நுால் தேர்வில் வெளிப்படைத்தன்மை அவசியம்!
முனைவர் பெ.வை.சே.கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, சாலை, பாலம், தொழிற்சாலை போன்ற கட்டமைப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் வாய்ந்தவை, அறிவு வளர்ச்சிக்கான நுால்களும். நல்ல நுால்கள், நல்ல சிந்தனைகளை உருவாக்குகின்றன; நல்ல சிந்தனைகள், நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன. எனவே, நுால் தேர்வு என்பது சாதாரண நிர்வாகப் பணிஅல்ல; அது எதிர்காலத் தலைமுறையின் அறிவு வளர்ச்சியோடு தொடர்புடையது. ‘தினமலர்’ நாளிதழில் வெளியான செய்தியில், கோவை ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு நுால் கொள்முதல் தொடர்பான முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை, முதல்வர் விஜய் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுால்களை வாங்குவதற்காக அரசு நிதி ஒதுக்கும்போது, அந்த நுால்கள் உண்மையிலேயே தரமானவையா, மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ளவையா என்பதை, ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில பதிப்பகங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவது, ஒரே நபரின் பெயரில் பல பதிப்பகங்கள் இயங்குவது போன்ற புகார்கள் எழுந்தால், அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. அரசு நுாலகங்களுக்கு வாங்கப்படும் நுால்களின் பட்டியல், விலை, பதிப்பகம், தேர்வுக்கான காரணம் ஆகியவை, பொதுமக்கள் அறியும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட வேண்டும். நுால் தேர்வுக் குழுவில், கல்வியாளர்கள், நுாலகர்கள், மொழி வல்லுநர்கள், வாசகர்கள் என, அனைத்து தரப்பினருக்கும், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். மேலும், நுால் தேர்வில் அரசியல் சார்பு இருக்கக் கூடாது. எந்த எழுத்தாளரின் நுாலாக இருந்தாலும் அதன் தரம், கருத்துச் செறிவு, சமூக பயன் ஆகியவற்றின் அடிப்படையில், மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கருத்து வேறுபாடு கொண்ட நுால்களுக்கும், நுாலகங்களில் இடமளிப்பது ஜனநாயகத்தின் அடையாளம். குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசியல் விமர்சனங்களைக் கடந்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், ஆதாரமின்றி யாரையும் குற்றவாளியாகச் சித்தரிக்கக் கூடாது. அரசு நுாலகங்கள் என்பவை, வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கும் இடங்கள் மட்டுமல்ல; ஏழை மாணவர்களின் அறிவுக் கதவுகளைத் திறக்கும் கோவில்கள். நுால் கொள்முதலில் முறைகேடு நடந்தால், அரசு பணம் மட்டுமல்ல; அறிவு வளர்ச்சியும் கொள்ளையடிக்கப்படுகிறது என்று பொருள். நல்ல நுால்களைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மை இருந்தால் தான், நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்!