட் ஸ்பிரிட்' புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:நான் சிறுமியாக இருந்தபோது, மாங்காய் தோட்டத்தில் கீழே விழுந்துள்ள மாம்பழங்களை நண்பர்களுடன் ஓடிச்சென்று எடுக்க வேண்டும்; ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், நான் வளர்ந்த பின்னர் தான், கால் இருந்தால் ஓட முடியும், சிறகு இருந்தால் பறக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். அப்போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனாலும் மனம் தளரவில்லை. ஒருநாள் என்னால் ஓட முடியும் என நினைத்தேன். எனவே தான் விளையாட்டு துறையை தேர்வு செய்தேன். வாழ்க்கையில் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் வித்தியாசமானவர்கள் தான். ஆனாலும், மற்றவர்களை விட எங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை