உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / குறை கூற என்ன உள்ளது?

குறை கூற என்ன உள்ளது?

ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்து, இங்கே சில அரசியல்வாதிகள் ஓலம் இடுகின்றனர்.நம் வீட்டிற்குள், சம்பந்தம் இல்லாதவர் நுழைந்தால், அவரை திருடன் என்பீர்களா, தியாகி என்று கொண்டாடுவீர்களா?நம்மவர்கள், தவறான நபர்களை நம்பி சட்ட விரோதமாக அமெரிக்கா சென்றது தவறு; அவர்களை சிறையில் அடைக்காமல், திருப்பி அனுப்பியதே பெரிய செயல். இதில், மாலை, மரியாதையுடன் அழைத்து வர வேண்டும் என குரல் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?ஒவ்வொரு நாட்டுக்கும் சில சட்ட நடைமுறைகள் இருக்கும்; அதன்படி தானே நடந்து கொள்வர்...இதில், அவர்களை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? பணம் சம்பாதிக்கத்தானே, அன்னிய நாட்டுக்கு சட்ட விரோதமாக சென்றனர்; இதுபோன்ற கஷ்டங்கள் நிகழும் என்று அவர்களுக்கு தெரியாதா?எதற்காக, அவர்களை தியாகிகள் போல் மடைமாற்றம் செய்ய அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்?அரசியல் செய்ய, நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும் போது, இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தாதீர்கள்!சட்ட விரோதமாகச் சென்றால், கைதிகளுக்கு ஈடான மரியாதையைத்தான் கொடுப்பர்.முறைப்படி விசாவில் சென்றவர்களை திருப்பி அனுப்பவில்லையே... அங்கு, அவர்கள் கோலோச்சிக் கொண்டு தானே இருக்கின்றனர்? அதனால், எல்லாவற்றிலும் அரசியல் செய்யாமல், திரும்பி வந்தவர்களுக்கு எந்தவகையில் பொருளாதார உதவி செய்யலாம் என, யோசியுங்கள்!

விடிவு வரும்!

ரா.சேது ராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -'அதிகரித்து வரும் கனிமவளக் கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகனும், அதிகாரிகளும் தான் காரணம்!' - இதை சொன்னவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியோ, பா.ஜ., மாநிலத் தலைவர்அண்ணாமலையோ அல்ல; மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தான், இப்படி பகிரங்கமாகக் கூறியுள்ளார். அத்துடன், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான குவாரிகளுக்கு அனுமதியளித்துள்ளனர். அங்கு வெட்டி எடுக்கப்படும் கனிமவளம் தினமும் ஒரு லட்சம் டன் வீதம், கர்நாடகாவிற்கும்; திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெட்டப்படும் கனிமவளம் தினமும், 1,000 லாரிகளில் கேரளாவுக்கும் கடத்தப்படுகிறது.'ஆனால், இதை ஏற்றிச்செல்லும் அப்பாவி ஓட்டுநர் மீதும், லாரி உரிமையாளர்கள் மீதும் சுரங்கத்துறை, 'கொள்ளையர்'என வழக்குப்பதிவுசெய்கிறது.'கலெக்டரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2020லிருந்தே இதுகுறித்து தெரிவித்து வருகிறோம்' என்றும் கூறியுள்ளார். இவர் சொல்வதற்கு முன்பே, பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தின் போது, 'தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை நடக்கிறது' என தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டார், பிரதமர் மோடி. என்ன பிரயோஜனம்... விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிப்போரை என்ன செய்ய முடியும்? பழம் தின்று கொட்டை போடுவதைவிட, ஒரு மரத்தையே விழுங்கி ஏப்பம் விடக்கூடியவர், துரைமுருகன். எம்.ஜி.ஆர்., தயவில் வாழ்வைத் துவங்கி, கருணாநிதியிடம் கோலோச்சியவர் அல்லவா இவர்!மக்கள் உணர வேண்டும்... ஊழலின் ஊற்றுக்கண்கள் என்று தெரிந்தும், திராவிட கட்சிகளுக்கு மாற்றி மாற்றி ஓட்டளிப்பதை நிறுத்தினால் தான், இதற்கெல்லாம் விடிவு வரும்!

நரம்பு இல்லாத நாக்கு!

கி.சுப்பு, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னோர் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியம்; அதன்படி, தங்களுக்காக போரிட்ட சிக்கந்தர் பாதுஷாவிற்கு, இஸ்லாத்தை தழுவிக் கொண்ட தமிழர்கள் தர்கா கட்டி ஆடு, கோழி பலியிட்டு வழிபடுகின்றனர்; திருப்பரங்குன்றம் மலைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை' என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன்.சிக்கந்தர் பாதுஷா அப்படி யாருடன் போரிட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய தமிழர்களை காப்பாற்றினாராம்? பாண்டிய மன்னர்களுடனா அல்லது மதுரை மக்களுடனா அல்லது எங்கிருந்தோ வந்த ஒரு துருக்கியரான சிக்கந்தரை எதிர்த்த விஜயநகர பேரரசிடம் இருந்தா? எந்த மண்ணின் மைந்தர்களை கொன்று, இவர்களை காத்தார்?ஹிந்து அமைப்புகளுக்கு முருகன் என்றால் யார் என்று தெரியுமா? முருகனுக்கும் - தமிழர்களுக்கும், தமிழுக்கும், தமிழ் நிலத்துக்குமான உறவு என்ன என்று தெரியுமா என்று கேட்கிறார்.முருகனை வழிபடும் ஹிந்துக்களுக்கு தெரியும் முருகன் யார் என்பது!ஆனால், சீமான் தம்பிக்கு தெரியுமா சிக்கந்தர் யார் என்பது? மாலிக் கபூர் யார் என்பது? மதுரை சூரையாடப்பட்டதும், எதிர்த்து போரிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தம் தோய்ந்த வரலாறும் தெரியுமா? 'என் மலையை கொள்ளையடிக்க நீ யார்?' என்று இப்போது மத்தியஅரசிடம் நெஞ்சைநிமிர்த்தும் சீமானுக்கும்,அவரது தம்பிகளுக்கும், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட வரலாறு தெரியுமா?அதில் மீனாட்சியம்மன் கோவில் தீக்கிரையாக்கப்பட்ட சோகம் தெரியுமா; திருப்பரங்குன்றம் கோவில் சின்னாபின்னமாக்கப்பட்ட கதை தான் தெரியுமா? எப்படித் தெரியும்... கோவையில், திட்டமிட்டு குண்டுவெடித்து நுாற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்ற பயங்கரவாதியை கொண்டாடும், 'அக்மார்க்'தமிழரினம் தானே நாம் தமிழர் கட்சி!தமிழகத்தில் எத்தனையோ தர்காக்கள் உள்ளன. அங்கெல்லாம் ஆடு, மாடு பலியிடப்படுகிறதா? ஏன், திருப்பரங்குன்றம் முருகன் மலைமீது மட்டும் பலியிட வேண்டும்?இஸ்லாமியர்கள் மதம் மாறிய தமிழர்கள் தானே... அண்ணன் - தம்பிகளாக, மாமன் - மச்சான்களாக இருப்பவர்கள் தானே... ஹிந்துக்களின் உணர்வுகளை புரிந்து, தாங்கள் பின்பற்றும் மதத்திலேயே இல்லாத ஒரு சடங்கை திருப்பரங்குன்றம் மலையில் தவிர்க்க வேண்டியது தானே? எதற்காக பிடிவாதமாக பிடித்து தொங்க வேண்டும்?'முருகன் என் முப்பாட்டன்' என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதுமா... அதற்காக, நாம் தமிழர் கட்சி என்ன செய்தது? நரம்பு இல்லாத நாக்கு தானே... ஓட்டுக்காக எப்படியும் வளையும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 12, 2025 06:34

அவர் cheap ஆக மரத்தையெல்லாம் விழுங்க மாட்டார் முழுத் தொப்பைத்தான் முழு குவார் மாட்டிக்கொண்டால் இருக்கவே இருக்கிறது, ‘வயது மூப்பு, 87 வயதுக் கிழவனைத் துன்புறுத்துகிறார்கள் என்று ஒப்பாரி ‘கொல்றானே, கொல்றானே’ என்று வழிகாட்டிய முன்னவர் வழிதானே … ஏற்கெனவே பொன்முடி இதே பிலாக்கணம் பாடிவிட்டு தீர்ப்பிலிருந்தும் வாய்தா vaankiyirukkiraar


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை