உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / டாடாவுக்கு நிஜமான வீரவணக்கம் இதுதான்!

டாடாவுக்கு நிஜமான வீரவணக்கம் இதுதான்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக ஒருவர், மிகவும் ஆடம்பரமாக நடந்து கொண்டால், 'இவர் பெரிய டாடா குடும்பத்தில் பிறந்தவர்...' என, கிண்டல் அடிப்போம்.அந்த வகையில், சராசரி மனிதர் கூட உச்சரிக்கும் வகையில், கடின உழைப்பால், அளப்பரிய பேரும், புகழும் சேர்த்தவர், ரத்தன் டாடா. இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என்று, பல வணிகங்களில் புகழ் நாட்டியவர்; அதற்கு அடிநாதம், தரம்!டாடா பெயரில் உற்பத்தி செய்யப்படும் எந்த பொருளுக்கும் சந்தையில் தனி இடம் உண்டு.தேசப்பற்று என்பது டாடாவின் தனிக் குணம். அப்துல் கலாம் போல, இந்தியாவை விட்டு வெளியே வேலை செய்ய மறுத்தவர்.தன் சொந்த நிறுவனத்தில், சிறிய பொறுப்புகளை ஏற்று, படிப்படியாக அதில் உயர்ந்தார். நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில், 21 ஆண்டுகள் கோலோச்சி, அதன் லாபத்தை, 50 மடங்கு உயர்த்தி சாதித்தவர்.கார் உற்பத்தியில், ஒரு லட்சத்துக்கு நானோ கார் திட்டத்தை அறிமுகம் செய்து சாதனை படைத்தார்.கொடை வள்ளலாக இருந்து, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, 235 கோடி ரூபாய் ஒதுக்கி உதவி செய்தது, தான் பட்டம் படித்த ஹார்வர்டு பிசினஸ் பள்ளிக்கு, 491 கோடி ரூபாய் அளித்தது சிறந்த சான்று. ரத்தன் டாடாவை முன்னுதாரணமாகக் கொண்டு நம் இளைஞர்கள், உழைப்புக்கும், அறிவார்ந்த சிந்தனைக்கும் மட்டும் இடம் கொடுத்து முன்னேற்றப் பாதையில் நடப்பதுதான், உண்மையிலேயே அவருக்குச் செலுத்தும் வீர வணக்கம்.

ஐடியா கொடுக்க ஆள் இல்லையோ?

ரவிசங்கர் டிராவிட், ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போர்டு மோட்டார், சிறந்த கார் தயாரிப்பு நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.ஒரு வாடிக்கையாளரிடமிருந்து அந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'நான் உங்கள் காரை சமீபத்தில் வாங்கினேன். என் குடும்பத்திற்கு விருப்பமான ஒரு ஐஸ்கிரீம் கடையிலிருந்து, வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் வாங்குவது வழக்கம். வெண்ணிலா வாங்கும்போதெல்லாம், என் கார் எளிதாக, 'ஸ்டார்ட்' ஆகி விடுகிறது; ஸ்ட்ராபெர்ரி வாங்கும்போதெல்லாம் மக்கர் அடிக்கிறது. விந்தையாக இருக்கிறது' என்று எழுதி இருந்தார்.அதன் இயக்குனர், அக்கடிதத்தைக் குப்பையில் போடாமல், காரை வடிவமைத்த நிபுணரிடம் கொடுத்து, என்னவென ஆராயச் சொன்னார்.அவரும் அதே கடையில், அதே பிராண்ட் ஐஸ்கிரீம் வாங்கினார்; அவருக்கும் அதே நிலை! விஷயம் புரிந்துவிட்டது... வெண்ணிலா ஐஸ்கிரீம், கடையின் முன்பகுதியில் இருந்தது; ஸ்ட்ராபெர்ரி பின் பக்கம் இருந்ததால், அதை எடுத்து வர நேரம் ஆனது; அந்த தாமதத்தால் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. பிரச்னையை புரிந்து கொண்ட நிபுணர், காரின் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்தார்!இன்னொரு உண்மை சம்பவம் இது...ஜப்பானில், சோப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், வாடிக்கையாளர் சோப் வாங்கினார். வீட்டிற்கு வந்து பிரித்தபோது, வெறும் கவர் மட்டுமே இருந்தது; சோப் இல்லை. நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார்.இக்குறையைத் தீர்க்க, அந்த நிறுவனம் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து, எக்ஸ் - ரே கருவியை வாங்கி பயன்படுத்தத் துவங்கியது. ஊழியர் ஒருவர் இதைப் பார்த்து, 'எதுக்குப்பா இவ்வளவு செலவு... கன்வேயர் பெல்ட்டில், கவர் பொருத்தப்பட்ட சோப் வரும் பாதையில், வேகமாக சுற்றும் மின் விசிறியை வைத்தால், சோப் இன்றி வரும் கவர்கள் பறந்து விடும்; சோப் இருக்கும் பொட்டலங்கள் கீழே விழாதே...' என்று சொன்னார். நிர்வாகத்தினர்விக்கித்து நின்றனர்.இப்படி மாற்றி யோசித்து ஐடியா கொடுக்க, தமிழக அரசிடம் ஆட்கள் இல்லையா; அல்லது நிர்வாகம் கேட்க மறுக்கிறதா? மழைநீர் கால்வாய் நடுவே, மின்கம்பம் இருந்தால் அப்புறப்படுத்தாமல் வேலை நடக்கிறதே... அதற்காக கேட்கிறேன்!

அத்து மீறினால் பொருளாதாரத் தடை உத்தரவு போடுங்கள்!

ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் அமைதி பெற, நாடுகளிடையே நேசம் வளர்க்க, ஒற்றுமை வாயிலாக வளர்ச்சியை வலியுறுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான், ஐக்கிய நாடுகள் சபை.இன்று போரிடும் எண்ணத்துடன் இயங்கும் நாடுகள், ஐ.நா., சபையை மதிப்பதே இல்லை. போரை நிறுத்த மனமில்லாதது மட்டுமின்றி, போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட, ஐ.நா., சபையை இந்நாடுகள் அனுமதிப்பதில்லை.இத்தனை குரூர எண்ணம் கொண்டவர்களாக உள்ள னரே என நினைக்கும்போது, மனம் வலிக்கிறது.போரிட விரும்பும் நாடுகள், வீரர்களை எதிரெதிரே சந்திக்க வைத்து போராடலாமே? அதை விடுத்து, அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் குண்டு வீசுவதும், அவர்களை பிணைக்கைதியாக வைத்து தாக்குதல் நடத்துவதும் எவ்விதம் நியாயம்? பகுத்தறிவு அற்ற வர்கள்தான், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்.இந்த, 'அட்ராசிட்டி' நாடுகள் மீது நடவடிக்கை எடுத்து, அனைத்து பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்த, ஐ.நா.,வுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.அதேபோல், நம் நாட்டிலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நடப்போருக்கு, கடும் தண்டனை அளிப்பதோ, பொருளாதாரத் தடையை ஏற்படுத்து வதோ நடந்தால், பெரும்பாலான குற்றங்களின் எண்ணிக்கை குறையும்.

தன் நிலை தெரியுமா ராகுலுக்கு?

பி.ராஜேந்திரன், சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: நினைவிருக்கிறதா... மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானிக்கு முத்தமிடுவது போல், பார்லி.,யிலேயே சைகை காட்டினார் ஒருவர். பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுப்பது போல் பேசி, இறுதியில் தன் கட்சிக்காரர்களிடம் கண்ணடித்து நாற்காலியில் அமர்ந்தவர்.பிறிதொரு சமயத்தில் பிரதமரின் கைகளில் முத்தமிட முயற்சித்தார்.சமீபத்தில் அமெரிக்கா செல்வதற்கு முன்பு வரை, இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் எனப் பேசி வந்தவர், கட்சியினரே இடித்துரைத்தவுடன், 'இல்லே... 50 பர்சன்ட் ஒதுக்கீடு' என, 'பிளேட்'டை மாற்றிப் போட்டவர்.'நாம ரெண்டு பேரும் சேர்ந்து, சைக்கிள் ஓட்டணும் பிரதர்' என, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆசை வார்த்தை போட்டார்.அமெரிக்கா சென்று, 'இந்தியாவுல யாருமே டர்பன் கட்ட முடியலே...' என பேசினார்; இங்கே டில்லியில், இவர் வீட்டின் முன், சீக்கியர்கள் தர்ணா செய்யத் துவங்கினர். 'பிரதர், இப்படி பேசினா நீங்க இந்தியா திரும்பறதே கஷ்டம்' என, நெருக்கமானவர்கள் சொல்லி விட்டனர் போலும்; அதன்பின் வாய் மூடிவிட்டார்.நம் நாட்டுக்கு எதிராகப் பேசுபவர்களை சந்திப்பதில் ஆர்வம் கொண்டவர்.'ராகுல், அரசியல் அறியாதவராக, விளையாட்டுப் பிள்ளையாக, கிட்டத்தட்ட ஒரு கோமாளியாகவே இருப்பதால், அவர் பிரபலம் அடைந்துள்ளார். அவரை இளக்காரத்துடன் ரசிக்க ஒரு கூட்டம் வரத்தானே செய்யும்?' என, கேலி பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தன் நிலை இதுதான் என்பது புரியுமா ராகுலுக்கு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
அக் 13, 2024 22:35

இந்தப் பெரிய பெரிய உற்பத்திகளுக்கு ஆலோசனை வழங்குவது கிடக்கட்டும் சாலையில் நிற்கும் two wheeler காரையும் சேர்த்து சாலை அமைத்த மஹா புத்திசாலிகளுக்கு என்ன அவார்டு கொடுக்கலாம் ?


Dharmavaan
அக் 13, 2024 13:32

ராகுல்கான் எதோ பெரிய மேதை போல் ரயில் விபத்து பற்றி கருது சொல்கிறார்


veeramani
அக் 13, 2024 09:41

பதின்முது ராகுல் காந்தி ..ஐயன் லேடி இந்திராவின் பேரன். ஆனாலு பொதுஅறிவு இல்லையே .. எங்கு சென்றாலும் ஏளன பேச்சு, அறிவிலி செயல்கள், வெட்டி பேச்சு, இந்திய இறையாண்மையிக்கு ஒவ்வாத பேச்சு என தேவையில்லா செயல்கள் செய்வது வருத்தமாக உள்ளது புரட்சித்தலைவர் சொன்னது போல் அவரே திருந்தாவிட்டால்...


Sathyanarayanan Sathyasekaren
அக் 13, 2024 20:46

வீரமணி அவர்களே இந்திரா கான் போலி காந்தி, ஐயன் லேடி என்பது கட்டமைக்கப்பட்ட பொய். எப்படி ஈரோடு வெங்காயத்திற்கு யுனெஸ்கோ அவார்ட் கொடுக்கப்பட்டது என்ற பொய்யை போன்றது. முக்கியமான நேரங்களில் இந்திரா கான் போலி காந்தி எடுத்த தையிரியமில்லாத முடிவிகளால நாம் இன்றுவரை துயரங்கள் அனுபவிக்கிறோம். உதரணமாக அமெரிக்கா அழுத்தத்திற்கு பயந்து கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது, பங்களாதேஷ் போரில் ராணுவ கைதிகளை, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் bargain இல்லாமல், அதாவது, பாக்கிஸ்தான் சிறையில் இருந்த நமது ராணுவவீரர்களை விடுவிக்கவேண்டும், POK இல் இருந்து வெளியேறவேண்டும், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் சும்மா விடுதலை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அப்படிபட்டவர் எப்படி ஐயன் லேடி ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை