உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வீரியமல்ல; காரியமே பெரிது!

வீரியமல்ல; காரியமே பெரிது!

என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., யாரையும் சார்ந்ததில்லை; எங்களை நாடித்தான் எல்லாரும் வருவர். வரும் 2026 சட்டசபைத் தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்திப்போம்' என்று கூறியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி.எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா காலத்தில், மக்கள் செல்வாக்குடன், வலுவான கட்சியாக இருந்தது, அ.தி.மு.க., அதனால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் போட்டி போட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது.ஆனால், பழனிசாமி பொதுச் செயலர் ஆனபின், தேர்தல்களில் அடைந்த தொடர் தோல்விகளால், அக்கட்சி வலுவிழந்து விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை!இந்த லட்சணத்தில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க எத்தனை கட்சிகள் முன்வரும்? தற்போது, கூட்டணியில் இருப்பது தே.மு.தி.க., மட்டுமே!பா.ம.க.,வைப் பொறுத்தவரை எப்போது என்ன முடிவு எடுப்பர் என்று, அவர்களாலேயே உறுதியாக கூற முடியாது. கிருஷ்ணசாமி தலைமையில் இயங்கும் புதிய தமிழகம், மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி அல்ல! அப்படிப்பார்க்கும் போது, தமிழகத்தில் இன்று மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது பா.ஜ., மட்டுமே!இதில், இவர் எப்படி வலுவான கூட்டணியை உருவாக்க முடியும்? அ.தி.மு.க., - பா.ஜ., - அ.ம.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால், 2026ல் நடைபெறப் போகும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியை மண்ணைக் கவ்வ வைக்க முடியும்!அதை விடுத்து, 'நாங்கள் யாரையும் சார்ந்து இருக்க மாட்டோம்' என்று பழனிசாமி வீராப்பு பேசினால், வரும் சட்டசபை தேர்தலில், இப்போது அ.தி.மு.க.,விடம் இருக்கும் தொகுதிகளும் பறிபோய்விடும்!வீரியம் பெரிதல்ல; காரியம் மட்டுமே பெரிது என்பதை பழனிசாமி உணரவேண்டும். அதுதான், அவருக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லது!

சரியா அமைச்சரே?

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, போரூர் அரசு மருத்துவமனையில், தன் மகனின் காது வலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற நடிகர் கஞ்சா கருப்பு, அங்கு மருத்துவர்கள் இல்லை என்றதும், 'இங்கு மருத்துவர்களே இல்லை; செத்துப்போன பிணங்களுக்குத் தான் மருத்துவம் பார்க்கின்றனர்' என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் வருவோருக்கு சிகிச்சை அளிக்க யாருமே இல்லையே என்ற விரக்தியில் அவர் புலம்பியுள்ளார். இதற்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், 'கஞ்சா கருப்பு, தன் மகனுடன் சிகிச்சைக்காக சென்றபோது, மருத்துவர்கள் உள்ளே தான் இருந்திருக்கின்றனர். 'ஆனால், அவர் மருத்துவர்களே இல்லை என்பது போல், சினிமா வசனம் பேசிவிட்டு சென்று உள்ளார். இதற்கு மேலும் கிளறினால், அவருக்குத்தான் பாதிப்பு' என்று மிரட்டல் விட்டுள்ளார்.மருத்துவம் பார்க்கும் இடத்தில் மருத்துவர் இல்லை என்றால், யாராக இருந்தாலும் ஆதங்கத்தில் புலம்பத்தான் செய்வர். அதற்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில், 'இதற்கு மேலும் கிளறினால்...' என்று மிரட்டல் விடுவது சரியல்ல!இந்த வீரத்தை கருவில் இருக்கும் குழுந்தையின் பாலினம் குறித்து கூறிய யு - டியூபர் இர்பானிடம் ஏன் காட்டவில்லை?பிரசவ அறைக்குள், மருத்துவரின் கத்தியை வாங்கி, தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, அதை வீடியோ எடுத்து வெளியிட்டாரே... அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் இந்த அமைச்சர்?பிரச்னை பெரிதாகிய போது, 'மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் மன்னிக்க மாட்டோம்' என்று வீரவசனம் பேசியவர், அதே இர்பான், மறுநாள் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதும், 'இர்பான் என்ன கொலையா செய்து விட்டார்?' என்று பம்மிய நேர்மையாளர் இவர்!அது சரி... திராவிட மாடல் ஆட்சியில் ஒரு அமைச்சர் இப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம்; பேச்சு, கருத்து சுதந்திரம் எல்லாம் கழகத்தினருக்கு மட்டும் தான்! தி.மு.க.,வினரின் உருட்டல், மிரட்டல் எல்லாம் அப்பாவி பொது மக்களிடமும், எதிர்க்கட்சியினரிடமும் தான்!பாவம்... கஞ்சா கருப்பு ஏதோ ஆதங்கத்தில் புலம்பியதற்கு இப்படி ஒரு மிரட்டலா? 

நினைவில் கொள்ள வேண்டும்!

எஸ்.பி.குமார், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், 'நிதி பங்கீடு செய்வதில், மத்திய அரசு தமிழக அரசுக்கு அல்வா கொடுத்துள்ளது' என்று கூறியுள்ளார்.'பிறரை நோக்கி ஒரு விரலை நீட்டும் போது, ஏனைய நான்கு விரல்களும் நம்மையே காட்டும்' என்பதை மறந்து விட்டார், முதல்வர். இந்தியாவில், முதன்முதலில் மக்களுக்கு அல்வா தந்த கட்சியே தி.மு.க., தான்!கடந்த 1967 தேர்தலில், 'ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி தருவோம்' என்று வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்தவர் அண்ணாதுரை.நம்பி ஓட்டளித்த மக்களுக்கு, 'மூன்றுபடி லட்சியம்; ஒருபடி நிச்சயம்' என, அல்வா கொடுத்தார்.அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியோ, ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் உட்பட ஏகப்பட்ட அல்வாவை திகட்டத் திகட்டக் கொடுத்தார். ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்முன், 'அனைத்துப் பெண்களுக்கும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழக்கப்படும்' என்றார்.ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கழித்த பின், ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து, பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அல்வா கொடுத்தார். ஸ்டாலின் சகோதரி கனிமொழியோ, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சாராய ஆலைகளை மூடுவது தான் முதல் வேலை' என, 'பில்டப்' கொடுத்தார்; கழகம் ஆட்சி பீடத்தில் அமர்ந்தபின், தெருவிற்கு நாலு டாஸ்மாக் கடைகளை அமைத்து, ஓட்டுப்போட்ட மக்களுக்கு அல்வா கொடுத்தது.துணை முதல்வர் உதயநிதியோ, 'நீட் தேர்வு விலக்கு, நகை கடன் தள்ளுபடி' என கொடுத்த அல்வாவை, இன்று வரை ஜீரணிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.கடைசியாக, பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு கொடுத்த அல்வாவோ, திருவெல்வேலி அல்வாவையும் மிஞ்சிய சிறப்பு அல்வா!இப்படி, மொத்த அல்வா கடையையும் நடத்தும் திராவிட மாடல் அரசு, வாங்கிய பணத்துக்கு கணக்கு காட்டாமல், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தமிழக மக்களுக்கு திகட்டத் திகட்ட அல்வா கொடுப்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
பிப் 21, 2025 11:18

எடப்பாடியார் முஸ்லீம் ஒட்டு பிஜேபி வந்தால் போய்விடும் என்று எண்ணுகிறார். முஸ்லீம் ஒட்டு திமுகவிலிருந்து மாறாது. ஏனெனில் தொடர்ந்து முஸ்லிமை காப்பது போல் இருக்கிறார்கள். பெரிய கோவில்களில் பிரச்சனை செய்து மறைமுக ஆதரவு தந்து ஓட்டை ஈர்க்கிறார்கள். இது பழனிசாமி அவர்களுக்கு எப்பொழுது புரியும் என்பது புரியவில்லை. பிஜேபி ஓட்டும் சமூக ஓட்டை விட அதிகம் என்பதும் அவருக்கு புரியம். இணைவார் பிஜேபி யுடன். அண்ணாமலை சற்று அடக்கி வாசிக்க வேண்டும் கூட்டணி விஷயத்தில். இருவரும் திமுகவிடம் வருமானம் பெற்றால் இப்படியே இருப்பார்கள்.


D.Ambujavalli
பிப் 21, 2025 06:41

'இந்தத் தொல்லை தங்க முடியவில்லை இந்தா, பிடியுங்கள் வெள்ளை அறிக்கை' என்று கொடுத்துவிட்டு கம்பீரமாகக் குற்றம் சாற்றாமல், முதல்வர் பாமர மக்களிடம் சும்மா கைகாட்டிப் பேசி நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? அப்படி செய்தால் எந்தெந்தப் புல்லுக்குப் பாய்ந்தது என்று தெரிந்துவிடுமே என்ற தயக்கம் போலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை