உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  வித்தை கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் வித்தையா?

 வித்தை கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் வித்தையா?

ஜி.சூர்ய நாராயணன், வண்டிமேடு, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது தான், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கையாக இருந்தது. அதேபோன்று, 20 நாட்களும் அமைதியாகத் தான் போராடிக் கொண்டிருந்தனர்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஆரம்பித்ததும் தான், அவர்களது போராட்டம் திசை திரும்பியது.பார்லிமென்டை முற்றுகையிட முயன்ற துடன், 'நீட்' வினாத்தாள் கசிவு குறித்த கோஷங்களை விட, ஜம்மு - காஷ்மீரில் அரசியலமைப்பின் 370வது சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், 'மோடி ஒழிக; ஹிந்துஸ்தான் ஒழிக; பாகிஸ்தான் வாழ்க' என்ற கோஷம் உரக்க ஒலித்த போது தான், கரப்பான் பூச்சி அமைப்பின் பின்னணியில் எவர்கள் இருக்கின்றனர் என்பது அம்பலமாகியது.அதுமட்டுமல்ல... இப்போராட்டத்தில் சில நாடகங்களும் அரங்கேறின.உடல்நிலை சரியில்லை என்று சொன்ன, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் தலைவர், அபிஜித் தீப்கே, தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்ற செய்தி வந்ததும், ஐந்து நட்சத்திர விடுதியில் ஆடிப் பாடி கொண்டாடுகிறார்.நடக்க இயலாமல், இருவர் உதவியுடன் நடந்து வந்து நாடகம் போட்ட பெண் ஒருவர், ஆக்ரோஷ நடனமாடுகிறார்.எதற்கு இந்த நடிப்பு?சுதந்திர இந்தியாவில் ஒரு அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்வது இது முதல் முறையா என்ன?காங்கிரஸ் ஆட்சியில் எத்தனையோ பேர் ராஜினாமா செய்துள்ளனர். போராடிய எவரும் இத்தகைய கொண்டாட் டத்தில் ஈடுபட்டதில்லையே!இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், ஏதோ பொதுத் தேர்தலில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிடம், பா.ஜ., தோற்று விட்டது போல் பூரித்து மகிழ்கின்றனர்.ஒரு போராட்டம் வெற்றி பெற்று விட்டதாலேயே, ஓர் அரசு தோற்றுப் போனதாக எடுத்துக் கொண்டால், காங்., ஆட்சியில், எத்தனையோ மாணவர்கள் போராட்டத்தில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனரே... காங்., அரசு தோற்றுப் போனதால் தான், அவர்கள் எல்லாம் ராஜினாமா செய்தனரா என்ன?கயிற்றின் மீது நடக்கும் வித்தை கற்றவன் இடறி விழுந்தால், அதுவும் ஒரு வித்தை என்பானாம்... அதுபோல் உள்ளது எதிர்க்கட்சியினர் பேச்சு!

அறநிலையத்துறை கவனத்தில் கொள்ளுமா?

என்.விஸ்வநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பதியில் வெங்கடாசல பெருமாளை சிரமமின்றி தரிசிக்க, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து, உரிய நேரத்தில் குடும்பத்துடன் சென்று, நெரிசலில் சிரமப்படாமல் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர், பக்தர்கள். அதுபோல், திருச்செந்துார் மற்றும் திருவண்ணாமலையிலும், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் முறையை அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால், குழந்தைகள், முதியோரை அழைத்து வந்து, கூட்ட நெரிசலில் அவதிப்படுவது தவிர்க்கப்படும்; தரிசன கட்டணத் தொகையும் நேரடியாக கோவில் கருவூலத்திற்கு சென்றுவிடும்; நடுவில் வேறு எவரும் கொள்ளை அடிக்க முடியாது. மேலும், திருப்பதியில் உள்ளது போன்று, முதல் நாளே பொது தரிசனத்திற்கு டிக்கெட் கொடுத்து விட்டால், அனைத்து தரப்பு பக்தர்களும் நெரிசலில் சிக்காமல், அமைதியான முறையில் சுவாமியை தரிசிக்க முடியும். அறநிலையத்துறை அமைச்சர் கவனத்தில் கொள்வாரா?

ஊழல் எப்படி ஒழியும்?

சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு தெருவில் யார் திருடர், எவர் சமூக விரோதி என்பது அப்பகுதியில் வசிப்போருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்; ஆனாலும், நமக்கு எதற்கு பிரச்னை என்று வாய் மூடி மவுனமாக இருந்து விடுவர். அதேநேரம், அந்த திருடர்களால், சமூக விரோதிகளால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, 'குய்யோ முறையோ' என்று கூவுவர். அதுபோன்று தான், தற்போது லஞ்ச ஒழிப்பு துறையின் வேட்டையால், அப்பாவி ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக அரசு ஊழியர்கள் சங்கம் கூக்குரல் எழுப்புகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 'தினமலர்' நாளிதழில் வந்த செய்திகளில், 'ஓய்வு பெற்ற ஆசிரியையிடம், 'ஜிபே' வாயிலாக லஞ்சம் பெற்ற அதிகாரி சஸ்பெண்ட்; பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற, வி.ஏ.ஓ., கைது; மின் இணைப்பை மாற்ற லஞ்சம் பெற்ற பொறியாளர் கைது' என, பல செய்திகள் வெளி வந்துள்ளன. இந்த லஞ்ச திமிங்கலங்களை பிடிக்க, புதிய அரசு சாட்டையை சுழற்றுவதால் அரசு ஊழியர் சங்கங்கள், 'மாமன் மச்சானிடம் கூட பணம் வாங்க முடியவில்லையே...' என பொருமி, ஆர்ப்பாட்டம் செய்கின்றன. கடமையை செய்ய கையூட்டு பெறுவது குற்றம் என்பது இச்சங்கங்களுக்குத் தெரியாதா? உரிமைக்காக போராடுவதாக கூறும் இச்சங்கங்கள், 'லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்கு சங்கம் எந்த சூழ்நிலையிலும் ஆதரவாக இருக்காது' என்று, இதுவரை அறிவிப்பு வெளியிடாதது ஏன்? ஒரே வேலைக்கு அரசிடம் சம்பளமும், மக்களிடம் கிம்பளமும் பெறுவதை தங்களின் தார்மீக உரிமை என்று எண்ணுகின்றனரா? ஊழல் செய்வோருக்கு ஆதரவாக போராட ஒரு சங்கம் இருந்தால், ஊழல் எப்படி ஒழியும்? lll அழுத்தம் கொடுத்தால் காரியம் ஆகும்! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேகதாது அணை, காவிரி நீர் பங்கீடு குறித்து தமிழக முதல்வர், கர்நாடக முதல்வருடன் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதுவரை தமிழக அரசுகள் எத்தனையோ முறை கர்நாடக அரசுகளுடன் பேச்சு நடத்தி விட்டன. அதனால், எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதால் தான், நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காணப்பட்டது. அப்படியிருந்தும், ஒவ்வொரு முறையும், 'எங்களுக்கே தண்ணியில்லை; மழையே பெய்யவில்லை' என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி, தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்து வருகிறது, கர்நாடகா. அதேநேரம், அதிக மழை பெய்யும் காலங்களில், வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக நீரை திறந்து விட்டு, 'தமிழகத்திற்கான பங்கு நீரை கொடுத்து விட்டோம்' என்று கூறுகிறது. இப்போது, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசினால், அதையே காரணமாக காட்டி, 'நாங்கள் தமிழக அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்' என்றோ, 'மேகதாது அணை கட்ட ஒப்புதல் கொடுங்கள்' என்றோ தமிழக முதல்வரை நிர்ப்பந்திக்கலா ம்! எனவே, முதல்வர் இந்த விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்று. கர்நாடக முதல்வரை சந்திக்காமல், காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தொடர்பு கொண்டு, அவர் வாயிலாக கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்தால், காரியத்தை சாதிக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை