உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஊர்க்குருவி பருந்தாகாது!

ஊர்க்குருவி பருந்தாகாது!

க.அருச்சுனன்,செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காமராஜர், 'ஏசி' இல்லாமல் துாங்கமாட்டார். அதற்கான வசதிகளை செய்து கொடுத்தவர் கருணாநிதி' என்று பேசியுள்ளார், தி.மு.க., துணை பொதுச்செயலர் சிவா. காமராஜர் எத்தகைய கொள்கையாளர் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு தி.மு.க.,வினர் பேச வேண்டும். காமராஜர் முதல்வர் ஆனவுடன், சைரன் ஒலியுடன், அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது, அதை தடுத்து, 'நான் உயிரோடுதானே இருக்கேன்... அதற்குள் ஏன் சங்கு ஊதுறீங்க?' எனக் கேட்டு, தன் பின் கார்கள் புடைசூழ வருவதற்கு தடை விதித்த பண்பாளர். சுற்றுப்பயணத்தின் போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படும் தியாகிகளுக்கு கொடுங்க' என்று கூறி வாங்க மறுக்கும் நேர்மையாளர். ஒருமுறை காமராஜர் ரஷ்யா செல்ல வேண்டி இருந்தது. உடனே தொண்டர்கள், அவர், 'கோட் - சூட்'டுடன் செல்ல வேண்டும் என விரும்பி, அதை தைத்தும் வைத்தனர். 'வேட்டி - சட்டையில் தான் செல்வேன்' என்று கூறி, அந்த ஆடையை அணிய மறுத்து விட்டார். இன்றும் அவர் நினைவகத்தில், தொண்டர்கள் அவருக்கு அளித்த கோட் - சூட் காட்சி பொருளாக உள்ளன. அதேபோன்று, 'காங்., மூத்த தலைவர்கள் அரசு பதவிகளில் இருந்து விலகி, கட்சி பணியாற்ற வேண்டும்' என்று சொல்லி, அதை செயல்படுத்தும் விதமாக, முதல்வர் பதவியை துறந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். மேலும், அக்காலத்தில், காமராஜர் கோடை காலத்தில் இரண்டு நாட்கள் குற்றாலத்தில் தங்கி வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமான நாட்கள் அவை தான்! அப்படி ஒருசமயம் குற்றாலத்தில் தங்கிய போது, திடீரென மின் தடை ஏற்பட்டது. காவலாளியை அழைத்து, கட்டிலை வெளியில் உள்ள மரத்தடியில் போடச் சொல்லி துாங்கப் போனா ர். அப்போது, காவலுக்கு போலீஸ்காரர் ஒருவர் நிற்பதை கண்டு, 'என்னை எவரும் துாக்கிட்டுப் போயிட மாட்டாங்க... நீ போய் துாங்கு' என்று சொல்லி மரத்தடியில் துாங்கினார். 'பெல்' நிறுவனம் நிறுவ, தமிழகத்தை பார்வையிட வந்த மத்திய அரசு அதிகாரிகள், 'போதுமான வசதிகள் இல்லை' என்று கூறி புறப்பட்டு விட்டனர். உடனே, அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காமராஜர், 'ஐயா, திருச்சி பக்கத்தில் திருவெறும்பூர் போய் பாருங்கள்... எவ்வளவு வசதிகள் உள்ளன என்று உங்களுக்கே தெரியும்' என்றார். உடனே, அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு, 'மிக அருமையான இடம், நமக்கு எப்படி தெரியாமல் போனது' என்று ஆச்சரியப்பட்டனர். அங்கு, பெல் நிறுவனம் நிறுவப்பட்டது. ஒரு சமயம், காமராஜரின் கல்வி மற்றும் மக்கள் சேவையை பாராட்டி, குஜராத் பல்கலை ஒன்று, அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்க முன் வந்தபோது, 'மெத்தப் படித்தவங்க, விஞ்ஞானிகள் இருக்காங்க... அவங்களுக்கு கொடுங்கள்; எனக்கு வேண்டாம்' என, அப்பட்டத்தை வாங்க மறுத்தார். இதேபோன்று, மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் தொண்டர் ஒருவர் காமராஜரை புகழ, 'இந்தாய்யா... என்னை பாராட்டாதே... நான் கல்யாணம் செய்துக்கல; பிள்ளை குட்டிகள் இல்லை. கல்யாணம் செய்து, பிள்ளை குட்டிகளோடு குடும்பஸ்தனாக இருந்தும் நேர்மையாக வாழுற அமைச்சர் கக்கனை பாராட்டி பேசும்...' என்று, பாராட்டைக் கூட பிறருக்கு அளித்து மகிழ்ந்த பெருந்தன்மை மனசுக்காரர் காமராஜர். எளிமை, ஆடம்பரம், புகழ்ச்சி விரும்பாமை, ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தந்த காமராஜரோடு, கருணாநிதியை ஒப்பிட்டு பேசியதே தவறு. இதில், அவரை இழிவுபடுத்தும் விதமாக, 'காமராஜர், 'ஏசி' இல்லாமல் துாங்க மாட்டார்' என்று கூறியுள்ளது, எத்தனை அதர்மம் நிறைந்த பொய்! 'உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது' என்பதை, தி.மு.க.,வினர் உணர்ந்து கொள்ள வேண்டும்!  செஞ்சிக் கோட்டையின் அவலம்! காஞ்சிசெல்வம், காஞ்சி புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அமைப்பு, உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது, தமிழர்களுக்கு பெருமையாக இருந்தாலும், இன்றைய நிலையில் செஞ்சிக் கோட்டை எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? புராதன சின்னமான கோட்டை கட்டடங்களில், ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து போய் உள்ளன. கிடங்கு, கோவில், அகழி, மண்டபம் அத்தனை யும் கண்றாவியாக இருக்கிறது. சாராய பாட்டிலும், மட்காத கழிவுகளும் எங்கு பார்த்தாலும் கொட்டி கிடக்கிறது. பெயருக்கு கூட, 'சுற்றுலாத்தலம்'னு சொல்லமுடியாத நிலையில் மாநகராட்சியும், மாநில அரசும் செஞ்சிக் கோட்டையை அலங்கோலமாக வைத்துள்ளன. டிக்கெட் வாங்கி கோட்டைக்குள் சென்றால், அங்கே குடிக்க தண்ணீர், கழிப்பறை என, எந்த அடிப்படை வசதியும் இல்லை. வரலாற்று தொன்மங்கள் அத்தனையும், வன்மங்களாகி கிடக்கின்றன. காரைச்சுவற்றில் சுண்ணாம்பு தேயத் தேய, காதலர்கள் தீட்டிய காதல் குறியீடுகளும், படை திரட்டி போரிட்ட மன்னர்கள் வீற்றிருந்த மண்டபங்கள் மண் சாம்பலாலும் நிறைந்து கிடக்கின்றன. தப்பித் தவறி குடும்பத்தோடு போய்விட்டால், கோட்டைக்குள் நடக்கும் அட்டூழியங்களை கண்டு, ஐம்புலனையும் மூடியபடி வந்தாக வேண்டும். அத்துடன், உதவிக்கு அலறினாலும், ஓர் ஈ, காக்கா கூட இல்லை. வெற்றியை பறைசாற்றிய வீர வரலாறு, இன்று வெறுங்கூடாய் காட்சியளிக்கிறது. இனி, இங்கு எதை காக்க இந்த புராதன அந்தஸ்து என்று புரியவில்லை!  புலம்புவதால் என்ன நன்மை? என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க, பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குற்றஞ்சாட்டியுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது, அவருக்கு எதிராக எந்த பிரச்னையும் செய்யாமல் இருந்தவர், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. அத்துடன், 'அதிக அளவில் மீன் பிடிக்கும் ஆசையில், இந்திய எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் செல்கின்றனர்' என்று, மீனவர்கள் மீது குற்றம் சுமத்தினார். 'கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணமே எங்களுக்கு இல்லை' என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தெளிவாக சொல்லிவிட்ட பின்பும், ஸ்டாலின், பிரதமர் மோடி மீது குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த விஷயத்தில், இந்திராவும், கருணாநிதியும் செய்த தவறுக்கு, பிரதமர் மோடி எப்படி பொறுப்பேற்க முடியும்? அன்று கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு, இப்போது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்புவது நாடகம் இன்றி வேறென்ன? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

BALAMURUGAN.E
ஜூலை 29, 2025 17:35

காமராஜர் எளிமையானவர் என்பதுதான் வாதம். கருணாநிதி புண்ணியதால்தான் காமராஜர் வாழ்ந்தார் என்பதுதான் பிரச்னை. இதை விட நாட்டில் ஒரு பிரச்சனை நாட்டில் உள்ளது அது ஊழல் .சென்னையில் பொது கழிவறை சுத்தம் செய்ய 1000 கோடி . ஒரு கழிவறை சுத்தம் செய்ய 10 லட்சம் .


மூர்க்கன்
ஜூலை 28, 2025 10:38

கச்சத்தீவு கருத்து காஷ்மீருக்கு மாறுபடுமா?? இல்லை இழிச்சவாயன்கள் தமிழர்களுக்கு மட்டுமா??


மூர்க்கன்
ஜூலை 28, 2025 10:35

திரு தமிழருவி மணியன் ஜீவானந்தம் நினைவு விழாவில் உண்மையை சொல்லியுள்ளார் ?? காமராசர் எளிமையானவர்தான் அதை யாரும் மறுக்கவில்லை ஆனால் வயது மூப்பின் காரணமாக அவரால் குளிர்சாதன வசதி இல்லாத அறையில் உறங்கமுடியாது அதனை இங்கே யாரும் குறையாகவும் சொல்லவில்லை. தோழர் ஜீவானந்தம் இறுதிவரை ஒழுகும் குடிசையிலே வாழ்ந்தார் இன்னும் கால் நூற்றாண்டு காலம் காமராசரின் உதவியாளர் தனது வாழ்க்கை குறிப்பில் தெளிவாக காமசாரர் இறுதிகாலத்தில் குளிர்சாதன வசதி கொண்ட அறையிலே உறங்கினார் என்று தெளிவாக உரைத்த பின்னும் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த தெளிவான உண்மையை பொய் என்று சொல்லி கொண்டே இருப்பீர்கள் திரு க அர்ச்சுனன் அவர்களே?? திருச்சி சிவா மீது அநேக விமர்ச்சனங்கள் இருக்கலாம் அது வேறு ஆனால் அவர் உரைத்தது சத்தியமே?? இதனை உண்மையான காங்கிரஸ் காரர்களும் அறிவார்கள்.


D.Ambujavalli
ஜூலை 27, 2025 16:56

பேரப்பிள்ளைக்கு கோடிகள் கொட்டி கார் வாங்கிக்கொடுக்கும் இவர் தலைவரும், இரண்டுமணிநேர ‘உண்ணாவிரதப்’ போராட்டத்துக்கு ரெட்டை குளிர்களுடன் show காட்டிய பெரிய மனிதரும் நாட்டை சூறையாடுவது கண்ணுக்குப் படவில்லை, கருணாநிதியின் பிச்சையால்தான் காமராஜர் குளிர்சாதன வசதியில் வாழ்ந்தாராம் கதை விடுவதற்கும் கணக்கு வேண்டாமா ?


மூர்க்கன்
ஜூலை 28, 2025 12:35

நீ எல்லாம் சன்டீவில சீரியல் பார்க்கத்தான் லாயக்கு பொது அறிவை வளர்த்துக்கொள் வள்ளி


முக்கிய வீடியோ