கே.ரங்கராஜன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தாம்பரம் அரசு சேவை
விடுதியில், 13 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கால்கள் உடைந்த
நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடுமையை
செய்தவன், அவ்விடுதியின் காவலன். மருத்துவமனையில் சிறுமியை
சந்தித்த சமூகநல துறை அமைச்சர் கீதா ஜீவன், 'சிறுமிக்கு பாலியல் ரீதியாக
எதுவும் நடக்கவில்லை; கால்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது'
என்று குற்றத்தை பூசி மெழுகுகிறார். அவர் வீட்டு பெண்ணுக்கு இதுபோன்று
நடந்திருந்தால், இப்படி கூற மனம் வருமா? இதுதான் திராவிட மாடல் அரசு கையாளும், குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளா?தாம்பரம் சிறுமி விஷயம் மட்டுமல்ல; இங்கு பெரும்பாலான பாலியல் குற்றங்கள் வேலியே பயிரை மேயும் கதையாகத் தான் இருக்கிறது. சமீபத்தில்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் காவல்நிலையத்தில் பிடிப்பட்ட கஞ்சா
வியாபாரியின் மொபைல் போனை ஆராய்ந்ததில், தீனதயாளன், தேவநாதன் என்ற இரு
காவலர்கள், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து, தற்போது
இருவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கிலும் காவல் துறை குற்றத்தை மூடி மறைக்க முயன்றது. அதுமட்டுமா...
சென்னை அண்ணா நகர் சிறுமியின் பாலியல் வழக்கிலும், காவல் துறை ஆய்வாளரே
குற்றவாளிக்கு துணை போய், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கியது
தமிழகத்தையே அதிர வைத்தது. இருபத்தி நாலு மணிநேர மருத்துவமனைகள்
போல், தெருதோறும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. தாராளமாக கிடைக்கும் போதைப்
பொருட்களால், குற்றங்கள் வெகு சாதாரணமாக அரங்கேறுகின்றன.இதுகுறித்து
எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால், சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை
போல், 'சட்டம் - ஒழுங்கு சூப்பர்; இந்தியாவிலே தமிழகம் தான் எல்லாவற்றிலும்
முதல் மாநிலம்' என்று பெருமை பேசுகிறார், முதல்வர். அத்துடன், மாணவ -
மாணவியர் தன்னை, 'அப்பா' என்று அழைப்பதாக கூறி ஆனந்தம் அடைகிறார். பொள்ளாச்சி
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, 'அப்பா'வாக இருந்து, 25
லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்த முதல்வர், தற்போது, தாம்பரம்
சிறுமிக்கு, 'அப்பா'வாக என்ன செய்ய போகிறார் என்பதை முதல்வர் கூறுவாரா? மாநில கட்சிகளை அழித்தது யார்?
ரா.ராமநாதன், சொன்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ., தமிழகத்தில் புகுந்து விடும்' என, இதுவரை கதறிக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம், முதல் முறையாக, 'தமிழகத்தில் பா.ஜ., பரவலாக காலுான்றி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை மாறி விட்டது. அந்த கட்சி வலுவடைந்துள்ளது. 'மதுரையில் நடக்க இருப்பது, முருக பக்தர்கள் மாநாடு அல்ல; அது அரசியல் மாநாடு. அ.தி.மு.க., சுதாரிக்கவில்லை என்றால், சில ஆண்டுகளுக்குப்பின், அக்கட்சியின் பெயர் மட்டுமே இருக்கும். 'பல மாநிலங்களில், மாநில கட்சிகளை அழித்துதான் பா.ஜ., வளர்ந்துள்ளது என்பதை, அ.தி.மு.க., உணர வேண்டும்' என்று கூறியுள்ளார், சண்முகம்.நாடு முழுதும் இதுவரை பா.ஜ., அழித்த அரசியல் கட்சிகளின் பெயர்களை சண்முகம் வெளியிட முடியுமா?மாற்றம் ஒன்றுதான் மாறாதது; மற்றபடி காலச் சுழற்சியில், அரசியல் கட்சிகள் தோன்றுவதும், மறைவதும் இயற்கை.அதற்கெல்லாம், பா.ஜ., தான் காரணம் என்று கூறினால், அவர்கள் சிந்திக்கும் திறனை இழந்து விட்டனர் என்றே அர்த்தம்!தமிழகத்தில், தி.மு.க.,விற்கு முன், நீதிக்கட்சி இருந்ததே... அதை அழித்தது எந்த கட்சி? 'தினத்தந்தி' நிறுவனர் ஆதித்தனார், 'நாம் தமிழர்' என்ற பெயரிலும் மா.பொ.சிவஞானம், 'தமிழரசு கழகம்' என்ற பெயரிலும் அரசியல் கட்சி நடத்தினர். அவற்றை அழித்தது யார்? தி.மு.க.,விலிருந்து விலகிய ஈ.வெ.கி.சம்பத், 'தமிழ் தேசிய கட்சி'யை ஆரம்பித்தார். அதையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சியையும் பா.ஜ.,வா அழித்தது?'பிரஜா சோஷலிஸ்ட் கட்சி' என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி தமிழகத்தில் இருந்ததே... அக்கட்சியை அழித்தது யார்? தி.மு.க.,வின் ஆரம்ப கால தலைவரான நாவலர் நெடுஞ்செழியன் முதல், நடிகர் டி.ராஜேந்தர் வரை தமிழகத்தில் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்தனர். அவர்களை எல்லாம் கூட்டணிக்குள் இழுத்து, 'ஆக்டோபஸ்' போல், கபளீகரம் செய்து, இருந்த இடம் தெரியாமல் அழித்தது யார்? பா.ஜ.,வா, திராவிட கட்சிகளா? தமிழகத்தை தங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளது போல், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளும் பங்கு போட்டுக் கொள்ளையடிக்கின்றன. அதில், பிறர் உரிமை கொண்டாடி வந்து விடக் கூடாதே என்று, அட்டைப் பூச்சி போல், கூட்டணி என்ற பெயரில், புதிதாக தோன்றும் கட்சிகளை தங்களுக்குள் இழுத்து, அவற்றின் ரத்தத்தை உறிஞ்சி, அழித்தது தான், திராவிட கட்சிகளின் வரலாறு என்பதை சண்முகம் நினைவில் கொள்ள வேண்டும்! கருவிழி பதிவு செய்யலாமே!
டாக்டர் பொன்னு சேதுராஜ்,காரைக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சிலருக்கு குறிப்பாக முதியோருக்கு கைவிரல் ரேகை சரியாக பதிவாகுவதில்லை. அதனால், அவர்களை தாசில்தார் அலுவலகம் போய், எழுதி வாங்கி வரச் சொல்கின்றனர், ரேஷன் கடை ஊழியர்கள். தாசில்தார் அலுவலகம் தேடி வெயிலில் முதியோர் அலைவதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஒருவழியாக, அவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் காரணத்தை எழுதி கொடுத்தாலும், சுவரில் அடித்த பந்து போன்று, மீண்டும் அலைய விடுகின்றனர்.பொதுவாக, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரல் நுனியில் உள்ள தோல் மீள் தன்மை குறைந்து தடிமனாகிறது. மேலும், பல்வேறு நோய் தொற்று காரணமாக கைரேகை முற்றிலும் அழிந்து விடுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, ரேகை பதிவாக வில்லை என்று கூறி, ரேஷன் கடை ஊழியர்கள் முதியோரை அலைய விடுவது நியாயமா? அதற்கு பதில், கருவிழி பதிவு செய்து, பொருட்களை கொடுக்கலாம் அல்லவா? இது குறித்து அரசு யோசிக்குமா?