உள்ளூர் செய்திகள்

வலிமையான பாரதம்!

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில், 26 சுற்றுலா பயணியர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த 16வது நாளில், நம் ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்குள் நுழைந்த நம் விமானங்கள் பயங்கரவாத முகாம்களை தகர்த்தெறிந்து, பத்திரமாக நாடு திரும்பியுள்ளன. எல்லாம், 25 நிமிடங்களுக்குள் முடிந்துள்ளன. இச்செய்தி கேட்டதிலிருந்தே நாடு முழுக்க ஒரே உற்சாக அலை!இந்தியர் மீது கைவைத்தால் உயிரோடு இருக்க முடியாது என்ற பாடத்தை பிரதமரும், நம் ராணுவமும் எதிரிகளுக்கு பறைசாற்றி விட்டனர். கடந்த 2004 -14ல் காங்கிரஸ் ஆட்சியில், மன்மோகன் சிங், சோனியா தலைமையின் கீழ் நாடு இருந்தபோது, பயங்கரவாதிகளால் பலமுறை நம் தேசம் தாக்கப்பட்டது. கடந்த 2008ல் மும்பை தாஜ் ஹோட்டலில், தொடர்ந்து மூன்று நாட்கள் பயங்கரவாதிகள் தாக்கியதில், பாதுகாப்பு படையினர் உட்பட, 174 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போதைய காங்., அரசு இதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றமுடியவில்லை. உலக நாடுகள் முன் பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைத்த முயற்சிகளும் பெரிதாக வெற்றி பெறவில்லை.ஆனால், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், நிலைமை மாறியது. பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டதோடு, ஒரு சில தாக்குதல்களுக்கும் தகுந்த பதிலடிகள் தக்க சமயத்தில் கொடுக்கப்பட்டன.தற்போது, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, நம் ராணுவம் தாக்கியுள்ளது என்றால், அதற்கு காரணம் தேசப்பற்றுள்ள வலிமையான தலைமை!இதே ராணுவம்தான், 2004 -14 லிலும் இருந்தது; ஆனால், வலிமையற்ற தலைமையால் கைகள் கட்டப்பட்டு இருந்தன. மோடி வந்தார்; இந்தியர்கள் யார் என்பதை உலகம் அறிந்து கொண்டது. இதோ நம் ராணுவத்தின் பலத்தை நமக்கு மட்டுமல்ல; உலகுக்கே எடுத்துக்காட்டி விட்டார் மோடி! ஒரு நாடு வலிமையான தலைமையின் கீழ் இருந்தால் தான், அந்நாட்டு மக்கள் பயமின்றி வாழ முடியும். இதை கட்சி சார்பற்று மக்கள் என்று உணர துவங்குகின்றனரோ, அன்றே நம் நாடும் வல்லரசு நாடாகும்!

கடைசி போராக இருக்கட்டும்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக எந்தவொரு நாடும் போரை விரும்புவது இல்லை. ஆனால், ஒரு நாடு, மற்றொரு நாட்டிற்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கும்போது, அதற்கு பதிலடி தருவது கட்டாயமாகிறது.அவ்வகையில், இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பிரச்னை நிலவி வந்த நிலையில், அக்., 7, 2023ல் இஸ்ரேலுக்குள் நுழைந்து, 1,200 பேரை குருவியை போல் சுட்டுக் கொன்றும், 200 பேரை பிணை கைதிகளாகவும் பிடித்து சென்றனர், ஹமாஸ் பயங்கரவாதிகள். அதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து, காசாவை கைப்பற்றி, இன்று வரை ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது, இஸ்ரேல். அதுபோன்றே ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. உலகளவில் ராணுவ பலத்தில் முதல் மூன்று இடங்களில் ரஷ்யா இருந்தாலும், 2024ல் மட்டும் 45,287 ராணுவ வீரர்கள் இப்போரில் உயிரிழந்து உள்ளனர். உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின், 1,06,745 வீரர்களை அந்நாடு இழந்துள்ளது.நாட்டுக்காக உயிர் துறப்பதை எந்தவொரு ராணுவ வீரரும் பெருமையாகவே கருதுவர்; அதற்காக வருந்துவதில்லை. ஆனால், நம் நாட்டை பொருத்தவரை போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளே அதிகம்.கடந்த 1965,1971 மற்றும் 1999ல் என, மூன்று முறை மட்டுமே பாகிஸ்தான் நம்மோடு நேரடியாக சண்டையிட்டு, படுதோல்வி அடைந்தது. போரில் நம்மை வெல்ல முடியாத காரணத்தால், பயங்கரவாதத்தை ஊக்குவித்து, அவர்களின் வாயிலாக, நம்மை தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளது.மத அடிப்படையில் இங்குள்ள சிலர், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், காஷ்மீரில் அவர்களுக்கு சாதகமான ஆட்சி நடைபெறுவதே பயங்கரவாதிகள் எளிதாக நம் நாட்டிற்குள் ஊடுருவ காரணம். இதன் உச்சம் தான் கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதல்!எப்போது நம் ராணுவம் அதற்கான பதிலடியை தரும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி, தரைமட்டம் ஆக்கியுள்ளது, நம் ராணுவம். போரில் இருபுறமும் உயிர் இழப்புகள் ஏற்படலாம்; அது தவிர்க்க முடியாது. ஆனால், இம்முறை நம் ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற வேண்டும். இதுவே, பாகிஸ்தானுடன் நாம் புரியும் கடைசி போராக இருக்க வேண்டும்!

கேரள முதல்வரிடம் இருந்து கற்று கொள்ளுங்கள்!

சுக.மதிமாறன், நத்தத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'நாட்டிற்கே முன்னோடி மாநிலம்' என மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின், அவரது, 'இண்டியா' கூட்டணியில் உள்ள கேரள முதல்வரை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கேரளாவை போன்று தானே தமிழகமும் இயற்கை சீற்றங்களை சந்தித்துள்ளது. பேரிடர் நிதியில் இருந்து இரு மாநில அரசுகளும் கோரிய தொகை நியாயமற்றதாக இருந்ததால், மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தில் மத்திய அரசு நிதி வழங்கிய போதும், கேரள முதல்வர் பினராய் விஜயன், மாநில நலனுக்காக கவர்னருடன் டில்லி சென்று, மத்திய நிதியமைச்சரை சந்தித்து, மாநிலத்திற்கான நிதியை கோரினார்; பிரதமரை சந்தித்தார். சமீபத்தில், விழிஞ்ஞம் துறைமுக திறப்பு விழாவில், பிரதமருடன் பங்கேற்று, சுமூகமாகவே நடந்து கொண்டார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறு சீரமைப்பு என்று இல்லாத ஒரு பிரச்னையை கிளப்பி, அனைத்து கட்சி தலைவர்களுடன் டில்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், பிரதமரே ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வந்தபோது, அதில் பங்கேற்காமல், திட்டமிட்டே ஊட்டிக்கு சென்றார். உண்மையிலேயே தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை, நிதி பற்றாக்குறை பிரச்னைகளை பேசுவதாக இருந்திருந்தால், ராமேஸ்வரம் வந்த பிரதமரிடம் இதுகுறித்து பேசாமல் ஊட்டி சென்றது ஏன்?இப்படி மத்திய அரசிடம் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தால், தமிழகம் எப்படி முன்னேற்றம் காணும்!சிந்திப்பாரா முதல்வர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
மே 10, 2025 09:58

பாரத ரதமர் மோடி ஜி அவர்களின் தலைமையில் இந்தியாவும் இந்திய ராணுவமும் மிக சிறப்பான செயல்களை செய்துகொண்டுவருகின்றன. பல வருடங்களாக இருந்துவந்த தீவிரவாதம் இந்திய பகுதியில் தாக்குதல் இந்தியாவின் முன்னின்ற பெரும் சவால் . தீவிரவாதிகளை வளர்க்கும் நாடு எதுவாயினும் ஒடுக்கப்படவேண்டும் . இஸ்ரேல் போன்று காஜா பகுதி தரைமட்டமாக்க அழித்தது போல், இந்தியாவிற்கு தேவையில்லாத பாகிஸ்தானும் அழி க்கப்படவேண்டும். இதில் இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இந்தியனாக ம ட்டும் இருத்தல் வேண்டும்


D.Ambujavalli
மே 10, 2025 03:55

மாநிலத்து பிரசனைகளுக்காக பிரதமரை சந்திக்க மாட்டார் ஆனால் ‘சனாதன’ பேச்சுக்காக மகன் கோர்ட்டு கோர்ட்டாக ஏறுவதை நிறுத்த, தங்கள் மீது ED ரெய்டு பாயாதிருக்க என்றால் மட்டும் ஒரே நாளில் எட்டு முறைகூட டில்லிக்குப் பார்ப்பார்


முக்கிய வீடியோ