உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கொம்பு தேனுக்கு ஆசைப்படும் ராமதாஸ்!

கொம்பு தேனுக்கு ஆசைப்படும் ராமதாஸ்!

பி.ருக்மணி தேவி, இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ம.க., சித்திரை முழு நிலவு நாள் மாநாட்டில், 'நாமும் ஒருமுறை தமிழகத்தை ஆள வேண்டும். இனமே எழு, உரிமை பெறு' என்று, தன் இன மக்களை உசுபேற்றியுள்ளார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். வன்னியர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தப் போவதாக சூளுரைத்து,1989ல் வன்னியர் சங்கத்தை துவக்கினார் ராமதாஸ். அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீடு போராட்டம் என்ற பெயரில், சாலை ஓர மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து, கலவரத்தை துாண்டி, துப்பாக்கி சூட்டில் பலர் உயிரை காவு கொடுத்து, சங்கத்தையே, பா.ம.க., என்ற அரசியல் கட்சியாக்கி, இன்று, அதை தன் குடும்ப சொத்தாக்கிக் கொண்டவர் தான் ராமதாஸ். 'நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம்; அப்படி ஒரு வேளை நிகழ்ந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என்று வசனம் பேசியவர், பின், மக்கள் எங்கே அதை நினைவில் வைத்திருக்க போகின்றனர் என நினைத்து, மகன் அன்புமணியை எம்.பி., - மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார். அவருடைய இந்த முரண்பட்ட நிலையும், பதவிக்காக தேர்தலுக்கு ஒரு கூட்டணி வைக்கும் குணமும் தான், ஆரம்ப காலத்தில் கட்சிக்கு இருந்த வரவேற்பு, இன்று குறைந்து போனதற்கு காரணம்!'வன்னியர் ஓட்டு, அன்னியர்க்கு இல்லை' என்று சூளுரைத்தவர், இன்று, 'நாமும் ஒருமுறை தமிழகத்தை ஆள வேண்டும்' என்கிறார். எப்படி முடியும்? அவரது இன மக்கள் மட்டும் ஓட்டளித்து விட்டால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆண்டு விட முடியுமா?பா.ம.க.,வின் மீது ஜாதி கட்சி முத்திரையை குத்தி விட்டு, தமிழகத்தை ஆள நினைப்பது, கை, கால்கள் இல்லாத ஒருவன், கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போல் அல்லவா உள்ளது! 

தமிழகம் தலை குனிந்தது யாரால்?

சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்... கர்ணனின் மரணத்திற்கு தானே காரணம் என்றும், தன் அண்ணனையே தான் கொன்றுவிட்டதாக அர்ஜுனன், கிருஷ்ணனிடம் கூறுவார். அதற்கு கிருஷ்ணர், 'கர்ணனை நீ மட்டுமா கொன்றாய்? உனக்கு முன் ஆறுபேர் கொன்று விட்டனர். 'அவர்கள் எல்லாம் கொன்ற பின், நீ எப்படி அவனை கொல்ல முடியும்' என்று கேட்பார். அதுபோன்று, கவர்னர் ரவி தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்' என்று, மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், அபத்தமாக பேசியுள்ளார், உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன்.இந்தியாவிலேயே முதன் முறையாக, ஒரு மாநில முதல்வர் மீது, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது கருணாநிதி மீது தான். அன்று குனிந்த தலை தான், இன்று வரை கழகத்தின் ஆட்சியில் தமிழகம் தலை நிமிரவில்லை! தொடர்ந்து மத்தியில் காங்., ஆட்சியில், '2ஜி' ஊழலில், கருணாநிதி குடும்பத்தினர் செய்த தில்லாலங்கடி வேலைகளை பத்திரிகைகளில் படித்து, பிற மாநில மக்கள், தமிழர்கள் என்றாலே ஊழல் பேர்வழிகள் என்று நினைக்கும் அளவுக்கு தமிழகத்தை தலை குனிய வைத்தவர்கள் தி.மு.க.,வினர்! அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை, ஊழல் அமைச்சர் என்று பட்டம் சூட்டி, அவர் மீது வழக்கு தொடுத்த அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பின், தமிழக முதல்வர் ஆனதும், ஊழல் பேர்வழி உத்தமர் ஆகிப் போனதும் கூட தமிழகத்தை தலை நிமிர வைத்த செயல் தானோ?பதவியில் இருந்து ஒருவர் ஓய்வு பெறும்போது, வாழ்த்தி வழி அனுப்புவது மரபு. அதன் அடிப்படையில் துணைவேந்தருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தியுள்ளார் கவர்னர். இதில் தமிழகம் தலை குனிய என்ன இருக்கிறது?'ஊருக்கு இளைத்தவனாம் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பது போல், எதற்கெடுத்தாலும், கவர்னர் மீது பழி போட்டு பேசுவது, சலிப்பையே ஏற்படுத்துகிறது. தி.மு.க., தலைமை ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்... கவர்னர் அரசியல்வாதி அல்ல; அவருக்கு இங்கு ஓட்டு வங்கியும் இல்லை. அவரை வைத்து அரசியல் செய்வதால், 10 ஓட்டுகள் கூட தேராது.பின், எதற்கு வேண்டாத இந்த வெறுப்பு அரசியல்?

இந்த நிலை என்று மாறும்?

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் டவுன் பஞ்சாயத்தில், உள்ளாட்சி தேர்தலில், 2022ல் பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில், பெண்மணி ஒருவர் வெற்றி பெற்றார்.அதேநேரம் அவர் 2005ல் மதம் மாறி, கிறிஸ்துவரை திருமணமும் செய்துள்ளார். இந்த உண்மையை மறைத்து, வார்டு மற்றும் பஞ்சாயத்து சேர்மன் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். அரசியல் சாசனமோ, பட்டியலினத்தவர் மதம் மாறிவிட்டால், இட ஒதுக்கீட்டின் பலனை பெற முடியாது என்கிறது! இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'இப்பெண் மனு தாக்கல் செய்தபோதே, தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். மாறாக, ஆளும் கட்சியின் பகடை காய்களாக செயல்பட்டுள்ளனர்' என்று கூறி, நீதிபதிகள் கண்டித்துஉள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் இந்தக் கதை தானே நடந்தது... எதிர்க்கட்சியினர் மக்களை சந்திக்க முடியாத வகையில், வாக்காளர்களை காலை முதல் மாலை வரை மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர் ஆளுங்கட்சியினர். அத்துடன், கொலுசு, ஓட்டுக்கு பணம் என எல்லாம் வெளிப்படையாகத் தானே நடந்தது?எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் பல முறை புகார் அளித்தும், ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் எடுத்தனரா? நீதிமன்றம் கூறியதுபோல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தானே செயல்பட்டனர்?அதேபோன்று, மகளிருக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், பஞ்சாயத்து, நகராட்சி, சட்டசபைகளில், அவர்களுக்காக சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால்,உண்மையில் என்ன நடக்கிறது... தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணின் கணவர், தந்தை, உடன்பிறந்தவர் என, நெருங்கிய உறவுக்கார ஆண்களே அப்பதவிகளுக்கான அனைத்து அதிகாரங்களையும் அனுபவிக்கின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் கட்சி தலைமைகள் தான், 'நாங்கள் அரசியல் சாசனத்தைக் காக்கப் பிறந்தவர்கள்' என்று மார்தட்டிக் கொள்கின்றனர். வேடிக்கை தான் போங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
மே 23, 2025 22:14

கவர்னர் ரோசையா மாதிரியிருக்க வேண்டுமென்று திமுக எதிர்பார்கிறது.


RAVINDRAN.G
மே 23, 2025 13:08

திமுகவினர் பகுத்தறிவு பேசினால் தவறு இல்லை . அது அவர்களின் கொள்கை வெங்காயம் யாரும் கேட்கக்கூடாது. அனால் கவர்னர் சனாதன தர்மத்தை பேசினால் திமுகவினருக்கு பொறுக்காது பொங்கி எழுவார்கள். அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு. திமுகவினர்தான் பெரிதுபடுத்துகிறார்கள்.


D.Ambujavalli
மே 22, 2025 03:56

கவர்னர் என்பவர் கரை வேட்டி காட்டாத கழக உறுப்பினராக , இவர்களின் அல்லக்கையாக இருக்கவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு அவர் தனிப்பட எதை செய்தாலும் விமர்சனம், ஏச்சுக்கள், கீழ்மைப்பேச்சுக்கள் இதனால் கட்சி மேலிடத்தைக் குளிர்விக்கவேண்டும் என்பது ஒன்றுதான் இவர்களின் முழுநேர வேலையாகிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை