உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பெருச்சாளிகளும், கண்ணி வெடிகளும்!

பெருச்சாளிகளும், கண்ணி வெடிகளும்!

பழ.சுந்தரமூர்த்தி, கோவையிலிருந்து அனுப்பிய, ‘இ –மெயில்’ கடிதம்: கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், தி.மு.க., அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட ஊழல் புகார்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன், ‘நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறது தி.மு.க.,’ என்றது. அதை மீண்டும், ஈ.வெ.ரா., நுாலக விவகாரம் மூலம், அவர் மகன் ஸ்டாலின் நிரூபித்து விட்டார். முன்பு, சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லுாரியில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான அறிமுக கூட்டம் நடந்தது. அதில் பேசிய கல்லுாரியின் தலைவர், ‘நம் கல்லுாரியில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், மாத இதழ்கள்; வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மாத இதழ்கள் இடம்பெற்றுள்ளன. உங்களுடைய வசதிக்காக நுாலகம், காலை 8:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். அதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு தேவை என்று சொன்னால், 24 மணி நேரமும் நுாலகத்தை திறந்து வைக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். இதிலிருந்து ஒரு நுாலகத்திற்கு எத்தனை மதிப்புள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு நாட்டின் உண்மையான பலம், அதன் இளைஞர்களிடமே உள்ளது. அந்த இளைஞர்களுக்கு, மிக நல்ல கல்வி கொடுத்து, ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற அவ்வையாரின் கூற்றுக்கிணங்க, பல மொழி வித்தர்களாய் அவர்களை செப்பனிட்டு, மகிழ்ச்சியுடன் வாழ வழி செய்வதை விட்டு விட்டு, ‘குண்டுசட்டியில் குதிரை ஓட்டும்’ விதமாய், இருமொழிக் கொள்கை, போட்டித் தேர்வுகள் வேண்டாம் என்று கூறி அவர்களை மூளைச்சலவை செய்யும் பெருமை, முழுக்க முழுக்க தி.மு.க.,வையே சாரும். போதாத குறைக்கு, ‘சரக்கு’ வியாபாரத்தையும் பெருக்கி, தமிழர்களை நிஜமாகவே மூளையைக் கழற்றி வைத்து விட்டு, குப்புறப்படுத்து துாங்கும் பேதைகளாக மாற்றி விட்ட பெருமையும், தி.மு.க.,வையே சாரும். இந்த கேடு கெட்ட வாழ்க்கையிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க, நுாலகங்கள் மிக இன்றியமையாதவை. கடலுார் சிறையில் குற்றவாளிகளாக இருந்த 81 பேர், எழுத்தாளர்களாக மாறி இருக்கின்றனர். கவிஞராக, கட்டுரையாளராக, நாவலாசிரியர்களாக மாறி உள்ளனர். குற்றம் புரிந்து தண்டனை பெற்று வந்தவர்களை, ஒரு சிறைச்சாலை, எழுத்தாளர்களாக உருவாக்கி இருக்கிறது என்றால் எப்படிப்பட்ட மாற்றம் பாருங்கள்! இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்கள், இறையன்பு ஐ.ஏ.எஸ்., மற்றும் கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர். புதிய புதிய எழுத்தாளர்களை உருவாக்கி சமூகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில், போலி எழுத்தாளர்களை உருவாக்கியதுடன், தமிழ் மொழியை குழியில் புதைக்க முனைந்து விட்டனர் சென்ற ஆட்சியாளர்கள்; இச்செயல், தமிழ் மொழிக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். தற்போதைய முதல்வர் விஜய்க்கு, திரும்பிய இடமெல்லாம் கண்ணி வெடி வைத்தாற்போல், அனைத்து துறைகளிலும் ஊழல்! கண்ணி வெடிகளை எப்படி கவனமாக அப்புறப்படுத்துவரோ, அதே கவனத்துடன், இந்த ஊழல் பெருச்சாளிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். ஏனெனில், தற்போது நுாலகங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் ஊழலை துப்பு துலக்கி, விசாரணை நடத்துவதற்குள், ‘நுாலக நுால்களை பெருச்சாளிகள் தின்று விட்டன’ என, விசாரணை அதிகாரிகள் முன், ‘விஞ்ஞான பொய்’ சொல்லத் தயாராகி இருப்பர் இந்த ஊழல்வாதிகள்! இந்த நேரத்தில், மேலும் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்... ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், பல்வேறு சமய மற்றும் ஆன்மிக புத்தகங்களை பதிப்பித்து, ‘ஆன்மிக நுால்கள் விற்பனை நிலையம்’ என்னும் பெயரில், ஒவ்வொரு கோவிலிலும் கடை வைத்து விற்பனை செய்கின்றனர். அந்நுால்களில், ஆசிரியர்கள் பெயர் கூட புதிதாக இருக்கிறது. புத்தகங்களை விற்பனைக்காக அனுப்பிவிட்டு, அதை விற்றுக் கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செய்வதாக, விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த கண்ணி வெடியும், காத்திருக்கிறது விஜய்க்கு! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ