வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த ‘அரசியல் பிரவேசம்’ எத்தனை risk ஆனது என்று தெரிந்துதான் 40 வருஷமாக ‘இதோ வரார், அதோ வரார்’ என்று போக்குக்காட்டிவிட்டு, ஒதுங்கிக்கொண்டார் ரஜினி சரத்குமார், கமல், பாக்யராஜ் இந்த வருகைக்கு மறறொரு இணைப்பு
என். நக்கீரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க., தனித்துப் போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது ஒன்றும் புத்திசாலித்தனமான முடிவாகத் தெரியவில்லை.அ.தி.மு.க.,வை துவக்கிய எம்.ஜி.ஆர்., கூட, முதன்முதலில் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடத் துணியவில்லை; இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து தான் ஆட்சியைப் பிடித்தார்.மக்கள் செல்வாக்கு மிகுந்திருந்த எம்.ஜி.ஆரே எடுத்த எடுப்பில் தனித்துப் போட்டியிடவில்லை. பின்னாளில் ஜெயலலிதாமட்டுமே சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்தார்.அண்ணாதுரை, தி.மு.க., என்ற கட்சியை துவக்கி, முதன்முதலில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட போது, தி.மு.க., வெறும், 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோன்று, நடிகர் விஜயகாந்த், தே.மு.தி.க., கட்சியை துவங்கி, தனித்துப் போட்டியிட்டபோது, அவர் மட்டுமே வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில், ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதால்தான், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையே அவரால் பெற முடிந்தது. சிவாஜி கணேசன் மிகப் பெரிய நடிகர்; தன் ரசிகர்களை நம்பி, எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியுடன் கூட்டணி வைத்து, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்; ஆனால், ஓர் இடத்தில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை.கமல்ஹாசனோ, அரசியலில் செல்லாக்காசாக போய் விட்டார். விஜய், பெரிய நடிகர் தான்; அதேநேரம், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர் இல்லை. தற்போதைய அரசியல் கள நிலவரப்படி, விஜய், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டாலும், ஆட்சியைப் பிடிக்கும் அவரது எண்ணம் நிச்சயம் நிறைவேற வாய்ப்பில்லை. அத்துடன், அவரது அரசியல் செயல்பாடுகள், கட்சி துவங்கி காணாமல் போன நடிகர்களின் வரிசையில், அவரையும் இணைத்தாலும் ஆச்சரியம் இல்லை.ஜெயலலிதாவுடன் சினிமா நட்சத்திரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் வரலாறு முற்றுப் பெற்று விட்டது என்பதை, வரும் சட்டசபை தேர்தல் விஜய்க்குஉணர்த்தும்! முதலைக்கண்ணீ ர் வடிக்கும் உலக நாடுகள்!
சொ.முத்துசாமி,
நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்கா -உக்ரைன்
அதிபர்கள் இடையே நடந்த தீப்பொறி பறந்த வாக்குவாதத்தை, 'தினமலர்' நாளிதழில்
படித்தபோது, ஒரு விஷயம் மிகத் தெளிவாகப் புரிந்தது.தான் பதவியில்
நீடிக்க உக்ரைன் போர் தொடர்வதை விரும்புகிறார், ஜெலன்ஸ்கி; தன் பதவியைக்
காப்பாற்றிக் கொள்ள உக்ரைன் போரைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார், ரஷ்ய
அதிபர் புடின். அவரது நோக்கம் உக்ரைனின் மேற்கு பகுதியில்
கிடைக்கும் அபரிமிதமான கனிம வளம். அதனால் தான், போரின் ஆரம்பத்தில் இருந்தே
உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிக கவனம் செலுத்தி, அதில் வெற்றியும்
பெற்றார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், உடனடியாக போர் நிற்க வேண்டும்
என்று துடிப்பதற்கு காரணம், உக்ரைன் மக்கள் மீதான கரிசனம் அல்ல; உக்ரைன்
கனிம வளத்தின் மீதான பாசம்!அவர் முதலில் வியாபாரி; பிறகுதான் அரசியல்வாதி. போட்ட பணத்தை விரைவாக எடுப்பதில் தான் டிரம்ப் குறியாக இருப்பார்; இருக்கிறார்!'ஐரோப்பாவின் ஆதரவு' என்பது வெறும் வாய் வார்த்தை தான் என்பதை ஐரோப்பிய உலகமே அறியும்!எனவே, பேச்சு, காரசார மாகத் திரும்பியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. உக்ரைன் விஷயத்தில், எல்லாருமே உள்நோக்கத்துடனே அந்நாட்டிற்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர்.சொந்தக்
காலில் நிற்காத தனிமனிதனோ, இயக்கமோ, சமுதாயமோ, நாடோ, தன்னைவிட
வலிமையானவர்கள் சொல்வதைக் கேட்டு அடிபணிய வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய
உதாரணம், ஜெலன்ஸ்கி!இதில், உண்மையில் பாதிக்கப்படுவோர் உக்ரைன் மக்கள்தான்!ஒரு
நாட்டிற்கு திறமையான தலைமை இல்லை என்றால், அந்த நாடு, யார் எதைச்
சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். இதனால், அதிகம் பாதிக்கப்படுவது
அந்நாட்டு மக்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது உக்ரைன்
போர்!வலுத்தவன் கை உயர்வதும், இளைத்தவன் கை தாழ்வதும் தனிமனிதனுக்கு மட்டுமல்ல; நாட்டிற்கும் பொருந்தும்! விட்டில் பூச்சிகளாகும் நடிகர்கள்!
மு.நெல்லை குரலோன், தென்காசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில் நடிகர் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு, கடந்த சில நாட்களாக வரும் பத்திரிகை செய்திகள் ஒரு தொய்வை ஏற்படுத்தியுள்ளன. த.வெ.க.,வின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்கு, அவசரமாய் மறுப்பு வெளியிட வேண்டிய பரிதாப நிலைமைக்கு, கட்சி தள்ளப் பட்டுள்ளது. அத்துடன், மும்மொழி கொள்கை தொடர்பான கையெழுத்து இயக்கத்திற்கு வைக்கப்பட்ட பேனரில், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்ததையும் அறியும்போது, விஜயின், 'குட் புக்'கில்இருக்கும் முக்கியமானவர்கள் மட்டுமல்ல, கட்சியின் வியூக வகுப்பாளரே, ஆளுங்கட்சியின், 'ஸ்லீப்பர் செல்'லாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.கடுமையான உழைப்பால், திரையுலகில் தங்களுக்கென இடம்பிடித்து வெற்றி கண்ட விஜய் போன்றோர், சினிமா வாயிலாக தங்களுக்கு கிடைத்த பிரபலத்தை நம்பி, கட்சி ஆரம்பித்து, புகழ், மரியாதை, பணம் என எல்லாவற்றையும் இழந்து, கடைசியில், வந்த திசை தெரியாமல், காணாமல் போய்விடுகின்றனர். 'அஸ்திவாரம் தோண்டியும், கட்டடம் எழும்ப வில்லையென்றால், பள்ளம் தோண்டிய பழி வந்துசேரும்' என்பது போல், அரசியல் நுட்பம் தெரியாமல், தங்களுக்கு இருக்கும் புகழை மட்டுமே நம்பி கட்சி துவங்கி, தங்களையும், இந்த சமூகத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் சினிமா ஜாம்பவான்களுக்கு ஒரு வேண்டுகோள்...பணம், புகழை வாரி வழங்கிய இம்மக்களுக்கு பிராயச்சித்தமாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற துடிப்பு உங்களை ஆட்டிப்படைத்தால், அதற்கு கட்சிதான் ஆரம்பிக்க வேண்டும் என்று இல்லை...உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, கல்வி, சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல் என ஏதாவது ஒரு சமூகநலன் சார்ந்த காரியத்தை செய்யுங்கள். இதன் வாயிலாக, உங்கள் புகழ் மேலும் சிறந்தோங்கும். அதை விடுத்து, கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில், விளக்கில் வீழ்ந்த விட்டில் பூச்சிகளாய் மாறி விடாதீர்கள்!
இந்த ‘அரசியல் பிரவேசம்’ எத்தனை risk ஆனது என்று தெரிந்துதான் 40 வருஷமாக ‘இதோ வரார், அதோ வரார்’ என்று போக்குக்காட்டிவிட்டு, ஒதுங்கிக்கொண்டார் ரஜினி சரத்குமார், கமல், பாக்யராஜ் இந்த வருகைக்கு மறறொரு இணைப்பு