கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நல்ல மதிப்பெண் பெற்றும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ கல்லுாரியில் சேர முடியவில்லையே' என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார், மாணவி அனிதா. இம்மரணத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துடித்த தமிழக அரசியல்வாதிகள், தங்கள் அரசியல் நாடகத்தை பெரிய அளவில் அரங்கேற்றின. அதற்கு ஒத்து ஊதினர், சினிமா நடிகர்களான சத்யராஜ், கமல்ஹாசன், சூர்யா, கார்த்திக், சிவகுமார், சித்தார்த், பிரகாஷ் ராஜ் போன்ற கல்வி மேதைகள்! கூடவே, அனிதாவின் தந்தையை சந்தித்து ஆறுதலும், பண உதவியும் செய்து, சமூக சீர்திருத்தவாதிகள் போல் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நீட் தேர்வை தடைசெய்ய வேண்டும் என்று தி.மு.க.,வினர் கங்கணம் கட்டிக் கொண்டு பேயாட்டம் ஆடினர். காரணம், ஒவ்வொரு தி.மு.க., புள்ளிக்கும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மருத்துவ கல்லுாரி இருப்பதால்! ஏழை மாணவ - மாணவியருக்கு நீட் வரப்பிரசாதமாக உள்ளது. அதேநேரம், இதுவரை, 21 பேர் இறந்துள்ளனர் என்று சொல்கின்றனர். உண்மையில் அரசுக்கு மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், நீட் பயிற்சி மையங்களை ஆரம்பித்து, இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பயிற்சி அளித்து தற்கொலைகளை குறைத்திருக்கலாம். ஆனால், அதை செய்ய மனம் வராது. காரணம், இது வெறும் அரசியல் நாடகம் தானே!சமீபத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தது. கடலுார், விருத்தாசலம், நெல்லை, தர்மபுரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த நான்கு மாணவியர் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தி.மு.க., அரசு என்ன செய்யப் போகிறது? தமிழகத்தில் இனி, 10ம் வகுப்பு தேர்வு நடத்தக் கூடாது என்று போராட்டம் நடத்துவரா? கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்று அறிவிப்பரா? த.வெ.க., கட்சி தலைவர் நடிகர் ஜோசப் விஜய், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பேசினாரே... இந்த மாணவியரின் மரணத்திற்கு என்ன பரிகாரம் செய்ய போகிறார்?எல்லா உயர் கல்வி துறைகளிலும் நுழைவு தேர்வு உண்டு. அதில், தோற்றவர் முட்டாளும் இல்லை; வெற்றி பெற்றோர் புத்திசாலியும் இல்லை. இந்த உண்மையை புரிந்து அரசியல்வாதிகளும், நடிகர்களும், மாணவ - மாணவியருக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை கூறாவிட்டாலும், அவர்கள் தற்கொலையை ஊக்கப்படுத்தி, பெற்றோரை கண்ணீர் கடலில் தள்ளாதீர்கள்! கடன் சுமையால் தள்ளாடும் தமிழகம்!
ஆர்.வித்யாசாகர்,
அருப்புக் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில்
அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து
வருகிறது, திராவிட மாடல் அரசு. 2025, மார்ச் 31 நிலவரப்படி தமிழகத்தின்
மொத்தக் கடன், 9 லட்சத்து, 55 ஆயிரத்து, 690 கோடி ரூபாய் என்று ரிசர்வ்
வங்கி அறிவித்துள்ளது. இது திறந்த சந்தைக்கடன், நிதிநிறுவனம், பொது
கணக்கு, அரசு நிறுவனங்கள் வாங்கும் கடன் என பல வழிகளில் பெறப்படுகிறது.
இவை அனைத்தும் மாநில வளர்ச்சிக்காக பெறப்படும் கடன்கள் என்று
கூறப்படுகிறது.அதிக கடன்பெறும் மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டு,
உயர்கல்வி, தொழில்துறை, மருத்துவம், காவல்துறை, தகவல் தொழில்நுட்பம் போன்ற
துறைகளில் இந்தியாவிலே வளர்ச்சியடைந்த முதன்மை மாநிலம் தமிழகம் என்று
மார்தட்டிக் கொள்கிறார், முதல்வர் ஸ்டாலின். அனைத்து துறைகளிலும்
வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தால், எதற்கு இலவச பேருந்து பயணம்,
உரிமைத்தொகை, பொங்கல் தொகுப்பு என மக்கள் கையேந்த வேண்டும்?வளர்ச்சி அடைந்த நாடுகளில் மருத்துவமும், கல்வியும் மட்டும்தான் இலவசம்.
ஆனால், இவை இரண்டும் தமிழகத்தில் அரசியல்வாதிகளின் பரிபூரண ஆசியோடு, வளம்
கொழிக்கும் வர்த்தகமாக மாறிவிட்டன.அதேநேரம், அரசுக்கு வருவாய்
ஈட்டித்தரும் போக்குவரத்து, மின்சாரம் ஆகிய இரு துறைகளும் கடன் சுமையாலும்,
நஷ்டத்தாலும் அதலபாதாளத்தில் இருக்கின்றன. இதை சீர்படுத்தும் திறன்
அரசுக்கு இல்லை. இந்திய அரசியலமைப்பு பிரிவு 293(3)ன் கீழ்,
'மாநில அரசுகளின், நிகர கடன் வாங்கும் உச்சவரம்பு, மாநிலத்தின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதமாக இருக்கவேண்டும்' என நிர்ணயித்துள்ளது.
ஆனால், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல், இலவசங்களை வாரி வழங்கி
கடன்சுமையை அதிகரித்துக்கொண்டே போகிறது தி.மு.க., அரசு.அரசின்
வருமானத்தைப் பெருக்கும் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லாமல்,
டாஸ்மாக் வருமானத்தை மட்டும் நம்பி, தேவையற்ற இலவசங்களால் கடன் சுமையை
ஏற்றிவரும் ஆட்சியாளர்களால், விரைவில் தமிழகம் திவாலானாலும்
ஆச்சரியமில்லை! வாயால் கெடும் பாகிஸ்தான்!
என்.
கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'இந்தியா -
பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரில் எங்களுக்குத் தான் வெற்றி' என்று
கொக்கரிக்கிறார், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். இதை வெற்றி ஊர்வலமாக நடத்தி கொண்டாட்டம் வேறு போடுகின்றனர், பாகிஸ்தானியர்கள். 'போரில் வெற்றி பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்; எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீனாவுக்கு நன்றி' என்கிறார், ெஷபாஸ். இதற்கிடையே, 'நான் சொல்லித் தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது' என்று அளந்து வேறு விடுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.பாகிஸ்தான்
பிரதமர் சொல்வதை பார்க்கும்போது, ஒரு படத்தில் சிலம்பு சண்டையில் மோசமாக
தோல்வி அடைந்து அசிங்கப்பட்ட காமெடி நடிகர் வடிவேலு, அதை வெளிக்காட்டாமல்,
'வெற்றி... வெற்றி...' என்றபடி, விலைக்கு வாங்கிய கோப்பையுடன் செய்த
அலப்பறைகள் தான் நினைவுக்கு வருகிறது.இதற்கு முன் நடந்த போர்களிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது தான் வரலாறு!நம்மிடம் இருக்கும் ஏவுகணைகள், ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள் எல்லாம் பாகிஸ்தானிடம் இல்லை. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது தான், இரு நாடுகளுக்கு இடையே போர் உருவாகக் காரணம்.கடந்த போரில் இந்தியாவிடம் செமத்தியாக அடி வாங்கியும், பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.நவீன
போர் ஆயுதங்களை, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல், தானே
உற்பத்தி செய்யும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது, நம் நாடு. எனவே, இனியாவது வாலாட்டாமல் இருப்பது தான் பாகிஸ்தானுக்கு நல்லது!