மேலும் செய்திகள்
கழகம் கரை சேர இலவசம் போதுமே!
23-Oct-2025
ஆர்.சுகுமாறன்,
 சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கூவம், வைகை, 
தாமிரபரணி, நொய்யல் என, ஒவ்வொரு ஆற்றையும் நாசப்படுத்தி விட்டனர். ஆறுகளை 
சீரமைப்பதாக அளித்த தேர்தல் வாக்குறுதியை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
 முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்த ஒரே விஷயம், மத்திய அரசுக்கு கடிதம் 
எழுதுவது மட்டும் தான்...' என்று கூறியுள்ளார், பா.ம.க., தலைவர் அன்புமணி. என்னமோ கொடுத்த ஐந்நுாற்றி சொச்சம் வாக்குறுதிகளையும் தி.மு.க., 
நிறைவேற்றிவிட்டது போலவும்,  ஆறுகளை சீரமைப்பதாக அளித்த வாக்குறுதி மட்டும்
 நிலுவையில் இருப்பது போலவும் உள்ளது, அன்புமணியின் ஆதங்கம். கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், பல இடங்களில் கருணாநிதி 
சிலைகளை நிறுவியதும், அவர் பெயரில் நுாலகங்கள் அமைத்ததும், தினமும் ஒரு 
விழாவில் பங்கேற்று, அறிவிப்புகளை வெளியிட்டதும், முதலீடுகளை ஈர்ப்பதாக 
சொல்லி, குடும்பத்தோடு அரசு செலவில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று 
திரும்பியது தான்! தி.மு.க., அரசு மக்கள் நலப்பணிகளை செய்யாமல் இருப்பதற்கு கூட, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, மத்திய அரசு நிதி ஒதுக்காதது தான்! அத்தகைய முதல்வரை பார்த்து, 'ஸ்டாலினுக்கு தெரிந்த ஒரே விஷயம் மத்திய 
அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டும் தான்...' என்கிறார் அன்புமணி. அக்கடிதத்தைக் கூட, முதல்வர் தன் கைப்பட எழுதுவதில்லை. உதவியாளர்கள் 
தட்டச்சு செய்து கொண்டு வந்து நீட்டுவதில், கையெழுத்து போடுவது மட்டும் 
தான் அவரது வேலை. அதனால், 'ஸ்டாலினுக்கு தெரிந்த ஒரே விஷயம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டும் தான்' என்று அன்புமணி கூறலாமா? உதவியாளர் தட்டச்சு செய்து கொண்டுவந்து நீட்டும் கடிதத்தில், கையெழுத்து 
போடுவது மட்டும் தான் முதல்வர் வேலை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்! வாய் வித்தை காட்டும் ராமதாஸ்! 
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும்; அதுதான் அவருக்கும், அவரைச் சுற்றி இருப்போருக்கும் நல்லது...' என்று கூறியுள்ளார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். தான் துவக்கிய வன்னியர் சங்கத்தை, அரசியல் இயக்கமாக மாற்ற, 1989ல் ராமதாஸ் முடிவெடுத்த போது, 'எந்தக் காலக்கட்டத்திலும் நானோ, என் குடும்பத்தினரோ கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த பொறுப்புக்கும் வரமாட்டோம். 'இவை, என் இறுதிமூச்சு உள்ளவரையிலும், எனக்குப் பின்னாலும் கூட அமலில் இருக்கும்...' என்று சத்தியம் செய்துவிட்டுத்தான் பாட்டாளி மக்கள் கட்சியை பதிவு செய்தார், ராமதாஸ். பின்னாளில், தான் போட்ட சத்தியத்தை துாக்கி சாக்கடையில் வீசிவிட்டு, தன் மகன், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த குடும்பத்தையே கட்சியில் சேர்த்துக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், தன் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதிக்கு கட்சியில் முக்கியத்துவம் தந்ததை போல்,  ராமதாசும் தன் இரண்டாவது மனைவி சுசீலாவுக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. தன் மகன் அன்புமணிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும், தமிழக முதல்வர் ஆக முடியவில்லையே என கண்ணீர் வடித்த ராமதாஸ், இன்று அதே மகனை, மாடு மேய்க்கும் சிறுவனோடு ஒப்பிட்டு பேசுகிறார். இதேபோன்று தான், இளமை காலத்திலும், பத்திரிகையாளர்களை அநாகரிகமாக விமர்சித்தார் . கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் வன்னியர்களுக் கான இடஒதுக்கீடு போராட் டத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தினர், பா.ம.க.,வினர். 'மரங்களை ஏன் வெட்டு கிறீர்கள்?' என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர்களை, அநாகரிகமாக வசைபாடி எச்சரிக்கை விடுத்தார், ராமதாஸ். இடஒதுக்கீடு சலுகைகளை பெற, மரங்கள் வெட்டினால் சரியாகி விடுமா என்ன! திருமண தோஷம் உள்ளவர்கள்,  வாழை மரத்திற்கு தாலி கட்டி, அதை வெட்டி வீசிவிட்டு, பின், திருமணம் செய்து கொள்வர். இது ஒரு பரிகாரம். அதைப்போன்று, அன்று இடஒதுக்கீடு சலுகை வேண்டி, ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டி பாவத்தை சம்பாதித்த பா.ம.க.,வினர், சமீபத்தில், பெரம்பூரில் மேம்பாலம் அமைக்க  மரங்களை வெட்டிய போது, அதை கண்டித்து, வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். காலம் கடந்த ஞானோதயம்! இதுவும் எத்தனை மாதங்களுக்கோ! ஏனென்றால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், 'கட்சியிலும், ஆட்சியிலும், என் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறிய சத்தியத்தை மீறி, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தன் முட்டாள்தனம்' என்று சொல்லி, மீண்டும் அதுபோன்று தான் செயல்படப் போவதில்லை என்று வீராவேசம் காட்டினர், ராமதாஸ். இதோ... இப்போது, தன் மகள் ஸ்ரீகாந்தியை பா.ம.க.,வின் செயல் தலைவராக்கியுள்ளார். சாதாரண ஜாதி சங்கத்தை, தன் வாய் ஜாலத்தால் அரசியல் கட்சியாக்கி, அ.தி.மு.க., - தி.மு.க., என்று மாறி மாறி கூட்டணி வைத்து, அதிகார சுகத்தை அனுபவித்து வரும் ராமதாஸ், தன் வாயாலேயே, இப்போது, பா.ம.க.,விற்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்! சாமியார் வேடம்போடும் பூனை! 
மாரியப்பன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 2ம் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, மத்திய பா.ஜ., அரசின் ஓட்டுரிமை பறிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப போகிறாராம், தமிழக முதல்வர் ஸ்டாலின். சமுதாய சிந்தனையோடு, ஜனநாயகத்தை காப்பாற்ற பாடுபடுபவர் போல் முதல்வர் போடும் வேடத்தை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. தமிழக மக்களின் ஓட்டுரிமை பறிப்பு குறித்து கவலைப்படும் ஸ்டாலின், தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதையும், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பது போன்ற குற்றங்களை தடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், அவரை பாராட்டி இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் மறந்தும் கூட செய்ய மாட்டார். காரணம், தி.மு.க.,வின் தேர்தல் வெற்றியே கள்ள ஓட்டு போடுவதிலும், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதிலும் தான் அடங்கியுள்ளது. அப்பாவி மக்களின் ஆசையை துாண்டி, ஓட்டுகளை பெற்று, தேர்தல்களில் வெற்றி பெற்று வரும் தி.மு.க., இன்று மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்படுவதாக கூக்குரல் இடுவது, மாமிசம் தின்னும் பூனை, சாமியார் வேடம் போடுவது போல் உள்ளது!
23-Oct-2025