உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / 10 ஆண்டுகளாக எம்.பி.,க்கள் செய்தது என்ன?

10 ஆண்டுகளாக எம்.பி.,க்கள் செய்தது என்ன?

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல் கட்சிகளுக்கு என்று தனிக் கொள்கைகள் ஏதும் இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் அமர, அரசியல் கட்சித் தலைவர்கள் எதையும் விட்டுக் கொடுக்க தயாராக உள்ளனர் என்பது தான் உண்மை. இவர்களை நம்பி, இவர்களது பின்னால் செல்லும் அப்பாவி தொண்டர்கள் நிலை தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.உதாரணமாக, தி.மு.க.,வில் அன்று போர்ப்படை தளபதியாக சுற்றி வந்த வைகோவை கட்சியை விட்டு வெளியேற்ற அவர் மீது, கொலைப்பழி சுமத்தப்பட்டது நாம் அறிந்ததே.அவரும், வீராவேசமாக ம.தி.மு.க., என்ற கட்சியை ஆரம்பித்து, வேகமாக வளர்ந்தார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக நினைக்கப்பட்டவர், பிற்காலத்தில், இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து, கடைசியில் உதிரிக் கட்சிகளில் ஒன்றாகி போனார்.தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சிகளும், பா.ஜ.,தான் தங்களது பிரதான எதிரி என கூறியபடி, இரண்டு திராவிட கட்சிகளும் தரும் ஒன்றிரண்டு சீட்கள் மற்றும் சில கோடி ரூபாய் பணத்துக்காக, தங்கள் கொள்கையை துாக்கி கடாசி விட்டன.அதேபோல, ஜாதி மற்றும் மதரீதியாக செயல்படும் குட்டி கட்சிகளும், இரண்டு திராவிட கட்சிகளின் நிழலில் ஒதுங்கி, இளைப்பாறி கொள்கின்றன.நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே, தொடர்ந்து தனித்து போட்டியிட்டு, வெற்றி பெறவில்லை என்றாலும், கணிசமான ஓட்டுகளை வாங்கி வருகிறது. நடிகர் கமல் கட்சியும், கடைசியில் தி.மு.க., கூட்டணியில் சங்கமிக்க உள்ளது.எனவே, வரும் லோக்சபா தேர்தலை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியும் கொள்கை ரீதியாக சந்திக்கவில்லை. மத்தியில் ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க வேண்டும்; அதன் வாயிலாக தன் கட்சியினர், 'வளமாக' வேண்டும் என்ற ஒற்றை கொள்கையுடன் தான் இந்த தேர்தலை சந்திக்க இருக்கின்றனர்.கடந்த 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளாக, தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் எம்.பி.,க்களாக இருந்தனர். 'இவர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தனர், நமக்காக பார்லிமென்டில் குரல் கொடுத்தனரா' என்பது பற்றி வாக்காளர்கள் யோசிக்க வேண்டும்.மேலும், 'வரும் தேர்தலில், யாருக்கு ஓட்டு போட்டால், மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்' என சிந்தித்து பார்த்து, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள். பணத்துக்காகவும், ஜாதிக்காகவும், மதத்திற்காகவும் உங்கள் ஓட்டுகளை விலை பேசி விடாதீர்கள்.

உயர்த்திய ஏணியை துாக்கி எறிவதா?

வி.ராஜாமணி, பட்டமங்கலம், திருப்பத்துார், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: மதிப்பிற்குரிய அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு... கட்சியின் மூத்த மற்றும் உண்மையான தொண்டன் எழுதிக் கொள்வது...நான், 1964 முதல், 'தினமலர்' நாளிதழின் வாசகன். 1972ம் ஆண்டு கால கட்டத்தில் நம் கட்சியை எம்.ஜி.ஆர்., துவங்கிய போது, எவ்வித தகவல் தொடர்பும் இல்லாத காலம். சிலரிடம் மட்டுமே சைக்கிள் வசதி இருக்கும். நடந்து சென்று தான் கட்சிப்பணி செய்ய வேண்டும்.காலையும், மாலையும் ஆகாச வாணியில் தான் செய்தி கேட்க முடியும்; அதில், நம் கட்சி சம்பந்தப்பட்ட தகவல்கள் இடம் பெறாது. அன்றைய கால கட்டத்தில், 'தினமலர்' நாளிதழ் தான் நம்மை ஆதரித்து, அரவணைத்து சென்றது. 8 கி.மீ., சென்று நம் தொண்டர்களுக்கும் சேர்த்து, அந்த நாளிதழை வாங்கி கொடுப்பேன். அப்போது, அவர்கள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை, எழுத வார்த்தைகள் இல்லை.எம்.ஜி.ஆர்., பற்றிய செய்திகளை வெளியிட்ட, 'அலை ஓசை' நாளிதழ் இரண்டு மாதத்தில் இருந்த இடம் தெரியாமல் போனது. காரணம், அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.,வினரின் அடக்குமுறை தான்.'தினமலர்' நாளிதழை மொத்தமாக கடைகளில் வாங்கி, தீயிட்டு கொளுத்தி விடுவர். அத்தகைய கடுமையான நிலையிலும், நம் தொண்டர்களுக்கு ஆறுதலாக அமைந்தது, 'தினமலர்' நாளிதழ் தான்.'தினமலர்' நாளிதழ் படித்துக் கொண்டிருந்த நம் கட்சியின் கிளை பொறுப்பாளரை மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், நாளிதழை பறித்து கிழித்து வீசி துப்பாக்கியை காட்டி, 'ஜீப்பில் ஏறு' என்று கூறிய போது, நம் தொண்டர் ஒருவர், சட்டை பட்டனை கழற்றியபடி, துப்பாக்கி முன் நின்று, 'என்னை சுட்டு விட்டு அவரை வண்டியில் ஏற்று' என்று கத்தியவுடன், அந்த போலீஸ் அதிகாரி மிரண்டு பின்வாங்கி சென்றார்.கடந்த, 1973 முதல் மிசா காலம் வரும் வரை சுடுகாடு, கண்மாய், அடர் வனப்பகுதியில் நம் தொண்டர்கள் வனவாசம் சென்ற போது, நாட்டு நடப்பை அவனிடம் கொண்டு சேர்த்தது, 'தினமலர்' நாளிதழ் தான்.எம்.ஜி.ஆர்., எனும் தங்க கலசத்தை கோபுர உச்சியில் ஏற்றி பெருமை சேர்த்ததும்,இந்த நாளிதழ் தான். எனவே, தினமலரை வியாபார ரீதியாக, ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவதை எந்த அ.தி.மு.க., தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். எம்.ஜி.ஆர்., - ஜெ., புகழ் மக்கள் மத்தியில் உள்ளவரை, 'தினமலர்' நாளிதழும் இருக்கும்.உயர்த்தி விட்ட ஏணியை எட்டி உதைக்க வேண்டாம் என்பது கடந்த காலம் அறிந்த தொண்டர்களின் பணிவான வேண்டுகோள். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு!

இப்படியும் குறும்படங்கள் எடுக்கலாமே!

குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொது மக்களுக்கு, போக்குவரத்து பற்றி அறிவூட்டும் வகையில், 'நீங்க ரோடு ராஜாவா?' என்ற விழிப்புணர்வு குறும்படம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காவல் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இது வரவேற்கத்தக்க விஷயம் தான். அதே சமயம் சென்னை காவல் துறை, கீழ்க்கண்ட குறும்படங்களையும் தயாரித்து, அரசுக்கும், மாநகராட்சிக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், கோடி புண்ணியம் கிடைக்கும்... குண்டும், குழியுமான சென்னை சாலைகள், வாகனங்களுக்கு சேதாரமும், ஓட்டுனர்கள் உயிருக்கு உலை வைக்கும் வகையிலும், படு மோசமான நிலையில் உள்ளன. இது குறித்து மாநகராட்சிக்கு அறிவூட்டும் வகையில், 'குண்டு குழி சாலை மகாராஜா' என்ற குறும்படத்தை தயாரித்து, போக்குவரத்து காவல் துறை வெளியிட்டால், மிக நன்றாக இருக்கும். 'குடி'மகன்களின் உடல் நலன் மற்றும் அவர்களது குடும்பங்களை சீரழித்துக் கொண்டிருக்கும், 'டாஸ்மாக்' மதுவுக்கு எதிராக, 'வேண்டாமே, இந்த டாஸ்மாக் ராஜா' என்ற குறும்படத்தை, காவல் துறை தயாரித்து வெளியிட்டால் என்ன?  அரசு அலுவலகங்களில் தழைத்தோங்கும் லஞ்ச ஊழலை படம் பிடித்து காட்ட, 'ஊற்றி மூடு ஊழலை ராஜா' என்ற குறும்படத்தையும், காவல் துறை தயாரித்து வெளியிட்டால், தமிழக மக்கள் கும்மியடித்து வரவேற்பர்.இது பற்றி யோசிக்குமா நம் காவல் துறை?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை