உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது உங்கள் இடம்: அக். 21

இது உங்கள் இடம்: அக். 21

மழை வரும் முன்

நடவடிக்கை தேவை!

முனைவர் பெ.வை.சே. கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் சாலைகளில் நீர் தேங்குதல், போக்குவரத்து பாதிப்பு, தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் போன்ற பிரச்னைகள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன் வடிகால்வாய்களை துார்வாருதல், நீர்நிலைகளைப் பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளைக் கண்டறிதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், மழை துவங்கிய பின்தான், இங்கு, அவசரமாகப் பணிகளே நடைபெறுகின்றன. வெறுமனே மழைக்கால எச்சரிக்கை விடுவதுடன் நின்று விடாமல், மழைநீர் வடிகால்வாய்கள் முறையாகச் செயல்படுகின்றனவா, அவசர உதவி குழுக்கள் தயார் நிலையில் உள்ளனவா, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் வழிகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ள இடங்கள், வெள்ளம் சூழக்கூடிய சாலைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள ஆபத்தான பகுதிகள் ஆகியவற்றில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மழைக்காலத்தில் அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பதைவிட, அந்த நிதி, மக்களின் பாதுகாப்புக்கு எவ்வளவு பயனளித்தது என்பதே முக்கியம். இயற்கையை தடுக்க முடியாது; ஆனால் இயற்கைப் பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும். அதற்கு தொலைநோக்குத் திட்டமிடலும், வெளிப்படையான செயல்பாடும், அதிகாரிகளின் பொறுப்புணர்வும் தேவை. மழை நின்ற பின் ஆய்வு நடத்துவதை விட, மழை தொடங்குவதற்கு முன், மக்களைக் காக்கும் நிர்வாகமே மக்களின் நம்பிக்கையை பெறும்!

lll

சர்வ நிச்சயம்!

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது, காங்கிரஸ் தலைமையிலான, ‘இண்டி’ கூட்டணி! கடந்த 7ம் தேதி, காங்., – எம்.பி., ராகுல் தலைமையில், போராட்டக் குழுவினர், ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணியாக சென்ற போது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் மற்றும் அவர் தங்கையும், காங்., – எம்.பி.,யுமான பிரியங்காவை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது, போலீசார் மீது ராகுல் தாக்குதல் நடத்தியதுடன், போராட்டத்தின் போது பெண் போலீசை, பிரியங்கா முழங்கையால் தாக்குவதும், ராகுல், பெண் போலீஸ் முதுகை பிடித்து தள்ளிவிடும் காட்சியும் தொலைக்காட்சிகளில் வெளிவந்து, முகம் சுளிக்க வைத்தது. ஒரு தேசிய கட்சிக்கு தன்னை தலைவர் என்று சொல்லி கொள்ளும் ராகுல், மூன்றாம் தர மனிதர்களைப் போன்று நடந்து கொண்டது, அவர் மீதான மதிப்பையே குறைக்கும் விதமாக உள்ளது. இதுபோன்று தான், 2024 டிசம்பரில் பார்லிமென்ட் வளாகத்திற்கு வெளியே, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில், பா.ஜ., – எம்.பி.,க்களை கீழே தள்ளி, தாக்குதல் நடத்தினார், ராகுல். கடந்த 2025 ஜன.,யில், ‘அசாம் பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யில், காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறி தடுப்புகளை உடைத்து முன்னேறியதற்காக, ராகுல் மீது வழக்கு பதியப்பட்டது. இப்படி, ஒரு தேசிய கட்சியின் தலைவரே சட்டத்தையும், காவல் துறையையும் மதிக்காமல், ரவுடித்தனமாக நடந்து கொண்டால், அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட தொண்டர்களிடம் எப்படி அமைதியான, ஆக்கப்பூர்வமான செயல்களை எதிர்பார்க்க முடியும்? இவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றால், நாடு அராஜகத்தின் பிடியில் சிக்கி, இன்னும் சில நுாற்றாண்டுகள், வளர்ச்சியில் பின்தங்கி சென்று விடும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ