உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கனவு காணாதீர்கள்!

கனவு காணாதீர்கள்!

ஆர்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உயர் நீதிமன்றம் சொடுக்கிய சாட்டையை அடுத்து, மாநிலம் முழுதும், 56 இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., பேரணி மற்றும் அணிவகுப்பு நடந்துள்ளது.சென்னை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில் எழும்பூரில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் கல்வியாளர் நல்லபெருமாள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.கூட்டத்தில் பேசிய வடதமிழகம் ஆர்.எஸ்.எஸ்., இணை செயலர் ராமகிருஷ்ண பிரசாத், 'ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், 100 ஆண்டுகளில் பல பரிமாணங்களாக வளர்ந்துள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் கல்வி, கோவில் திருப்பணி, பசுக்கள் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். 'திருநங்கையரையும் அமைப்பில் இணைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, நாடு முழுதும், 65,000 இடங்களில் இயங்கும், 'ஷாகா' அமைப்பை, ஒரு லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது' என ஒரு வெடிகுண்டை எடுத்து வீசியிருக்கிறார். வடதமிழகம் ஆர்.எஸ்.எஸ்., இணைசெயலர் சகோதரர் ராமகிருஷ்ண பிரசாத் அவர்களுக்கு தமிழகம் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் சரியான புரிதல் இல்லை என்பதை, அவரது வெடிகுண்டு வீச்சு உரையினின்றும் உணர முடிகிறது.ஆர்.எஸ்.எஸ்., நடத்திய பேரணி மற்றும் அணிவகுப்பில், சீருடை அணிந்து பங்கேற்ற சேவகர்கள் அனைவரும்,பல ஆண்டுகளுக்கும் முன்பாகஇயக்கத்தில் இணைந்து, சேவை செய்து கொண்டிருப்பவர்களாக இருப்பர்.கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அந்த ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில், தமிழகத்திலிருந்து ஒரு நபர் கூட தன்னை இணைத்துக் கொண்டிருக்க மாட்டார்.காரணம், தற்போது தமிழகத்தில் வாழும் மற்றும் வசிக்கும் மக்கள் அனைவரும் சிந்திக்கும் திறனையும், நல்லது கெட்டதை ஆராய்ந்தறியும் மனப்பக்குவத்தையும், சொந்த புத்தியையும், சொல் புத்தியையும் மதுவிலும், கஞ்சாவிலும், போதைப் பொருட்களிலும் இழந்து, நடைப்பிணமாக,சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்கள் முன் ஆர்.எஸ்.எஸ்., நாட்டுப்பற்று பிரசாரம், தேசப்பற்று பிரசங்கம், சமூக சேவை சமாசாரங்கள், கோவில் திருப்பணி மேட்டர்கள், பசு பாதுகாப்பு விவகாரம் என, எதுவும் எடுபடாது.வாக்குப்பதிவு நாளன்று அதிகாலையில் எழுந்து ஒரு குவார்ட்டரை குடித்து, கால் பிளேட் பிரியாணியை சுவைத்து, கண்களை இறுக மூடி, திராவிட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் சின்னங்களில் முத்திரை அல்லது பொத்தானை அமுக்கி விட்டு வருவது போலத்தான், 'டியூன்' செய்து வைத்திருக்கின்றனர்.ஆகவே, நாடு முழுதும் இருக்கும், 'ஷாகா' அமைப்பின் 65,000 கிளைகளை ஒரு லட்சமாக உயர்த்தும் எண்ணம், தமிழகம் தவிர்த்து, பிற மாநிலங்களில் வேண்டுமானால் நிறைவேறலாம்.ஆனால், தமிழகத்தில் தற்போது இயங்கும்ஷாகாக்கள் தவிர, கூடுதலாக ஒரு ஷாகாவைக் கூட அமைக்க இயலாது.

ஆக்கிரமிக்க கூட உரிமை இல்லையா?

க.தனஞ்செயன், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சென்னை, வேளச்சேரி,ஆண்டாள் நகரில் 1,200 சதுர அடி அரசு நிலத்தை, 2021ல் போலி ஆவணங்கள் வாயிலாக ஆக்கிரமித்து, வீடு கட்டியதாக, 178வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், அ.தி.மு.க.,வின் வேளச்சேரி மேற்கு பகுதி செயலருமான எம்.ஏ.மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாம். மேலும், அங்கு தாசில்தாராக பணியாற்றியவர் உட்பட சில அதிகாரிகள்,ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.இந்த வழக்கில், சாமானியர்களான நமக்கு ஒரு விஷயம் விளங்கவில்லை...புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, குடிசை போட்டு குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பும் வழங்கி, சில ஆண்டுகளுக்குப் பின்,அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசே பட்டாவும் வழங்கி கவுரவிக்கிறது.தவிர, அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், அரசின் வேறு உபயோகம் எதற்காகவாவது தேவைப்படுமானால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடமும் கொடுத்து, புது குடியிருப்புக்கு இடம் மாற, அரசே வாகன வசதியும் செய்து கொடுக்கிறது.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தலித் மற்றும்பழங்குடியினருக்கு என, வழங்கப்பட்ட, பல ஆயிரம் ஏக்கர் பஞ்சமிநிலங்கள் என்ன ஆனது என்று தெரியவும் இல்லை; தகவலும் இல்லை. தி.மு.க.,வின் ஆஸ்தான நாளேடான, 'முரசொலி' பத்திரிகை அலுவலகமே, பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தான் என்றும் புகார்கள் உள்ளன.நாம் முதலில் குறிப்பிட்டஎம்.ஏ.மூர்த்தி என்பவர், மக்கள் சேவைக்காக தன் வாழ்க்கையையே தியாகம்செய்து பவனி வந்து கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட சமூக சேவகருக்கு, விருது வழங்கி கவுரவிக்காமல், 'அரசு நிலத்தை ஆக்கிரமித்தார்' என வழக்கு தொடர்ந்திருப்பது, அதிர்ச்சியாகவும்,வேதனையாகவும் உள்ளது.அவர் ஒன்றும் நாலு ஆணியும், ஒரு கோணியும்கொண்டு அந்த, 1,200 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. முறைப்படி என்னென்ன தில்லாலங்கடி வேலைகள்செய்து, அந்த இடத்தை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமோ, அவை அனைத்தையும் பக்காவாக செய்த பின்னரே, வீடு கட்டி குடியேறி இருக்கிறார்.ஒரு அரசியல் கட்சி பிரமுகருக்கு, 'ஆப்டர்ஆல்' 1,200 சதுர அடியுள்ள ஒரு அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டி குடியேறுவதற்குக் கூட உரிமை இல்லையா... என்னய்யாநாடு இது...? கேட்கவே கேவலமாக இருக்கிறதே!

எங்கே போச்சு தன்மானம்?

வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, தமிழக முதல்வர், மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். அதற்கு அவசியமே இல்லை.பீஹார், கர்நாடகா போன்ற மாநிலங்கள், தாமாகவே அந்தக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டன. தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?இதே கதை தான் இப்போது மது விலக்கு விவகாரத்திற்கும். 'மத்தியஅரசு செய்தால், நாங்கள்செய்வோம்' என்கிறது தமிழக அரசு. சுயாட்சி, தன்மானம், மாநில உரிமை என வாய் கிழிய பேசுபவர்களுக்கு, இப்போது அவைஎல்லாம் எங்கே போயின?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
அக் 09, 2024 17:52

தமிழ்நாட்டில் 1967க்கு முன் மக்கள் வசித்தார்கள். 1967க்கு பிறகு டாஸ்மாக்கினாடு ஆனதால் இங்கு வசிக்கும் 3.2 கோடி குடிகாரர்கள், பணத்துக்கு ஒட்டு போடுபவர்கள், மோடி ஒழிக பிஜேபி ஒழிக சொல்வதற்கு ரூ 200,பிரியாணி,டாஸ்மாக்கினாட்டு சரக்கு வாங்கும் மாக்கள். மீதி 5 கோடி மக்களில் சிலர் மக்கள் சிலர் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன ஜாதியினர்???ஆகவே 3.2 கோடி மாக்கள் திருந்தினால் ஒழிய இந்த டாஸ்மாக்கினாடு தமிழ்நாடு ஆகவே ஆகாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை