இவர்கள் ஆபத்தானவர்கள்! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில், குஜராத் கலவரத்தில் ஹிந்துக்களை வன்முறையாளர்கள் போல் சித்தரித்துள்ளனர். ஆனால், அதற்கு மூல காரணமாக இருந்த விஷயம் குறித்து பேசவில்லை. இதுதான் இந்நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு. நேற்று முளைத்த அரசியல்வாதிகள் கூட, இஸ்லாமியர் ஓட்டுக்காக, குஜராத் கலவரம் குறித்து உருக்கமாக பேசுவர்; ஆனால், அந்நிகழ்வுக்கு காரணமாக இருந்த சம்பவத்தை மறந்தும் பேச மாட்டார்கள். சபர்மதி ரயிலில், அயோத்தியில் இருந்து அகமதாபாத் திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்களை, கோத்ரா ரயில் நிலையம் அருகே, வன்முறை கும்பல் ரயிலை நிறுத்தி, பெட்டிகளில் கற்களை வீசி தாக்கியதுடன், கரசேவகர்கள் தப்பிவிடாமல் இருக்க வெளியே கதவுகளை பூட்டி, நான்கு பெட்டிகளுக்கு தீ வைத்தனர். இதில், பெண்கள் - 27, குழந்தைகள் - 10 பேர் உட்பட, 59 பேர் உடல் கருகி இறந்தனர்; 48 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர நிகழ்வு குறித்து எவரும் வாய் திறப்பதில்லை. ஹிந்துக்கள் உயிர் என்றால் அவ்வளவு மலிவு!எம்புரான் திரைப்படமும், குஜராத் கலவரம் குறித்து கூறுகிறது; ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டதை பேசவில்லை. அத்துடன், பெரியாறு அணை குறித்தும் இப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறப்பட்டுள்ளன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், சிலர் உண்மைக்கு புறம்பான விஷயங்களை திரைப்படங்களில் திணிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய திரைப்படங்களை தயாரிப்போர், அவர்களது பின்புலம், நிதி உதவி செய்தவர்கள் போன்ற விபரங்களை ஆராய்ந்தாலே தெரிந்துவிடும், அவர்களின் உண்மையான நோக்கம்!இவர்களில் பெரும்பாலானோர் தேசத்தின் ஒற்றுமையை, முன்னேற்றத்தை, சமூக நல்லிணக்கத்தை விரும்பாத, பிரிவினைவாதத்தை துாண்டிவிடுபவராக இருப்பர். இத்தகையோரை மத்திய அரசு தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது அவசியம். ஏனெனில், கண்ணுக்குத் தெரியும் எதிரிகளை விட, உடன் இருந்து குழிபறிக்கும் எதிரிகள் மிக ஆபத்தானவர்கள்!ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திருத்தம் வக்ப் அமைப்பை முடக்கிவிடும். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்தை ஏற்கமாட்டோம்' என்று, தீர்மானம் நிறைவேற்றியுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின். வக்ப் வாரியம் மற்றும் சட்டத்திருத்தம் குறித்து எந்த புரிதலும் இல்லாத மற்ற கட்சிகளும், கண்ணை மூடி இத்தீர்மானத்தை ஆதரித்துஉள்ளன.வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதில் முறைகேடுகளைத் தவிர்த்து, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கத்தில்தான் இச்சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது, மத்திய அரசு. நேர்மையான எந்த இஸ்லாமியரும் இதை மறுக்கமாட்டர். அதேநேரம், சட்டத்திருத்தத்தின் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ராணுவம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக, அதிக நிலப்பரப்பைக் கையகப்படுத்தியிருப்பது, முஸ்லிம்களின் வக்ப் வாரியம்தான்!இது, 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 9.4 லட்சம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வக்ப் வாரிய சட்டப்பிரிவு எண்: 40 வழங்கியிருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வாரிய தலைவர்கள் நிலங்களை முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்வதாக, இஸ்லாமியர் மற்றும் பிற மதத்தவரிடம் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 566 புகார்கள் மத்திய அரசின் சிறுபான்மை நல அமைச்சகத்திடம் சென்று உள்ளன.அதுபோல், வக்ப் வாரிய நடுவர் தீர்ப்பாயத்திடம் கொடுக்கப்பட்ட, 40,951 புகார்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 9,942 வழக்குகள் இஸ்லாமியர்களால் தொடுக்கப்பட்டவை!மத்திய அரசின் இச்சட்டத்திருத்தம் ஏன் என்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா... சவுதி அரேபியா, ஓமன், பாகிஸ்தான், துருக்கி, குவைத், எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் முறைகேடுகளைத் தடுக்க, அந்தந்த அரசுகளே நேரடியாக வக்ப் வாரியங்களை நிர்வகிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால்தான், வெளிநாடுகளிலிருந்து கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறுவது தடுக்கப்பட்டது. முஸ்லிம்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கும் முதல்வர், தமிழகத்தில் கோடி கோடியாக வருமானம் ஈட்டும் ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்களை மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏன்? ஒரு கண்ணில் மட்டும் சுண்ணாம்பு ஏன்?இது சரியா முதல்வரே?தேவ்.பாண்டே, செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 'அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டம் இயற்றப்படும்' என்று உறுதி அளித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். பொருளாதாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பில், மத்திய - மாநில அரசுகள் இடஒதுக்கீடு அளித்து வருகின்றன. இதன் வாயிலாக, சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் முன்னேற வழி கிடைக்கிறது. இந்நிலையில், பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தினால், பணி மூப்பு அடிப்படையில் உயர் பதவிக்கு காத்திருப்போர் பாதிக்கப்படுவர். இது, பிற சமூகத்தினருக்கு அரசு செய்யும் துரோகமாக அமைந்துவிடும்.இந்தியாவில் வேலை வாய்ப்பும், உரிய அங்கீகாரமும் கிடைக்காததால், பிற சமூக இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளை தேடிச் செல்கின்றனர். அங்கு, தங்கள் திறமையால், முத்திரை பதிப்பதுடன், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருக்கின்றனர்.இங்கு என்ன நிகழ்கிறது... எல்லாவற்றிலும் இடஒதுக்கீடு... பட்டியல் இனம், பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு தேவைதான்; எவரும் அதை மறுக்கவில்லை. அதேநேரம், இடஒதுக்கீடு வாயிலாக அரசு பதவிகளில் அமர்வோர், தங்கள் திறமை மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு பெற வேண்டுமே தவிர, அவற்றிலும் இடஒதுக்கீடு என்பது எப்படி சரியாகும்? இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கும் முறையை கொண்டு வந்தால், ஊழியர்களிடையே பணியில் ஒத்துழையாமையும், வெறுப்புணர்வும் உண்டாகும். அரசு நிர்வாகத்தில் உழைப்புக்கும், திறமைக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். இதனால், அரசு நிர்வாகம் சரிவர நடைபெறாது என்பதை முதல்வர் உணர வேண்டும்!