உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வெறும் உரலில் மாவிடிக்கும் எம்.பி.,க்கள்!

வெறும் உரலில் மாவிடிக்கும் எம்.பி.,க்கள்!

ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டு தோறும் எம்.பி.,க்கள் பங்கேற்கும் ரயில்வே துறையின் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம், சமீபத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் மதுரையில் நடந்தது.இக்கூட்டத்திற்கு, 18 எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், கனிமொழி, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட ஏழு எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்து இன்றுவரை தமிழக ரயில்வே திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, புதிய ரயில் இயக்கம், கோட்டம் சார்ந்த பிரச்னைகள் குறித்து தமிழக எம்.பி.,க்கள் ஆர்வமோ, அக்கறையோ காட்டுவது இல்லை. அப்படி காட்டியிருந்தால், அதிக வருவாய் ஈட்டுவதில் கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம் அடைந்திருக்கும். குறிப்பாக, தென்மாவட்ட ரயில் திட்டங்கள், புதிய ரயில் சேவை இயக்கம், நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் தன்னிறைவு பெற்றிருக்கும்.கேரளாவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் இரு துருவங்களாக இருந்தாலும், மாநிலத்திற்கு தேவையான நலத்திட்டங்களுக்காக ஒன்றாக இணைந்து டில்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து, அவற்றை நிறைவேற்றி கொள்கின்றனர்.ஆனால், தமிழகத்தில் இதுவரை அப்படியெல்லாம் நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதில்லை.அதேநேரம், ஆண்டுக்கு ஒருமுறை கூடும் இக்கூட்டங்களுக்கு, அதுவும் உள்ளூரில் நடக்கும் கூட்டத்தில் கூட எம்.பி.,க்கள் பங்கேற்பதில்லை எனும் போது, இவர்களுக்கு ஓட்டு போட்டு என்ன பயன்?வெறும் உரலில் மாவிடிப்பது போல், வாய்பேச்சிற்கு மட்டும் மாநில நலன் குறித்து பேசினால் போதுமா... இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமா?

மாறுபட்ட நிலைப்பாடு ஏன்?

கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: - 'இந்தியா முழுதும் மதுவிலக்கு என்ற நிலையை மத்திய அரசு கொண்டு வரும்போது, தமிழகத்திலும் முதல்வர் நடைமுறைபடுத்துவார்' என்று கூறியுள்ளார், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம், 'மது உற்பத்தி மற்றும் வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ளன; இதில், மத்திய அரசு தலையிட முடியாது' என்று தீர்ப்பளித்ததை செந்தில் பாலாஜி மறந்து விட்டாரா? மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருக்க வேண்டும், தி.மு.க., அரசு. சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில், 24 ஆண்டுகள் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது; கருணாநிதி முதல்வர் ஆன பின் 1971ல் மதுவிலக்கை ரத்து செய்தார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., தலைவர்களும் அதையே பின்பற்றியதால், இதோ, 55 ஆண்டுகள் தமிழகத்தில் சாராய சாம்ராஜ்யம் தொடர்கிறது. மது விற்பனையில் ஆண்டுதோறும் 2,000 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டின் டாஸ்மாக் வருமானம், 50,000 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. தேசிய அளவில் அதிக வருவாய் ஈட்டி தரும் பொதுத்துறை நிறுவனமாக டாஸ்மாக் விளங்குகிறது. அந்நிறுவனத்திற்கு தேவையான அனைத்து வகை சரக்குகளையும், ஆளுங்கட்சியினர் நடத்தும் மதுபான ஆலைகளிடமே அரசு கொள்முதல் செய்கிறது. அவ்வகையில், மக்களின் பணம் டாஸ்மாக் வழியாக கட்சியினருக்கும், ஆட்சியாளர்களுக்குமே செல்கிறது. மேடைதோறும், 'திராவிட மாடல் ஆட்சி தான் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது' என்று பெருமை பேசும் முதல்வர், பூரண மதுவிலக்கு கொள்கையில் குஜராத், பீஹார், மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்களின், 'மாடல்களை' பின்பற்றலாமே!இந்தியா முழுதும் மதுவிலக்கு வரும்போது, தமிழகத்திலும் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறுவோர், நாடு முழுதும் இருக்கும் நீட் தேர்வை இங்கு மட்டும் ரத்து செய்ய துடிப்பது ஏன்?தன் கட்சிக்காரர்கள் நடத்தும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளின் வருமானம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவா?எதற்காக இந்த மாறுபட்ட நிலைப்பாடு?மதுவிலக்கை கொண்டு வந்தால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியாது என்று, உண்மையை சொல்லி விட்டுப் போங்களேன்!

எதிர்மறை கருத்துக்கள் வேண்டாமே!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், திருப்பூரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். அதேபோன்று, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியின் கூட்டணி ஆட்சி பற்றிய கருத்தும், குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற எதிர்மறை கருத்துக்கள் கூட்டணிக்கு நல்லதல்ல; உற்சாகத்துடன் செயல்படும் தொண்டர்களை, இதுபோன்ற பேச்சுக்கள் பாதிக்கக்கூடும். தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா போன்றோரை சேர்த்துக் கொள்வது அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரம் என்று பா.ஜ., கூறிவிட்டது. இந்நிலையில், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரே, இப்பொழுது பா.ஜ., மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.,வை, 'பா.ஜ.,வின் அடிமை, மாநில உரிமைகளை அடகு வைத்து விட்டது' என்றெல்லாம் கூறி கூட்டணியை தடுக்க தி.மு.க., செய்த அனைத்து முயற்சிகளையும் மீறி, கூட்டணி அமைந்துள்ளது. முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கூட, 'ஒரு வலிமையான, தி.மு.க., எதிர்ப்பு கூட்டணி அமைய வேண்டும்' என்று கூறி, அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்துள்ளார்.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதற்காக, பா.ஜ.,வும் பல இடங்களில் விட்டுக் கொடுத்து, இக்கூட்டணியை உறுதி செய்துஉள்ளது. இதையெல்லாம் மறந்து, பழனிசாமியும், அ.தி.மு.க.,வினரும் எதிர் மறை கருத்துக்களை கூறுவது, தேர்தல் வெற்றிக்கு உகந்தது அல்ல!இம்முறை ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றால், அ.தி.மு.க., பல கிளைகளாக உடைந்து விடும். அதேபோல் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற, பா.ஜ.,விற்கு, அ.தி.மு.க.,வின் துணை தேவை. எனவே, கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில், இருதரப்பும் செயல்படுவது அவசியம்; அப்போதுதான், மேலும் பல கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும். வரும் 2026 தேர்தல் அ.தி.மு.க., - பா.ஜ., மட்டுமல்ல... தமிழக மக்களுக்குமே முக்கியமான தேர்தல். 'தனியாகத் தான் நிற்பேன்' என்று கூறி, மறைமுகமாக தி.மு.க., விற்கு ஒத்தாசை செய்யும் கட்சிகள், மக்களின் மனநிலையை உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
மே 02, 2025 09:27

மதுரையில் ரயில்வே நிர்வாக கூட்டம் புறக்கணிப்பு... தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது. மிக அருமையான சொல்லடை தென் தமிழகத்தில் வசிக்கின்ற தமிழர்களை மனிதர்களாக எவரும் மதிப்பதில்லை . ஒரு மிக பெரிய தொழில் முதலீடு. உடனடியாக சென்னையை அருகிலுள்ள மாவட்டம் பயன் அடைகிறது. கடந்த நாற்பது வருடங்களாக எந்த கட்சியின் ஆட்சியிலும் தொழில்கள் வரவிடாமல் அரசில்வாதிகள் பார்ததுக்கொண்டனர். இதே கதிதான் ரயில்வேயில். எந்த புது ரயிலும் மதுரை கோட்டத்தில் இருந்து புறப்பட எந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஆதரவு கொடுக்கவில்லை .ஏன் ஒரு வந்தே பாரத் ரயில் மதுரை டிவிசனுக்கு கிடையாது இத்துணைக்கும் மதுரை, ராமேஸ்வரம், தேனீ, திண்டுக்கல், சிவகாசி, விருதுநகர், செட்டிநாடு காரைக்குடி போன்ற தொன்மையான நகரங்கள் லிமிட்டுக்குள் இருந்தாலும் புது ரயில்கள் வராமல் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டனர். பின்னர் எப்படி தென் மாவட்ட மக்கள் வாழ முடியும். இன்றும் தண்ணீர் தட்டுப்பாடு, சாப்பாடு பஞ்சம் ஆடுகிறது ஒன்று நினைவில் கொள்ளவேண்டு. தமிழ்நாடு தென் மாவட்டங்களையும் அடக்கியது


Anantharaman Srinivasan
ஏப் 28, 2025 23:37

டாஸ்மார்க் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களால், பாதிக்க பட்டிருக்கும் குடும்ப பெண்கள் எல்லோரும் ஒரு அமாவாசையன்று அந்தி சாயும் வேளையில் ஒரு கைபிடி மூச்சந்தி மண் எடுத்து காறித்துப்பி ஆட்சியாளர்களை சபித்து தூர எறிய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை