ஏ.எஸ்.ஆதித்யா, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் வியூக நிபுணர் பிராசாந்த் கிஷோர், த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க., தலைமையுடனும் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில், 300 கோடி ரூபாயை கட்டணமாக பெற்று, வெற்றி பெறச்செய்த தி.மு.க., என்ற தன் 'கஸ்டமரை' தோற்கடிப்பதற்காக, தற்போது, எதிரணியிடம் சில நுாறு கோடிகளைப்பெற்று, ஆலோசனை வழங்கப்போகிறார், இந்த அரசியல் வியாபாரி. இவரது வழிகாட்டுதலால் வெற்றி பெற்ற தி.மு.க., கடந்த தேர்தலில் அவரிடம் இருந்து அனைத்து தில்லுமுல்லுகளையும் கற்றுத் தேர்ந்து விட்டதால், மீண்டும் அவரை நாட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மாற்றுக்கட்சியினர் ஆட்சியிலிருக்கும்போது மக்கள் சந்தித்த பிரச்னைகள், நிறைவேற்றப்படாத திட்டங்கள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பட்டியலிட வேண்டும்; அவை அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவதாக துணிந்து வாக்குறுதி அளிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தபின், கொடுத்த வாக்குறுதிகளில் எளிதில் சாத்தியமுள்ளவற்றை நிறைவேற்றிவிட்டு, நிறைவேற்றவே முடியாதவற்றை அடுத்த தேர்தல் வரை இழுத்தடிக்க வேண்டும். பணத்தையும், இலவசங்களையும் காட்டி ஏமாளி வாக்காளர்களின் வாயை அடைக்க வேண்டும். இதுதான் தேர்தல் வியூக டியூஷன் மாஸ்டர் பிரசாந்த் கிஷோர் கற்றுக் கொடுக்கும் பாடம்.பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, விஞ்ஞானப்பூர்வமாக மக்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளான இரு திராவிடக் கட்சிகளுக்கும் ஆலோசனை வழங்க, பீஹாரிலிருந்து ஒருவர் வரவேண்டுமா என்ன!தேர்தல் வியூகம் எனும் பெயரில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை கூறி, மக்களை முட்டாளாக்கும் இவரின் உண்மை முகத்தை தெரிந்து தான், சொந்த மாநிலமான பீஹார் மக்களே அவருக்கு ஓட்டளிக்கவில்லை. உள்ளூரில் விலைபோகாத சரக்கு, இந்த முறையும் அயலுாரில் விற்பனை ஆகுமா என்பது, வரும் தேர்தலில் தெரிந்துவிடும்! முரண்பாடுகளின் மொத்த உருவம்!
த.யாபேத்தாசன்,
பேய்க்குளம்,துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்தாண்டு
நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து
விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது தான், 'இண்டியா' கூட்டணி. இதில்,
நாட்டின் பெரும்பாலான கட்சிகள் இணைந்தாலும், அவர்களால், பா.ஜ., வெற்றியை
தடுக்க முடியவில்லை.அதேநேரம், கடந்த 2014, 2019 போல் பா.ஜ.,
தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் தடுத்தது; காங்கிரசுக்கு எதிர்க்கட்சி
தலைவர் பதவி கிடைத்தது தான், கூட்டணியால் காங்., பெற்ற நன்மைகள்!தற்போது,
இண்டியா கூட்டணி அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிக்
கிடக்கிறது. பார்லிமென்ட் தேர்தலுக்கு பின் நடைபெற்ற ஹரியானா சட்டசபை
தேர்தலில் ஆம் ஆத்மியை, காங்., கழற்றி விட்டது. விளைவு, பா.ஜ., மூன்றாவது
முறையாக அங்கே ஆட்சி அமைத்தது.காங்., தனக்கு செல்வாக்கு இருக்கும்
மாநிலங்களில், கூட்டணி கட்சியினரை ஒதுக்கி தனித்து களம் காண்கிறது.
அதேபோல், மாநில கட்சிகளும் வலுவாக இருந்தால்காங்.,கை ஒதுக்கி விடுகின்றன. இதனால்
தான், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, 'பார்லிமென்ட்
தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி அமைக்கப்பட்ட தால், அக்கூட்டணியை
கலைத்து விடுவது நல்லது' என்று கூறியுள்ளார்.தேசிய கட்சிகளின்
சரிவில் தான், மாநில கட்சிகள் தங்களை வலுவாக்கி கொள்கின்றன. டில்லி,
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் காங்கிரசை வீழ்த்திதான், ஆம் ஆத்மி ஆட்சிக்கு
வந்தது; ஏன், தமிழகத்தில் கூட காங்.,கை வீழத்தி தான் தி.மு.க., ஆட்சியைப்
பிடித்தது.எனவே, இண்டியா கூட்டணி என்பது முரண்பாடுகளின் மொத்த
கலவை. இனி, 2029 பார்லி மென்ட் தேர்தல் நெருங்கும் சமயம், மீண்டும் ஒரு
போலி ஒற்றுமை பிம்பம் கட்டமைக்கப்படும். மக்களாகிய நாம் அனைவரும் அதை
கண்டு ரசிக்கத்தான் போகிறோம்! மாசு நிறைந்தவரா எம்.ஜி.ஆர்.,?
ம.செ.கவிதைக்
கண்ணன், ஆணையூர், மதுரை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்.,
பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த மாதம், 17 ம் தேதி, அ.தி.மு.க., வினர்
எம்.ஜி.ஆரை வாழ்த்தி போஸ்டர்கள் அடித்து மதுரையில் ஒட்டியிருந்தனர். அதில்,
மதுரை முன்னாள் சட்டசபை உறுப்பினர் சரவணன் அடித்திருந்த வாழ்த்து
சுவரொட்டியில், 'மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ
வேண்டும்; ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்'
என்ற வாசகத்தில், 'மாற்றுக்குறையாத' என்ற வரிகளுக்கு பதில், 'மாசு குறையாத'
என்ற வார்த்தைகள் இடம்பெற்று, மதுரை மாநகரம் முழுதும் ஒட்டப்பட்டிருந்தது.
மாசு என்றால் அழுக்கு, குற்றம்; 'மாசு குறையாத மன்னவன்' என்றால்,அழுக்கு நிறைந்தவர், குற்றம் மிகுந்தவர் என்று அர்த்தம். சங்கம்
வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், மாற்றுக்கும், மாசுக்கும்
வித்தியாசம் தெரியாத அறிவீலிகளால், மாற்றுக் குறையாத எம்.ஜி.ஆர்., மாசு
நிறைந்தவராக ஆக்கப்பட்டுள்ளார். தவறாக ஒருவர் எழுதியிருந்தால், அதை திருத்த
அக்கட்சியில் எவரும் இல்லையா? போஸ்டருக்கு விதவிதமாக போஸ் கொடுக்க தெரிந்தவர்களுக்கு, இந்த பிழை எப்படி கண்ணில் படாமல் போனது? சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்!
ரா.சாந்தகுமார்,
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத் தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், மரியாதை
நிமித்தமாக தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர். அவர்களிடையே பேசிய தமிழக
முதல்வர், 'அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதை உறுதிசெய்ய
வேண்டும்; அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்ய வேண்டும்' என
அறிவுறுத்தியுள்ளார்.மேலும், 'எங்கள் மாவட்ட கலெக்டர் சிறந்தவர்'
என மக்கள் பாராட்டும்படி பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு, மாவட்ட
காவல் துறை கண்காணிப்பாளருடன் இணைந்து, சட்டம் - ஒழுங்கை பராமரிக்க
வேண்டும் எனவும் கூறியுள்ளார்.கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள்
சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அவர்களை சுதந்திரமாக செயல்பட
அனுமதிக்க வேண்டும். நிர்வாகத்தில் ஆளுங்கட்சி தலையீடு எல்லா ஆட்சியில்
இருந்தாலும், தி.மு.க., ஆட்சியில் கூடுதலாக உள்ளது.இதை தடுத்து நிறுத்தினால் மட்டுமே மக்கள் பாராட்டும் வகையில், கலெக்டர்களால் சிறப்பாக பணியாற்ற முடியும்.கடந்த
நான்கு ஆண்டுகளில் அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருப்பினும், இனி, எப்படி
ஆட்சி செய்கின்றனர் என்பதைப் பொறுத்தே, 2026 சட்டசபை தேர்தலில்
எதிரொலிக்கும்.இதை முதல்வர் உணர்ந்து, மக்கள் நலனை மட்டுமே
கருத்தில் கொண்டு, எவ்வித அழுத்தங்களும் தராமல் அதிகாரிகளை சுதந்திரமாக
செயல்பட அனுமதிக்க வேண்டும்!