அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசு நுாறு நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மஹாத்மா காந்தியின்
பெயரை நீக்கி, இரண்டாவது முறையாக அவரை கொன்று விட்டது' என, உருகியுள்ளார்,
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம். இவர் நிதியமைச்சராக இருந்த
காலத்தில், கரன்சி அச்சிடும் மிஷினை ஏலம் விடுகிறோம் என்ற பெயரில்
பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தார். மிஷினை வாங்கி சென்ற பாகிஸ்தான், இரவு -
பகல் பாராமல், நம் பணம், 1000 - 500 ரூபாய் நோட்டுகளை கோடி கோடியாக
அச்சிட்டு நம் நாட்டிற்குள் புழக்கத்தில் விட்டு, நம் நாட்டில்
பணமதிப்பிழப்பை ஏற்படுத்தியது. அதற்கு வழியமைத்துக் கொடுத்தவர் தான் இந்த சிதம்பரம். இதனால், நம் நாட்டின் பொருளாதாரம் வீழ்வதுடன், நாட்டின் பாதுகாப்பிற்கும்
அச்சுறுத்தல் ஏற்படுவதை அறிந்து, அடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு,
அதிரடியாக, 500, 1,000 ரூபாய் செல்லாது என்று திடீரென அறிவித்தது. அச்சமயம், இங்கு பதுக்கப்பட்டிருந்த கருப்பு பணம் மட்டும் குப்பைகளில்
வீசப்படவில்லை. பாகிஸ்தான் தெருக்களில் நம் நாட்டு பணம் மூட்டை மூட்டையாக
வீசப்பட்டன. அன்று பிரதமர் மோடி அந்த அதிரடி நடவடிக்கையை
எடுத்திராவிட்டால், இன்று, இந்தியா உலகளவில் நான்காவது பொருளாதார நாடாக
முன்னேறி இருக்காது. அத்துடன், நம் பணத்தை அச்சிட்டு, அதை வைத்து,
இங்குள்ள கைக்கூலிகளை விலைக்கு வாங்கி, அவர்கள் வாயிலாக இங்கு தொடர்
பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றி இருப்பர். இப்படி, தேசத்தின் நலன் குறித்து சிறிதும் சிந்திக்காத சிதம்பரம், இன்று
தேசபக்தியிலும், நாட்டு நலனிலும் அக்கறை உள்ளவர் போல் நடிக்கிறார். ஒரு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது, பெயர் மாறுவது இயல்பான
விஷயம். மஹாத்மா காந்தியின் பெயரை எடுத்து விட்டு, மோடி தன் பெயரையா
இத்திட்டத்திற்கு சூட்டிக் கொண்டார்? ஒரு திட்டத்திலிருந்து
காந்திஜியின் பெயரை நீக்கியதாலேயே அவரை கொலை செய்து விட்டதாக
அர்த்தமாகும் என்றால், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், காங்., தலைவராக
இருந்தபோது, தமிழகத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதை அடுத்து, ஓர்
இனத்தின் அழிப்புக்கு காங்., துணை போனது, அளப்பறியா கருணையால் தானோ! ஒரு பெயர் மாற்றமே உயிர்பறிப்பு என்றால், இலங்கையில் லட்சக்கணக்கான
தமிழர்கள் கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்.,க்கு என்ன பெயர்? விசில் சத்தம் மட்டுமே மிஞ்சும்!
ஏ.நாகசுந்தரம், கன்னியாகுமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில் புதிதாக தோன்றியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தால் பிற கட்சிகளை பயமுறுத்துகிறது. 'கூரை மீது சோறு போட்டால், ஆயிரம் காக்கை' என்பது போல், தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்று, கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என துாண்டில் வீசினார், நடிகர் விஜய். இப்போது வரை, பெரிய மீன்கள் அல்ல; சுண்டு விரல் அளவில் இருக்கும் அயிரை மீன்கள் கூட அகப்படவில்லை. ஆளுங்கட்சி தி.மு.க.,வை மேடைதோறும் பந்தாடும் விஜய், சிறுபான்மையினர் கோபித்து கொள்ளக் கூடாதே என்று, பா.ஜ.,வையும் எதிரி லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறார். அதேநேரம், அ.தி.மு.க.,வை அடிப்பது போல் நடிக்கிறார். இப்படி ஒருபுறம் விஜய், பார்த்து பக்குவமாக பல்லுப்படாமல் அரசியல் செய்து கொண்டிருக்க, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தமிழக அரசியல்வாதிகளோ, அவரை ஒன்றும் அறியாத பால்வாடி மாணவனாகவே பார்க்கின்றனர். இதில், சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனோ, 'தவழும் குழந்தை' என வர்ணனை செய்கிறார். ஆக, முதிர்ச்சி இல்லாத அரசியல்வாதி என்றே அனைவரும் முத்திரை குத்துகின்றனர். இதை உடைக்க வேண்டும் என்றால், நடிகர் விஜய், தி.மு.க.,வை குற்றஞ்சாட்டும் முன், அக்கட்சியின் கடந்த கால அரசியல் அத்துமீறல்கள், ஊழல்கள், சொத்து குவிப்பு போன்ற விஷயங்களை கையில் எடுத்து, புள்ளி விவரத்துடன் பேச, பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். சினிமா போல் அரசியலிலும் நடித்தால், ரசிகர்களின் கைத்தட்டல், விசில் சத்தமே மட்டுமே மிஞ்சும் என்பதை விஜய் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்! கொள்ளையே கொள்கையோ?
வ.உதயகுமார், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட நுாலில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றியதாக தகவல் உள்ளது. நில அளவைக்கல் என்ற உருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ், டிச., 9ம் தேதி ஆதாரங்களை வெளியிட்டது. ஆனாலும், திராவிட மாடல் அரசு, 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற குறுமதியாளர்களாக, கண்மூடித்தனமாக மறுத்துப் பேசுவதையே, வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுமட்டுமா... தீபத்துணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட பின்னும், அடாவடி செயல்களில் ஈடுபட்டது தி.மு.க., அரசு. 'தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைதரும்' என்கிறது, குறள். ஒன்றை ஆராயாமல் நம்புவதும், ஆராய்ந்து அறிந்த ஒன்றை நம்ப மறுப்பதும் துன்பத்தையே தரும். இங்கு இருக்கும் ஒன்றை இல்லை என்று மறுத்து, அராஜகங்களை அரங்கேற்றுகிறது, தி.மு.க., இதில், தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.,யான வெங்கடேஷன் நீதிபதியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும், திருப்பரங்குன்ற நிகழ்வுகள் குறித்து பேசும்போது, 'கேடுகெட்ட மலிவான அரசியல்' என்று சாடியுள்ளார். இந்த வார்த்தைகள், பொறுப்பானவர்களின் பேச்சா? 'பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' என்று, குறளுக்கு உரை எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுகள், குறள்வழி நடப்பதில்லை. ஆட்சியாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நியாயம்; பாதகமாக வந்தால் அநியாயம் என்று சொல்லி, தமிழக மக்களை ஏமாளிகள், முட்டாள்களாக நினைத்து, பல பொய்களை பரப்பி வருகின்றனர். நீதிமன்றங்களில் தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தண்டிக்கப்பட்ட பிறகும், அவர்கள் மாறவே இல்லை. தினசரி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல், நில அபகரிப்பு என்ற அராஜகங்கள் நடைபெற்றபடி இருக்கின்றன. 'ஓட்டு வங்கியும், கொள்ளையுமே கொள்கை' என்று இருப்பவர்கள், 'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், மன்னவனின் படையை தேய்க்கும் வலிமை கொண்டது' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!