உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / என்ன கைமாறு செய்துள்ளீர்கள்?

என்ன கைமாறு செய்துள்ளீர்கள்?

ஆர்.வேல்வேந்தன், கன்னியாகுமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன் உட்பட, 12 பேர் உயிர் இழந்துள்ளனர்.இந்த, 12 பேரில் நடராசன், தாளமுத்து ஆகியோரின் பெயர்கள், ஓர் அரசு கட்டடத்திற்கும், அரங்கநாதனின் பெயர், மாம்பலத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதைக்கும் சூட்டப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதியை, மொழிப்போர் தியாகிகள் தினமாக கழகம் கொண்டாடுகிறது. அதேநேரம், தமிழ் மொழியைக் காப்பதற்காக, தங்கள் இன்னுயிரை இழந்த இந்த, 12 பேரின் குடும்பத்தினர் எவராவது கவுன்சிலராகவோ, எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.பி., யாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கின்றனரா?அந்த, 12 பேரின் தியாகத்தின் பலனை, கழகக் குடும்பம் தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறது... கட்டடங்களுக்கும், பாலத்திற்கும் பெயர் சூட்டிவிட்டால், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரின் வயிறு நிறைந்து விடுமா அல்லது அரசு செலவில் நினைவிடம் எழுப்பி, அதை பேரணியாக சென்று திறந்து வைத்து விட்டால், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டு விடுமா? இன்றைய நிலையில், அந்த 12 பேரின் குடும்ப வாரிசுகள் எங்கே, என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது எவருக்காவது தெரியுமா?பதவியில் இருக்கும்போது மரணமடையும் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் மனைவி, பிள்ளைகளை அடுத்து வரும் இடைத்தேர்தல்களில் நிறுத்தி, கோடிகளை கொட்டி வெற்றி பெற வைத்து, அழகு பார்க்கும் கழகத்தலைமை, தமிழகத்தில் தாங்கள் ஆட்சியில் அமர அடித்தளமாக இருந்த மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு என்ன கைமாறு செய்துள்ளது?

வெற்று வார்த்தை!

எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக காவல்துறையினர் கொள்ளை அடிப்போரையும், வழிப்பறி செய்வோரையும், போதைப்பொருள் கடத்துவோரையும் கண்டும், காணாமல் விட்டு விடுவர். அப்படியே அவர்களை பிடித்தாலும், விரைவில் வெளியில் வருவதற்கு ஏதுவாக செயல்படுவர். அதேநேரம், பாமர மக்கள் பிரச்னை என்று காவல் நிலையம் சென்றால், அப்போதுதான் சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்வர். சமீபத்தில், திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் பார்க்க, குடும்பத்துடன் சென்ற என் நண்பரின் வயதான தாயார், கூட்ட நெரிசலில் விழுந்து விட்டார்; அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், 'தொடை எலும்பில் சிறிய அளவில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர். நண்பரோ, 'நாங்கள் குடும்பமாக வந்துள்ளோம்; இங்கு தங்குவதற்கு வசதி இல்லை; முதல் உதவி செய்து ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வையுங்கள்; மதுரையில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம்' என்று கூறி, தன் தாயாரை அழைத்து வந்து, மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். வயதானவர் என்பதால், அறுவை சிகிச்சையின் போது இறந்துவிட்டார். தன் தாயாரின் உடலை வாங்கச் சென்ற போது,'திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டிஸ்சார்ஜ் காப்பி மற்றும் அங்குள்ள காவல் நிலைய எப்.ஐ.ஆர்., வேண்டும்' என்று கூறி உள்ளனர்.நண்பர் ஒரு வாடகைக் காரில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சென்று, டிஸ்சார்ஜ் காப்பி கேட்டால், காவல் நிலையத்தில், முதல் தகவல் அறிக்கை பெற்று தருமாறு கூறி விட்டனர். காவல் நிலையத்திலோ, 'உங்களது உறவினர்கள், 10 பேர் வந்தால் தான், எப்.ஐ.ஆர்., போட முடியும்' என்று கூறிவிடவே, நண்பரும் போன் செய்து, மதுரையில் இருந்து இரு வாடகைக் காரில் ஆணும், பெண்ணுமாக, 10 பேரை வரவழைத்துள்ளார்.அவர்களை காவல் நிலையத்திற்கு வெளியே அமரவைத்து விட்டு, ஆய்வாளர் வரணும், எழுத்தர் வரணும் என்று கூறி ஒருநாள் முழுதும் தாமதப்படுத்தி உள்ளனர்.தற்செயலாக அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், கூட்டமாக அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்து, விசாரித்து, 'இத்தனை பேர்களை ஏன் மதுரையிலிருந்து வரவைத்தீர்கள்?' என்று கேட்டு கண்டித்து, உடனே, எப்.ஐ.ஆர்., போட்டு அனுப்பி வைத்தார்.ஒரு இறப்பு வீட்டில் எத்தனை துக்கம் இருக்கும்... அதை கூட உணரவில்லை என்றால், 'காவல்துறை உங்களின் நண்பன்' என்பது வெற்று வார்த்தை தானே!

பொறுப்பு உணர்ந்து செயல்பட!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ---------------------------------------------'ஒவ்வொரு மாதமும், நான்காவது சனிக்கிழமை பொதுமக்கள் பங்களிப்புடன் நீர்நிலை, குடியிருப்புகளில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணி நடைபெற வேண்டும்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, இது ஒரு நல்ல முன்னெடுப்பு தான்!அதேநேரம், பொதுமக்கள் மனது வைத்தால், பெருமளவு குவிந்து வரும் பாலிதீன் பிளாஸ்டிக் கழிவுகளை வெகுவாக குறைக்க முடியும். கடைகளுக்கு செல்லும்போது, கூச்சப்படாமல் துணிப் பை, பாத்திரம் எடுத்துச் செல்வதன் வாயிலாக, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் மாதந்தோறும் நுழையும், பல நுாறு பாலிதீன் பைகளின் எண்ணிக்கை குறையும்!தற்போது, டீ, காபி போன்றவற்றை பாலிதீன் பைகளில் வாங்குவது, மெழுகு தடவிய பேப்பர் கப்புகளில் வாங்கிக் குடிக்கும் கலாசாரம், குக்கிராமம் முதல் பெரும் நகரம் வரை பரவி வருகிறது; முதலில், இதற்கு தடை விதிக்க வேண்டும்.ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, துாக்கி எறியக் கூடிய பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், இப்பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளன. அரசு நடுநிலையுடன், கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, டன் கணக்கில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் குறையும். தேவையான இடங்களில் போதுமான அளவு குப்பைத்தொட்டிகளை வைத்து, துாய்மை பணியாளர் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். குப்பை கழிவுகளை விருப்பம் போல் கொட்டுவோர், அவற்றை ஆங்காங்கே தீ வைத்து எரிப்போருக்கு அபராதம் விதிப்பதன் வாயிலாக வீதிகள் சுத்தமாகும்; காற்று மாசு குறையும். அத்துடன், பாலிதீன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்துவதன் வாயிலாக, மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, மண்ணையும், துாய காற்றையும் கெடுக்கும் வேலையை செய்ய மாட்டார்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஜன 28, 2025 20:40

பிளாஸ்டிக் பை கப் தயாரிப்பாளர்களே திராவிட செம்மல்கள் தான். அதிமுக ஆட்சியில் பிளாஸ்டிக்பொருள்கள் ஒரளவுக்கு குறைந்து இருந்தது.


Dharmavaan
ஜன 28, 2025 07:14

பிளாஸ்டிக் உபயோகிப்பாளனை விட தயாரிப்பாளனை தடை செய்ய வேண்டும்


Matt P
ஜன 28, 2025 07:01

சுடு காப்பியை, டீயை polythene பைகளில் விற்கிறீர்களா? நாடு வேகமா தான் முன்னேறுது. பிளாஸ்டிக் குப்பிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் வெயிலில் இருந்து மித சூடாகி குடித்தாலே புற்று நோய் வரும் என்கிறார்கள். நண்பர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரையே microwave ல் பிளாஸ்டிக்கோடு சூடாக்கி குடித்தார். வாழ்க்கையில் கவனம் தேவை.


D.Ambujavalli
ஜன 28, 2025 06:29

அக்காலம் போல் அரிசி பருப்பு போன்றவைகளை பொட்டலம் கட்டி, அல்லது கோணி சாக்குகளிலும், திரவங்களை பாத்திரங்களிலுமா விற்கிறார்கள். எல்லாம் பிளாஸ்டிக் கவர்களில்தான் விற்கிறார்கள், அவற்றை எவ்விதம் dispose செய்வது/ இந்த பிளாஸ்டிக்குக்கு ஏதாவது உபயோகமான தீர்வு காணும்வரை, மக்கள் பொறுப்புணர்ச்சி எவ்வளவு ஒத்துழைப்பைக் கொடுக்கும் என்பது சந்தேகமே


நிக்கோல்தாம்சன்
ஜன 28, 2025 06:18

செபாஸ்டின் அவர்களே மிகுந்த மனஉளைச்சலை தந்துள்ளது தமிழக அரசு அதிகாரிகளின் நடத்தை , பாவம் உங்களது நண்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை