உள்ளூர் செய்திகள்

 இது உங்கள் இடம்

பாடம் கற்பிக்க வேண்டும்!எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து மத வெறுப்பு போன்ற உளுத்துப்போன திராவிடக் கொள்கைகள், இனிமேல் தமிழகத்தில் எடுபடாது.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நன்கு ஆய்வுசெய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வாயிலாக ஹிந்துக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.இதைப் பொறுக்காத அமைச்சர் ரகுபதி, தீபம் ஏற்றும் நடைமுறையை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு ஹிந்துக்களின் உணர்வை கொச்சைப்படுத்தினார். கூடவே, திருப்பூர் அருகில், பக்தர்களின் எதிர்ப்பை மீறி பழமையான முருகன் கோவிலை இடித்து தள்ளியது, தி.மு.க., அரசு.கடவுளை இழிவுபடுத்தும் நாத்திகர்களும், மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் கோவில்களை நிர்வாகம் செய்வது நம்மைப்பிடித்த சாபக்கேடு!ஹிந்துக்களின் ஓட்டு வங்கியால் வெற்றிபெற்று, பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டே அவர்களை இழிவுபடுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், தங்களது முடிவுரையை தாங்களே எழுதத் துவங்கிவிட்டனர்.இவர்களது தீவிரமான ஹிந்து மத எதிர்ப்புக் கொள்கையை நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருப்பது, தி.மு.க.,வில் நீண்டகாலம் அங்கம் வகிக்கும் மானமுள்ள ஹிந்துக்களை இனியாவது சிந்திக்க வைக்கும்.கேரளாவில் ஹிந்து விரோத ஆட்சி நடத்தி வந்த கம்யூனிஸ்ட்களுக்கு, சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் அம்மாநில மக்கள்.மேற்கு வங்கத்தையும், திரிபுராவையும் போல கேரளாவிலும் கம்யூனிஸ்ட்கள் காலாவதியாகும் காலம் வெகுதுாரத்தில் இல்லை.நாத்திக கட்சியான கம்யூனிஸ்டுகளையும், மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியிலிருக்கும் காங்கிரசையும் காலம் காலமாக கண்மூடித்தனமாக ஆதரித்து வந்த மலையாளிகள், மாற்றி யோசிக்கத் துவங்கியுள்ளனர். தமிழகத்திலும் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும்.நாத்திகர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவித்து, இம்மண்ணின் ஆன்மிக பாரம்பரியத்தை மீட்டெடுக்க கடவுள் நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து இரட்டை வேடம் போடும் தி.மு.க.,விற்கு இத்தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்!வீசி எறியும் ரொட்டித் துண்டுகள்! பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இம்முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கு மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை, ஆண்களுக்கு கட்டணம் இல்லாத பேருந்து வசதி, இருசக்கர வாகனம் வாங்க, ஐந்து லட்சம் பெண்களுக்கு, 25,000 ரூபாய் வீதம் மானியம் என்று வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி. 'பசியில் வாடும் ஒருவனுக்கு உணவாக மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடு' என்கிறது சீன பழமொழி. அதுபோன்று, அரசின் நோக்கம் வேலை வாய்ப்பை உருவாக்கி, மக்களை உழைக்க வைத்து, அதன் வாயிலாக அவர்கள் முன்னேற வழிகாட்டுவதாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் நிரந்தர முன்னேற்றம். காமராஜர் தன் ஆட்சிக் காலத்தில் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தான் இலவசமாக வழங்கினாரே தவிர, தேர்தலில் அதிக ஓட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எந்த இலவச திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான இரு திராவிடக் கட்சிகளும், தங்களை பெரிய வள்ளல்களாக காட்டிக் கொண்டு, தொலைநோக்கு சிந்தனை இன்றி, தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் வைத்து, மக்களை கையேந்துபவர்களாக மாற்றி வைத்துள்ளனர். இலவச திட்டங்களுக்கான பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட்டிருந்தால், வறுமை என்றோ ஒழிந்திருக்கும்; இன்று, 10 லட்சம் கோடி கடனும் வந்திருக்காது. இலவச கலாசாரத்திற்கு எதிராக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டும்தான் குரல் எழுப்பி வருகிறார். வேறு எந்த கட்சியும் வாய் திறப்பதில்லை. எனவே, ஆண்கள், பெண்கள், மாணவ - மாணவியர் என்று பல தரப்பினருக்கும் இலவசங்களை வழங்கி அவர்களை மகிழ்விக்கும் திராவிட கட்சிகள், இனி, டாஸ்மாக்கின் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ள கிட்டத்தட்ட ஒரு கோடி, 'மது' பிரியர்களின் ஓட்டுகளை கவர, மாதம், 2,000 ரூபாய்க்கு மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என்று கூட அறிவிக்கும்! நாடு கொள்ளையர்களின் கூடாரமானால், வீசி எறியும் ரொட்டித் துண்டுக்கு மக்கள் கையேந்த தானே வேண்டும்! நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கு பாய்ந்து விடும்! என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 தேர்தலில், 'ஐந்து பவுனுக்கு கீழுள்ள நகைக்கடன் தள்ளுபடி' என, தி.மு.க., வாக்குறுதி தந்தது போல், வரும் சட்டசபை தேர்தலிலும் விவசாய கடன் தள்ளுபடி என பிரதான கட்சிகள் வாக்குறுதி தரும் என நம்புகின்றனர், விவசாய கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியோர். பொதுவாகவே, எப்படியும் அடுத்து வரும் அரசு, கடனை தள்ளுபடி செய்து விடும் என்ற நம்பிக்கையில், அதிகபட்சமாக எவ்வளவு விவசாய கடன் வாங்க முடியுமோ, அதை வாங்கி விடுகின்றனர். கடன் வாங்க பெரிதான விதிமுறைகளும் இல்லை. விவசாய நிலம் இருப்பதற்கான நிலவரி ரசீது கொடுத்து, கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக சேர்ந்து, எவ்வளவு கடன் பெறுகிறோமோ அதற்கு தக்க வைப்பு தொகை கட்ட வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்க வேண்டும் என்றால், 10,000 ரூபாய் வைப்பு தொகை கட்ட வேண்டும். இப்படி வாங்கும் கடனை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால் வட்டி கிடையாது; காலம் தவறினால், வட்டியுடன் கடனை திரும்ப செலுத்த வேண்டும். இந்நிலையில், தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், எந்த கட்சி, விவசாய கடன் தள்ளுபடி என சொல்லும் என்று கடன் வாங்கியோர் ஆவலாக காத்திருக்கின்றனர். அதன்விளைவாக, வாங்கிய கடனை காலம் கடந்தும் கட்டவில்லையே என கூட்டுறவு வங்கியினர் கேட்டால், 'அதுதான் தேர்தல் வருதே... கடன் தள்ளுபடியாகி விடும்' என, கூலாக கூறுகின்றனர். வாங்கிய கடனை நேர்மையாக செலுத்த மறுத்து, குறுக்கு வழியில் பலனடைய துடிக்கும் வகையில், அரசியல் கட்சிகள் மக்களை மாற்றி வைத்துள்ளன. இந்த தள்ளுபடிகளால், சின்னச் சின்ன கூட்டுறவு சங்கங்கள் திவாலாகி விடுகின்றன. விவசாய கடன் தள்ளுபடியால் பலர் பலனடைகின்றனர் என்பது உண்மை தான்; அதேநேரம், அவர்கள் அத்தனை பேரும் விவசாயிகள் அல்ல என்பதை, அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கு போய் விடுவது போல், எளிய விவசாயிகளுக்காக அறிவிக்கப்படும் இச்சலுகையும் பயனற்று போய்விடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அரவழகன்
ஜன 25, 2026 04:50

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் தேர்தல் வருகிறது விவசாய கடன் தள்ளுபடி வரும் என பலர் ஆவலாக காத்திருக்கிறார்கள்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை