உள்ளூர் செய்திகள்

ஏமாற்று வேலையா?

ஆர்.சுதர்சனம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்று அதன்படி செயல்படும் போது, தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. துவக்கத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். ஆனால், அரசியல் காரணங்களுக்காக தற்போது ஏற்க மறுக்கின்றனர். தமிழக அரசு, இதில் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறது.'அவர்களுக்கு தமிழக கல்வி வளர்ச்சி மீது துளிகூட அக்கறையில்லை. மும்மொழிக் கொள்கையை, தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. தமிழகம் அதை ஏற்று செயல்படுத்துவதில் எவ்வித சிரமமும் இல்லை. தமிழ், ஆங்கிலத்தோடு, அண்டை மாநில மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஏதாவது ஒரு மொழியை கற்பிக்கலாம்.'தாய்மொழியான தமிழ், பிரதானமாக இருக்கும்; புதிய கல்விக் கொள்கை அதற்கு எந்த விதத்திலும் இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை' என, தெளிவாக விளக்கியுள்ளார், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.அவரது விளக்கத்திலும் புதிய கல்விக் கொள்கையின் எந்த இடத்திலும், 'ஹிந்தி' என்ற வார்த்தை இடம் பெறவே இல்லை.ஆனால், துணை முதல்வர் உதயநிதி, 'மொழி, இன உணர்வு வந்த பின்தான், தமிழர்களுக்கு அரசியலே வந்தது. எங்கள் இடுப்பில் கொள்கை என்ற வேட்டி ஏறிய பின்தான், தோளில் பதவி என்ற துண்டு வந்தது. நிதி உரிமையை கேட்டால், ஹிந்தியை ஏற்க வேண்டும் என தமிழகத்தை மிரட்டுவதா, தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்' என்று வீராவேசம் காட்டியுள்ளார். ஹிந்தி படித்தாக வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் எங்காவது சொல்லப்பட்டுள்ளதா?மூன்றாவதாக, ஏதாவது ஒரு மொழி என்று தானே சொல்லப்பட்டுள்ளது?தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நிலப்பரப்புகள் அடங்கிய பகுதிதான் திராவிடம் என்றும், தங்களை திராவிடர்கள் என்றும் கூறி தானே, திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறீர்கள்... கன்னடமோ, மலையாளமோ, தெலுங்கோ கற்றுக் கொடுப்பதில் என்ன கஷ்டம் வந்தது?அப்படி என்றால், திராவிடம், திராவிடர் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலையா?

தலையாட்டி பொம்மையல்ல!

பி.மணியட்டி மூர்த்தி, கோவையில் இருந்து எழுதுகிறார்: தமிழக அரசுக்கும், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்பு தலும், ஒத்துழைப்பும் தருவதில்லை என்பது தி.மு.க., அரசின் குற்றச்சாட்டு; கவர்னர் பதவிக்கான மரியாதையை ஸ்டாலின் தலைமையிலான அரசு தருவதில்லை என்பது கவர்னரின் வருத்தம்.மாநிலத்திற்கு கவர்னர்களை நியமிப்பது பா.ஜ., ஆட்சியில் மட்டும் நடப்பது அல்ல; சுதந்திரம் வாங்கியது முதல் இதுவரை மத்தியில் ஆண்ட ஆட்சிகளின் நடைமுறையாகவும் இருந்து வருகிறது. ஆட்சிக்கு ஒத்துழைப்பு தந்தால் அவரை புகழ்வதும், தவறுகளை சுட்டிக்காட்டினால், கவர்னர் பதவி தேவையில்லை என்பதும் முட்டாள்தனமான சிந்தனை. மத்திய அரசுடன் மோத பயந்து, கவர்னரை சீண்டியும், மோதியும் பார்க்கின்றனர்.சில தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்ததை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., அரசு, கவர்னரை நீக்க வேண்டும், வாபஸ் பெற வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போராட்டங்கள் நடத்துவது நகைப்புக்குரியது. ஒருவேளை ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, கவர்னரை திரும்பப் பெற மத்திய அரசு சம்மதிக்கிறது என்று வைத்துக் கொண்டால், கவர்னர் இல்லாத தமிழகத்தில் இனிமேல் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்றோ, கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, போதை பொருட்கள் விற்பனை நடக்காது என்றோ முதல்வரால் உத்தரவாதம் தர முடியுமா?தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டசபையில் தன் சட்டையை கிழித்து விட்டனர் என்று அ.தி.மு.க., மீது கவர்னரிடம் ஸ்டாலின் புகார் அளித்ததை மறந்து விட்டாரா? ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் இருப்பது அரசியலுக்கு அழகல்ல. கவர்னர் என்பவர் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவர்; அவருடன் இணக்கம் இல்லாமல், பிணக்கோடு இருந்தால் மக்கள் பணிகளில் சுணக்கம் ஏற்படும். ஆட்சியாளர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட கவர்னர் தலையாட்டி பொம்மையல்லவே!

ம க்கள் மூடர்கள் அல்ல!

ஜெ.விநாயகமூர்த்தி, கல்லம் பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்களை, அந்நாடு திருப்பி அனுப்பியவிதம் சரியில்லை; மரியாதைக்குறைவாக உள்ளது, கண்ணியம் தவறிவிட்டது' என, பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் கூச்சலிடுகிறது, காங்கிரஸ் கட்சி.அமெரிக்க நாட்டு விதிமுறைப்படி, அந்நாட்டின் சட்டத்தை மீறி நடப்பவர்களுக்கு, என்ன மரியாதை தர வேண்டுமோ, அதை அந்நாடு செய்துஉள்ளது. இந்தியாவில் உள்ளதைப்போல கருணை, கரிசனம் போன்ற 'அட்ஜஸ்ட்மென்ட்' விஷயங்களை வெளிநாடுகளில் எதிர்பார்க்க முடியாது.அத்துடன், இங்கு, பணம் படைத்தோர், அரசியல் பின்புலம் கொண்டோர், அரசியல்வாதிகள் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து, தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வது போல், அந்நாட்டு சட்டத்தில் முடியாது. அரசன் முதல் ஆண்டி வரை சட்டம் அங்கே அனைவருக்கும் ஒன்று எனும்போது, இந்தியாவுக்கு மட்டும் தங்கள் சட்டத்தை தளர்த்திக் கொள்வரா என்ன!உயிரோடு கொண்டு வந்து இறக்கிவிட்டனரே என்ற ரீதியில்தான் இப்பிரச்னையை பார்க்க வேண்டுமே தவிர, ராஜமரியாதை தரவேண்டும்; அந்நாட்டின் செயலுக்கு இந்தியா ஆட்சேபனை குரல் எழுப்ப வேண்டும் என்று கூக்குரலிடுவது வேடிக்கையாக உள்ளது.போபால் விஷவாயு சம்பவத்தில், பல லட்சம் உயிர்கள் பாதிக்கப்பட்ட போது, நம் நாட்டு சட்டத்தை சிறிதும் மதிக்காமல், அச்சம்பவத்திற்கு காரணமாக இருந்த, 'புள்ளி'யை மிகவும் பாதுகாப்பாக, அவரின் சொந்த நாட்டிற்கு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததே காங்., கட்சி...அதுபோன்று, அமெரிக்காவும் நடந்து கொள்ளுமா என்ன!எங்கே, எப்போது, எந்த விஷயத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது மோடி அரசுக்கு நன்றாக தெரியும்; பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்ட அபிநந்தன் எனும் ஒற்றை ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்ற, பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது தான் மோடி அரசு என்பதை காங்., மறந்துவிடக் கூடாது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, நியாயமற்ற விஷயங்களை கையில் எடுக்காதீர்கள்... மக்கள் மூடர்கள் அல்ல; எல்லாவற்றையும் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொள்ள!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 20, 2025 20:37

ஹிந்தி படித்தாக வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? மூன்றாவதாக, ஏதாவது ஒரு மொழி என்று தானே சொல்லப்பட்டுள்ளது? இருந்தாலும் நாங்கள் மொழி அரசியல் செய்தால் மூடமக்கள் எங்களுக்கு வாக்குகளைக் குவித்துவிடுவார்கள் ......


Dharmavaan
பிப் 20, 2025 10:59

போபால் விஷ வாயு காரணம் வெள்ளைக்காரன் காங்கிரஸ் அவன் அடிமை காந்தி நேரு காலத்திலிருந்தே அவனை விட்டதில் ஆச்சரியமில்லை இந்திய மக்களின் உயிருக்கு மதிப்பு அவ்வளவே


chennai sivakumar
பிப் 20, 2025 09:05

அனுபவி ராஜா அனுபவி திரைபடத்தில் பட்டிகாட்டில் இருக்கும் நாகேஷ் பட்டணம் வந்து பாடுவதாக ஒரு காட்சியிருக்கும். அந்த பாடலில் " இங்கு சரியா தமிழ் பேச ஆளும் இல்லை" . அதுதான் இன்றைய நிலமை


நிக்கோல்தாம்சன்
பிப் 20, 2025 00:22

சுதர்சனம் கேட்டீங்களே ஒரு கேள்வி , முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தாய்மொழியான தெலுங்கை கூட மூன்றாம் மொழியாக கற்றுக்கொடுக்கலாம் ?


chennai sivakumar
பிப் 20, 2025 09:02

1970 களில் தெலுங்கு மீடியம், தமிழ் மீடியம் மற்றும் ஆங்கில மீடியம் என்று இருந்தது. ஒன்று அல்லது இரண்டு section telugu medium ஆகவும்,ஒரே ஒரு section மட்டும் ஆங்கில மீடியம் மீதி சுமார் 7 அல்லது 8 தமிழ் மீடியம் ஆக இருந்தது. பிறகு வந்த காலத்தில் ஆங்கில வழி.போதனை எல்லாவற்றையும் ஓரங்கட்டி விட்டது. இப்போது சுத்தமாக தனியார் பள்ளிகளில் தமிழ் மீடியம் கிடையாது. முதலில் இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து விட்டு மற்றவற்றை பிறகு பார்க்கலாமே .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை