மேலும் செய்திகள்
வெறுப்பு அரசியலால் வெற்றி பெற முடியுமா?
08-Sep-2025
க.ஹேமமாலினி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆளும் தி.மு.க., அரசு, வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கு காட்டும் முனைப்பை, மக்கள் பிரச்னைகளுக்கு காட்டினால் நன்றாக இருக்கும். அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான பனிப்போரில் பெரிதும் பாதிக்கப் படுவது மக்களும், எங்களை போன்ற மாணவர்களும் தான்! தற்போது, 14 பல்கலைக்கு துணைவேந்தர் இல்லை. ஆனாலும், மாணவர் சேர்க்கையிலும், கட்டண வசூலிலும் எந்த தொய்வும் இருப்பதில்லை. அதேநேரம், துணைவேந்தர் நியமிக்கப்படாததால், பல்வேறு நிர்வாக கோளாறுகள் ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் தேர்வுகள் வைப்பது இல்லை. வைத்த தேர்வுகளுக்கும் முடிவுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறை, பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்காமல் இருப்பது போன்ற பல சிக்கல்களுக்கு பல்கலைகள் ஆளாகின்றன. இலவசங்களை கொடுத்து விட்டு, அதில் விளம்பரம் தேடும் அரசு, மாணவர்கள் விஷயத்தில் இப்படி அக்கறை இல்லாமல், அவர்களை அவதிக்குள்ளாக்குவது எந்த வகையில் நியாயம்? வருங்காலம் குறித்த கனவுகளோடு, மேற்படிப்பு படிக்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு, அரசு என்ன பதில் அளிக்க போகிறது? எப்போதுதான் துணை வேந்தர்களை நியமிப்பர்? பல்கலை நிர்வாகம் சரிவர நடக்கும்? மாணவர்கள் வாழ்வில் விடியல் வரும்? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை, சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒன்று சேருவோம்' என்று கூட்டணி சேர்ந்தனர், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சியினர்! இவர்கள் தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் முன், முதலில் தங்கள் கட்சியினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது! அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்ற சில முன் னாள் தலைவர்கள் மற்றும் சிறிய கட்சியினர் இன்னும் தி.மு.க., எதிர்ப்பு அரசியல் தான் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது என்பதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைவில் கொள்ளவேண்டும். 'எனக்கு ஆட்சி, அதிகாரம் முக்கியமில்லை; தன்மானம் தான் முக்கியம்' என்று வீரவசனம் பேசும் பழனிசாமி, தி.மு.க.,வை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவது, தி.மு.க.,விற்கு தான் சாதகமாக அமையுமே தவிர, அ.தி.மு.க.,விற்கு வெற்றியை தராது. அதுபோலவே, தமிழக பா.ஜ.,வின் செயல்பாடுகளில் டில்லி மேலிட தலைவர்களின் குறுக்கீடு வெளிப்படையாக தெரிகிறது. அது, கோஷ்டி பூசல்களை உருவாக்குவதை மேலிட தலைவர்கள் உணர வேண்டும். பா.ஜ., உயர் ஜாதிக்கான கட்சி; படித்தவர்கள், வசதி மிக்கவர்கள் ஆதரிக்கும் கட்சி என்ற பிம்பத்தை உடைத்தவர், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை. 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை வாயிலாக பா.ஜ.,வை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர். இதெல்லாம், டில்லி மேலிட தலைவர்களுக்கு தெரியாதா? 'அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது' என்று ஒதுங்கியிருந்த படித்தவர்கள் கூட அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் சேர்ந்து பா.ஜ., அனுதாபி களாக மாறினர் என்பது தான் உண்மை. கடந்த பார்லிமென்ட் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்படாமல் போனதற்கு அண்ணாமலை மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது. பா.ஜ.,வுடன் சட்டசபை தேர்தலில் கூட்டணி சேர்ந்ததால் தான் சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிடைக்கவில்லை என்று, அ.தி.மு.க., தலைவர்கள் வெளிப்படையாக பேசினர். இல்லாத திராவிடத்தை இழுத்து பிடித்துக்கொண்டு, 'அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் பங்காளிகள் தான்; பகையாளிகள் அல்ல' என்று, சில அ.தி.மு.க., தலைவர்கள் பேசினர். எல்லா குற்றச்சாட்டுகளையும் கேட்டுக்கொண்டு, சுயமரியாதையை இழந்து, எந்த கட்சியும் கூட்டணியில் இருக்க முடியாது. இப்போது தங்கள் வலிமையையும், எதிரிகளின் பலத்தையும் புரிந்துகொண்டு பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆளுங்கட்சி மீது இருக்கும் அதிருப்தியை ஓட்டுகளாக மாற்ற, எல்லாரும் ஒன்றுபட்டால் தான் முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தி.மு.க.,விடம் அதிகாரம், படைபலம், பணபலம் மற்றும் ஊடகங்களின் முழு ஆதரவு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை மனதில் வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டால் நல்லது! சாது மிரண்டால் காடு கொள்ளாது! அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகளவில், அரசியல்வாதிகளின் ரத்தத்தில் ஊழல் இரண்டறக் கலந்து விட்டது. நம் நாட்டிலும் சுதந்திரத்திற்கு பின் நேருவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலேயே, ராணுவத்திற்கான ஜீப் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன. அதுவே, தற்போது வேரூன்றி ஆட்சி அதிகாரத் தில் உள்ளவர்கள், அரசு அதிகாரிகள் என்று பல்கி பரவிவிட்டது. இதனால் நாட்டின் வளர்ச்சித் திட் டங்கள் பாதிக்கப்படுகின்றன. வேலை வாய்ப்பின்மை யும், பொருளாதார சுரண்டல் களும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாகவே, புரட்சி யும் வெடிக்கிறது. அவ்வகையில், சில ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமர் மற்றும் அதிபரை அந்நாட்டு மக்கள் ஓட ஓட விரட்டி அடித்தனர். உயிருக்கு பயந்து அவர்கள் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதேபோன்று வங்கதேசத்திலும் நடந்தது. தற்போது, புத்தர் பிறந்த பூமியான நேபாளத்திலும் புரட்சி ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கவே இப்போராட்டம் என்று கூறப்பட்டாலும், உண்மையில், ஆட்சியாளர்களின் ஊழலே இதற்கு காரணம். பிரதமர் மற்றும் அதிபர் வீடுகளுக்கு தீ வைத்தும், மாஜி பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி தீயில் கருகி உயிரிழந்ததும், 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதற்கு சாட்சி! இந்தியாவிலும் பல மாநிலங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அண்டை நாட்டின் நிகழ்வுகளை மனதில் கொள்ள வேண்டும். காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைவது இளைஞர்கள் தான். அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்ட களத்தில் ஒன்று கூடியதைப் போல், ஊழலுக்கு எதிராக ஒன்று திரண்டால், நேபாளத்தில் அரங்கேறியதை விட மோசமான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரி கள் நினைவில் கொள்ள வேண்டும்!
08-Sep-2025