உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அலற வைக்குதே அக்கறை!

அலற வைக்குதே அக்கறை!

எஸ்.ஆர்.அம்பேத்கர்தாசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'ஏழைகள், தலித் மற்றும் சமூக நீதிக்காக எப்போதும் ஆதரவாக இருப்பதால், பா.ஜ., என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. சமூக, பொருளாதார ரீதியாக, ஏழைகள் முன்னேறக் கூடாது என்பதே பா.ஜ.,வின் விருப்பம்' என்ற ஒரு வெடிகுண்டை, பா.ஜ.,வை நோக்கி வீசி இருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.சில நாட்களுக்கு முன், கர்நாடக கவர்னர், இவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது முதலே, இவருக்கு, சமூக அக்கறை நொடிக்கு நொடி பீறிட்டு கிளம்பிக் கொண்டிருக்கிறது.ஏழைகள், தலித் மற்றும் சமூக நீதிக்கு, இவர் எப்போதும் ஆதரவாக இருப்பதால், பா.ஜ., இவர் மீது குற்றம் சுமத்துகிறதாம். சமூக, பொருளாதார ரீதியாக, ஏழைகள் முன்னேறக் கூடாது என்பதே பா.ஜ.,வின் விருப்பமாம்.இவருடைய பார்வையில், ஏழை, தலித் ஆகியோர் வரிசையில் முதலாவதாக நிற்பது, இவர் மனைவி தான்.தேர்தலில் போட்டியிட, 'டிபாசிட்' கட்டவே, கட்சித் தொண்டர்கள் உண்டியல் குலுக்கியோ, உண்டியல் குலுக்காமல் வருவோர், போவோரிடம் கை நீட்டி பிச்சை எடுத்தோ தான் வசூலித்து கொடுத்தனர் என்று, சிரிக்காமல் 'புருடா' விட்டவர், மனைவியின் பெயரில் எப்படி 14 வீட்டு மனைகள் ஒதுக்கி கொடுக்க ஆதரவளித்தார்?ஏனெனில் அவர் மனைவி மட்டும் தான், அவரது பார்வையில் ஏழை மற்றும் தலித்.இவரது மடியில் கனம் இல்லையானால், அந்த மனை ஒதுக்கீட்டு புகாரை எதிர்கொண்டு, தான் குற்றமற்றவர் என நிரூபிக்க முயலலாமே! எதற்காக கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்? ஜாதி ஜனங்களை திரட்டி ஊர்வலம் நடத்தி, கவர்னரையும், நீதித்துறையையும், விசாரணை அமைப்புகளையும், மத்திய அரசையும், பா.ஜ.,வையும் மிரட்ட முயல வேண்டும்?பா.ஜ., தொடர்ந்து கடந்த 10 ஆண்டு களாகத் தான் மத்திய ஆட்சியில் அமர்ந்து உள்ளது.ஆனால், இவர் சார்ந்திருக்கும் காங்., கட்சி தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சிக் கட்டிலில் குந்தியிருந்து கோலோச்சி இருக்கிறதே?அந்த 50 ஆண்டுகால ஆட்சியில், சமூக, பொருளாதார ரீதியாக, எத்தனை ஏழைகள் மற்றும் தலித்களை - மல்லிகார்ஜுன கார்கே நீங்கலாக - முன்னேற்றி இருக்கிறீர்கள் என்று ஒரு 'லிஸ்ட்' போட்டு பகிரங்கமாக வெளியிடலாமே சித்து?சமூக, பொருளாதார ரீதியாக, ஏழைகள் முன்னேறக் கூடாது என்பது பா.ஜ.வின் விருப்பமல்ல; அது நீங்கள் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் விருப்பம் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!அடடடா... அலற வைக்கிறது உங்கள் சமூக பொருளாதார அக்கறை!

பதில் வேண்டும்!

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், தமிழக திரைஉலக பிரபலங்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக பண்ணிய அழிச்சாட்டியம் கொஞ்சமா!குறிப்பாக நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் கோவில் குறித்து விமர்சனம் பண்ணி, 'சமூக அக்கறையை' உலகறிய வைத்தார். மனைவி எட்டடி பாய்ந்தால் கணவரான நடிகர் சூர்யா, 'நீட்' தேர்வு பற்றி பல முறையும், மத்திய கல்வி கொள்கைக்கு எதிராகவும் பேசினார்.விடியல் ஆட்சி அவலத்தை விமர்சனம் பண்ணினால் என்ன நடக்கும் என உணர்ந்த ஜோதிகா - சூர்யா, வாழ்விடத்தை தமிழகத்தை விட்டு மும்பைக்கு மாற்றினர்.சமூக அவலத்தை எதிர்த்த சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க, வெளி நாட்டு நடிகர்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்ததும், சுற்றுலாத்தல விடுதிகளில் தங்க வைக்க, சட்டபூர்வமாக காவல் துறைக்கு தெரிவிக்காமல் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.சினிமா நடிகர் என்று தகுதியை வைத்து வேஷம் போடும் போலி போராளியா சூர்யா? பதில் வேண்டும்!

முதல்வரின் தனிப்பிரிவு எதற்கு?

கே.ஜான்லெஸ்லி, கோவையில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் தனிப்பிரிவு என்பது போஸ்ட் ஆபீஸ் போல் செயல்படுகிறது. பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதுடன் சரி... நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதா என்று சரிபார்ப்பதில்லை. சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெறப்படும் பதில்களை வைத்து கோப்புகள் முடிக்கப்படுகின்றன.முதல்வரிடமே மனு கொடுப்பது போல் நினைத்து தான் தனிப்பிரிவில் மனு கொடுக்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான, முழு தகவல்களையே மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று பலமுறை முதல்வர், அரசு அலுவலர்களுக்கு கண்டிப்பான அறிவுரை வழங்கிஉள்ளார். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழிலும் பலமுறை செய்தி வந்துஉள்ளது. உதாரணமாக, கோவை வீட்டு வசதி வாரியத்தில், 2005ல் வாங்கப்பட்ட வீட்டிற்கு இன்னமும் சரியான இறுதி விலை நிர்ணயம் செய்து அறிவிக்கவில்லை. இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தேன். மனு, வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அவரிடமிருந்து நடவடிக்கையும் இல்லை; பதிலும் வரவில்லை. எனவே, இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு புகார் அளித்தேன். அப்போது, 'மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதோடு சரி, வேறு எதுவும் செய்ய முடியாது' என்று கூறப்பட்டது. வீ.வ.வாரிய மேலாண்மை இயக்குனரை, முதல்வர் தனிப்பிரிவு அலுவலரும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் சாதாரண பொதுமக்கள் யாரிடம் செல்வது?ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் செல்ல முடியுமா? அப்படி ஒரு நிலை உருவாகும் பட்சத்தில் முதல்வரின் தனிப்பிரிவு எதற்கு என்று கேள்வி எழுகிறது.

சட்டம் இருக்கிறது ஆனால் உயிருடன் இல்லை!

சு.வாசன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: கோல்கட்டா பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை, கற்பனைக்கெட்டாதது. பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினால், வன்முறை தான் மிஞ்சும். நம் நாட்டில் சட்டங்களுக்கா பஞ்சம்? பின், ஏன் இந்த நிலை? சிங்கப்பூர் பிரதமரிடம், 'எப்படி உங்கள் நாட்டில் சட்ட - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது?' என்று கேட்டபோது, 'எல்லா நாட்டிலும் சட்டம் இருக்கிறது; ஆனால் எங்கள் நாட்டில், உயிரோடு இருக்கிறது' என்றார். நம் நாட்டிலும் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன; ஆனால், சதிகாரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அவரவருக்கு வந்தது அவரவருக்கு என்ற நிலை தொடர்ந்தால், மீண்டும் மீண்டும் அவலங்கள் நிகழத்தான் செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 24, 2024 17:05

நம் நாட்டில் சட்டம் இல்லையென்று யார் சொன்னது? பிக் பாக்கெட், traffic violation எல்லாவற்றுக்கும் , ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் தண்டனை கொடுக்குமளவு வீரியத்துடன் இருக்கிறது அரசியல் வாதி, ஆளும் கட்சி என்றால் கோமாவுக்குப் போய்விடுகிறது அவ்வளவுதான்


VENKATASUBRAMANIAN
ஆக 24, 2024 08:42

சூர்யா ஒரு சந்தர்ப்பவாதி. இப்போது பேசமாட்டார்கள். பேசினால் என்ன நடக்கும் என்று தெரியும். இவர் போன்று நிறைய பேர் உள்ளனர். உதாரணமாக சித்தார்த் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள்.


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 07:38

அம்பேத்கர்தாசன் அவர்களே , சித்துவின் அருகில் அமர்ந்து இருப்பவனின் மகன் , பெண்களுக்கு அரசு வேலை வேண்டுமென்றால் ஒரு நாள் இரவு அந்த பெண் அரசியல்வாதியின் படுக்கையில் இருந்து காலையில் வேலை வாங்கிவிடுவாள் என்று கூறியவர், அவனை போன்றா காங்கிரஸ் வாதிக்கு தான் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது காங்கிரஸ் , அப்படியென்றால் அவனது கூற்று பாதிதான் காங்கிரஸ் அரசில் பல பெண்கள் அரசு வேளையில் சேர்ந்துள்ளார்களா?


சமீபத்திய செய்தி