உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  வாய்ப்பேச்சு வீரர்களுக்கு துணிவு உண்டா?

 வாய்ப்பேச்சு வீரர்களுக்கு துணிவு உண்டா?

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இடஒதுக்கீடு வாயிலாக ஏற்கனவே பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், ஜாதியை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி, வேலைவாய்ப்பில் பெரும் பகுதியை கைப்பற்றி விடுகின்றனர். அதனால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரை உட்பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும். இப்பிரிவில் உள்ள வசதி மிக்கவர்கள்,வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு வழி விட வேண்டும்' என்று, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நாளன்று, இடஒதுக்கீடு குறித்து அவர் கூறிய இக்கருத்து குறித்து எந்த முற்போக்கு ஊடகங்களும் விவாதம் நடத்தவில்லை. அச்செய்தியை பெரிதாக வெளியிடவும் இல்லை. வர்க்க போராளிகள், மதச்சார்பற்றவர்கள், சமூகநீதியின் அத்தாரிட்டிகள் எல்லாம் மவுன சாமியார் ஆகிவிட்டனர். இடஒதுக்கீடு வாயிலாக பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், தாங்களே தொடர்ந்து அதன் பலனை அனுபவிக்க துடிக்கின்றனரே தவிர, தங்கள் இனத்தில் பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் மக்களுக்கு வழிவிட மறுக்கின்றனர். இதுகுறித்து பட்டியல் இனத்தை சேர்ந்தவரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான கவாய், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கருத்தை முன்மொழிகிறார். அதை வழிமொழிய இங்குள்ள சமூகநீதி கட்சிகளுக்கு வாய் வரவில்லை. தங்கள் இனமக்களின் வாழ்வை உயர்த்த மனம் வராத இவர்கள் தான், வர்க்க பேதம் குறித்து வாய் கிழிய பேசி, சமூகநீதி காக்க போராடும் உத்தமர்கள்! lll எதற்கு ஓட்டளிக்க வேண்டும்? கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பொய் வாக்குறுதி கொடுத்து, நம் எல்லாரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டனர்; அவர்களை கேள்வி கேட்காமல் விடப் போவதில்லை' என்று, வீறுகொண்டு எழுந்துள்ளார், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய். த.வெ.க., கட்சி ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. திராவிட மாடல் ஆட்சியிலோ, அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள், தி.மு.க.,வின் ஊழல்களை பட்டியல் போட்டு கேள்விக்கணைகள் தொடுக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்விகள் எழுப்புகின்றன. ஆனால், இதுவரை ஒருமுறை கூட ஆட்சியாளர்களின் ஊழல்களை தட்டிக் கேட்காமல், பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏன் ஏமாற்றினீர்கள் என்று கொந்தளிக்காத விஜய், இப்போது வீறுகொண்டு எழுவது ஏன்? தேர்தல் நெருங்குவதாலா? மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுமாம் விலாங்கு மீன். அதுபோல் இதுவரை தி.மு.க., ஆட்சி குறித்து எதிர்க்கட்சிகள் கண்டன குரல் எழுப்பும் போது, தி.மு.க.,வை எதிர்த்து கண்டன அறிக்கை விடுவதும், மத்திய பா.ஜ., அரசு கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க., எதிர்த்தால், அதற்கும் ஒத்து ஊதுவதுமாக கூட்டத்தோடு கோவிந்தா போட்டதை தவிர, ஓர் அரசியல்வாதியாய் தமிழக மக்களின் பிரச்னைகளில் விஜயின் செயல்பாடுகள் என்ன? தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க.,வினர் செய்யும் ஊழல்கள் குறித்து, 'தி.மு.க., பைல்ஸ்' வெளியிட்டார். தன்னை யோக்கிய சிகாமணியாக காட்டிக் கொள்ள தி.மு.க., - எம்.பி., பாலு, அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அண்ணாமலை அதை மன உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறார். என்னைப் போன்ற எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர்கள், ஒரு கட்சி தலைவனின் செயல்பாடுகளை பார்த்து தான், அவருக்கு ஓட்டளிப்பது குறித்து முடிவு செய்கின்றனர். அரசியல்வாதியான விஜயின் எந்த செயல்பாடுகளுக்காக வரும் தேர்தலில் அவருக்கு ஓட்டளிப்பது? lll என்ன செய்யப் போகிறது தி.மு.க.,? ஆர்.சுப்பிரமணியன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசாக ரேஷனில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என அமைச்சர்களும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும், அரசுக்கு நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கின்றனராம். ஆனால், 'கஜானாவில் காசே இல்லை... 11,000 கோடி ரூபாய்க்கு எங்கே போவது?' எனக் கேட்டு நிதித் துறை அதிகாரிகள் எதிர்ப்பு கொடி துாக்கியுள்ளனராம். அவர்களை மிரட்டி, துன்புறுத்தி ஒன்றுக்கும் ஆகப்போவது இல்லை. அதனால், உடன்பிறப்புகள், 'சின்ன மீனை போட்டு, பெரிய மீனை பிடிக்கும்' வழியில் இறங்க வேண்டியது தான். வரும் தேர்தலில், திராவிட மாடல் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர்ந்து கோலோச்ச வேண்டுமானால், அமைச்சர்களும், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களும், வட்ட, மாவட்ட செயலர்களும் இதுவரை குவித்து வைத்துள்ள கோடிகளில் இருந்து சிலபல கோடிகளை எடுத்து வீசினால், கார்டுக்கு, 5,000 ரூபாய் என்ன... 50,000 ரூபாய் கூட கொடுத்து வெற்றியை எளிதாக விலைக்கு வாங்கி விடலாம்! தேர்தலில் வெற்றி பெற்றபின், இருக்கவே இருக்கு... ஆறு, மலை, கனிமவளங்கள், டாஸ்மாக், போதை பொருட்கள் என்று சம்பாதிக்க கோடி வழிகள் இருக்கின்றன! ஏற்கனவே, எஸ்.ஐ. ஆர்., வாயிலாக கழகம் வழக்கமாக நடத்தும் தில்லாலங்கடிகளுக்கு, 'செக்' வைத்து விட்டது, தேர்தல் கமிஷன். இறந்தவர்கள் எவரும் மேலுலகிலிருந்து இறங்கி வந்து தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க முடியாது. ஏனெனில், அவர்கள் பெயர்களெல்லாம், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. அதனால், இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் தொகுப்பு 5,000 ரூபாய் கொடுத்தால் போதாது; ஒரு குடும்பத்திற்கு, 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும். காலம் கடத்தாமல், உடனடியாக களத்தில் குதித்து, குவித்து வைத்துள்ள கோடிகளுடன் இறங்கி, தமிழக வாக்காளர்களின் மனதை குளிர வைத்தால் மட்டுமே, வெற்றிக் கோட்டையை எட்டிப் பிடிக்க முடியும். இப்போதே பட்டுவாடாவை துவக்கி விட்டால், தேர்தல் கமிஷனின் கண்களிலும் மண்ணைத் தூவி விடலாம். என்ன செய்யப் போகிறது திராவிட மாடல் கழகம்? கோட்டையை பிடிக்கப் போகிறதா அல்லது கோட்டை விடப் போகிறதா ? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை