மேலும் செய்திகள்
கேலி கூத்து!
13-Sep-2025
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபகாலமாய் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாங்கள் வழங்கும் தீர்ப்புகளால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றனர். அதிலும், பிரபல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது, கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகின்றனர். கடந்த 2014, செப்., 27ல் சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த போது, தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் நீதிபதியின் புகைப்படத்தை தீ வைத்து எரித்தும், மிதியடியால் அடித்தும் அவமரியாதை செய்தனர். அச்சமயம், வேலுார் மாநகராட்சி பெண் மேயர், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றியது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின், சென்னை உயர் நீதிமன்றம் அவரை பத்திரிகை வாயிலாக மன்னிப்பு கேட்க கூறியதும், அவர் மன்னிப்பு கேட்டதும் தனிக்கதை! அதன்பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, நீதிபதி குமாரசாமியால், ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அத்தீர்ப்பு குறித்து, 'வழங்கப்பட்ட தீர்ப்பா அல்லது வாங்கப்பட்ட தீர்ப்பா' என்று நாடு முழுதும் கடும் விமர்சனம் எழுந்தது. இப்படி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்படும் போது, நீதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளாவது வழக்கம். அவ்வகையில், உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், நடிகர் விஜய் பரப்புரையில், கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு, தலைமை பண்பு இல்லை என கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் சிலர் அவதுாறு பரப்பி கருத்துகளை பதிவு செய்தனர். அதுகுறித்து நீதிபதி செந்தில்குமார், 'ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்ததற்காக, நீதிபதிகளின் கருத்துகள் மட்டுமின்றி, அவர்களின் கடந்த காலம், குடும்ப உறுப்பினர்கள் மீதும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். நீதிபதிகளின் செயல்பாடுகளுக்கு கலர் சாயம் பூசி, அவரவர்களுக்கு தேவையானதை சமூக வலைதளத்தில் எழுதுகின்றனர். அவற்றை எல்லாம் புன்னகையுடன் தான் கடந்து செல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார். அவர் கூறியள்ளது சரியே! அதேநேரம், எந்தவொரு நீதிபதியும் அரசியல், மதம், ஜாதிய சார்பில்லாமல் நீதி வழங்கும் போது விமர்சனங்கள் எழுவது இல்லை. உண்மையில், ஒரு நீதிபதி நேர்மையாளரா இல்லையா என்பதை, அவருக்கு முன் ஆஜராகும் வழக்கறிஞர்கள் நன்கு அறிவர். சிறு சந்தேகத்திற்கு உரிய தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அது உடனடியாக அவர் வாயிலாக பிறருக்கு தெரிந்து விடும். அதன்பின்பே, நீதிபதியின் தீர்ப்பு குறித்தும் சந்தேகம் எழுவதுடன், அவரும் விமர்சனத்திற்கு உள்ளாகிறார். எனவே, ஒவ்வொரு நீதிபதியும் தங்கள் மனசாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும். சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவோரும், தங்கள் கருத்து சுதந்திரத்தின் வரம்பு மீறாமல் பதிவு செய்ய வேண்டும். அப்படியும் நேர்மையான ஒரு நீதிபதி, தான் வழங்கிய தீர்ப்புக்காக விமர்சனங்களை எதிர்கொண்டால், நீதிபதி செந்தில் குமார் கூறியபடி, அவற்றை புன்னகையுடன் கடந்து செல்ல வேண்டும்! காரணம், இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவரும் இல்லை! lll எவரால் தான் காப்பாற்ற முடியும்? எஸ்.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கரூரில் த.வெ.க., பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, சரியாக திட்டமிடப்படாமை, ஆளுங்கட்சியின் சூழ்ச்சி, குறுகிய இடத்தில் பரப்புரை என்று ஆளாளுக்கு தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர். இது குறித்த வழக்குகள், விசாரணைகள் ஒருபுறம் சென்றாலும், சினிமா நடிகர்கள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விபரீதமான மனநிலையை எண்ணும் போது மனம் பதறுகிறது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதை தாண்டி, இந்த விஞ்ஞான யுகத்திலும் நடிகர்களை கடவுளாக, ரட்சகராக பார்க்கின்றனர் என்றால், அதை என்னவென்பது? கரூரில், நடிகர் விஜயின் பரப்புரையை காண வந்தவர்களிடம் நேர்காணல் செய்து வெளியான சில ஆடியோ - வீடியோக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளத்தில் வெளியாகின. அதில் ஒரு வீடியோவில் பள்ளிச் சிறுமி ஒருவர், சீருடையில் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார், 'இன்று எனக்கு பரீட்சை; ஆனா, விஜய் அண்ணா எங்க ஊருக்கு வர்றதால, பரீட்சையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்திருக்கிறேன். எங்கப்பாவும் எனக்கு துணைக்கு வந்திருக்கிறார்...' என்றார். சிறுமியின் தந்தையோ பெருமிதத்தோடு புன்னகைக்கிறார். படிப்பை புறந்தள்ளி, சினிமா மோகத்தில் நடிகர் விஜயைக் காண வந்த சிறுமியின் எதிர்காலத்தை நினைக்கும்போது மனம் பதறுவதை தடுக்க முடியவில்லை. இன்னொரு வீடியோவில் ஒரு பெண்மணி, 'என் கணவரை விட, விஜயை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான் அவரை நேரில் பார்க்க வந்தேன்...' என்று குதுாகலம் பொங்க கூறுகிறார். அருகில் நின்றிருந்த அவரது கணவர் வெட்கத்தோடு சிரிக்கிறார். என்ன வெட்கக்கேடு இது? இதுவா... தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம்? மற்றொரு ஆடியோவில், மொபைல் போனில் தன் மனைவியை தொடர்பு கொள்ளும் ஒரு கணவர், 'டிவி'யில பார்த்தேம்மா... இவ்வளவு கூட்டமா இருக்குதே... விஜய் இன்னும் வரலன்னு சொல்றாங்க. பேசாம நீ திரும்பி வந்துடுமா... குழந்தைய வேற கூட்டிக்கிட்டுப் போயிருக்க!' என்கிறார். அந்த பெண்ணோ, 'இவ்வளவு துாரம் வந்துட்டேன்; விஜயை பார்த்துட்டே வந்திடுறேங்க!' என்கிறார். சிறு குழந்தைகளை துாக்கிக் கொண்டு கோவிலுக்கு சென்றால், கற்பூர ஆரத்தியின் போது, கர்ப்பகிரகத்திலுள்ள இறைவனை காண்பித்து, அவர்களது சின்னஞ்சிறு கரங்களை கூப்ப வைத்து, 'சாமியப் பாரு... கன்னத்தில போட்டுக்கோ!' என்று கற்றுக் கொடுப்பது போல், இவர்கள் தங்கள் அபிமான ஹீரோக்களை தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய அழைத்துப் போயினரோ... கடவுள் பக்தி வழிவழியாய் தொடர்வது போல், கதாநாயகரின் மேலுள்ள பக்தியும் தொடர வேண்டுமேன்று! 'நெரிசலில் குழந்தைகளை கூட்டிக்கிட்டுப் போகாதே!' என்று அறிவுரை கூற வேண்டிய மூத்த தலைமுறையினரும் தங்கள் பெண், பிள்ளை, பேரக்குழந்தைகளோடு நடிகர் விஜயை பார்க்க போயிருக்கின்றனர் என்றால், தமிழகம் எதை நோக்கிச் செல்கிறது? சினிமா எனும் மாயவலையில் சிக்கி மதியிழந்த இவர்களை எவரால் தான் காப்பாற்ற முடியும்? 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்' என்று, இவர்களை நினைத்து தான், அன்றே பாடினாரோ பாரதி! lll
13-Sep-2025