உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / நீதிபதிகளுக்கு உத்தரவிடுவது யார்?

நீதிபதிகளுக்கு உத்தரவிடுவது யார்?

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1996ல் தி.மு.க., ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த இன்றைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 3 கோடியே, 92 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அ.தி.மு.க., ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. பின், 2007ல் தி.மு.க., ஆட்சியில் 1 கோடியே, 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக -துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, அ.தி.மு.க., ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வேலுார் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் நடந்து வந்த நிலையில், 'புகாரில் போதிய முகாந்திரம் இல்லை' என்று கூறி. 2007ல், முதல் வழக்கில் இருந்து அவரை விடுவித்தது, நீதிமன்றம்.இதேபோல், 2013ல் இரண்டாவது வழக்கிலும் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்படவே, தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். இப்படி, ஜெயலலிதா ஆட்சியில் துரைமுருகன் குற்றவாளியாவதும், கருணாநிதி ஆட்சியில் நிரபராதி ஆவதும் தொடர்கதையாக உள்ளது. அதேபோன்று, லஞ்ச ஒழிப்பு போலீசார், தி.மு.க., ஆட்சியில் அமைதியாகவும், அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கலும் செய்தனர். இந்த இரு வழக்குகளும் பல ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், சமீபத்தில், 'வேலுார் சிறப்பு நீதிமன்றமே இந்த இரண்டு வழக்கையும் விசாரித்து, ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.துரைமுருகன் மீது வழக்கு தொடுத்து, 30 ஆண்டுகள் நெருங்கி விட்டன. இன்னும் அவர் குற்றவாளியா, நிரபராதியா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. அதேநேரம், சமீபத்தில், 'காலதாமதம் செய்யாமல், மூன்று மாதத்துக்குள் சட்ட மசோதாக்கள் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது, உச்ச நீதிமன்றம். துரை-முருகன் சொத்துக் குவிப்பு வழக்கு மட்டுமல்ல, பல்வேறு வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கின்றன. ஜனாதிபதிக்கு அளித்த அவகாசம் போல், இவ்வழக்குகளை எல்லாம் மூன்று அல்லது ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகளுக்கு உத்தரவிடுவது யார்?

தி.மு.க.,விற்கு நெறி கட்டுவதன் ரகசியம்!

சி.கணபதி, வழக்கறிஞர், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து எழுதுகிறார்: 'தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுச்சாம்' என்பதை போல், அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததும், தி.மு.க.,வும், அதன் தோழமை கட்சிகளும் துடிக்கின்றன. காரணம், 2021 தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளுக்கிடையே இருந்த ஓட்டு வித்தியாசம், 4.5 சதவீதம்; பல தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம், 3,000க்கும் கீழ். அதனால் தான், வலிமையான கூட்டணியை அ.தி.மு.க., அமைத்து விடக்கூடாது என்று பதறுகிறது, தி.மு.க.,!வரும் 2026 தேர்தல் பழனிசாமிக்கு வாழ்வா, சாவா என்ற நிலைதான்!இதை உணர்ந்து, 1967ல் கொள்கைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, ராஜாஜியின் சுதந்திரா கட்சி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவில் எப்படி தி.மு.க., ஆட்சியை பிடித்ததோ, அதே பார்முலாவை முன்னெடுக்க வேண்டும் பழனிசாமி. நம் நாட்டில் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க ஆரம்பித்தால், அனைத்து கட்சிகளுமே தனித்தனியாக தான் நிற்க வேண்டி வரும்!ஆக, வெற்றி பெற வேண்டுமானால், தேர்தல் கூட்டணி அவசியம்!'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கோட்பாடு மட்டுமே கூட்டணிக்கான அச்சாரம். அதேபோல் தான் ஆட்சியில் பங்கு என்பதும்! அடுத்து வரும் தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அது கூட்டணி ஆட்சியாகத் தான் இருக்கும். காரணம், தற்போதைய இரு திராவிட கட்சி தலைவர்களும், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை திறன் கொண்டவர்கள் அல்ல! எனவே, பழனிசாமி தன் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, பா.ம.க, - தே.மு.தி.க., புதிய தமிழகம் முடிந்தால் நாம் தமிழர் ஆகிய கட்சிகளையும் கூட்டணிக்குள் அழைத்து வந்து தேர்தலை சந்தித்தால், வெற்றி நிச்சயம்!

அரசின் கவனத்திற்கு வருமா மயிலாடுதுறை?

தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய அரும் பணிகளை பட்டியலிட்டு, அவருடைய பெயரில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் ஒரு பகுதியான கும்பகோணத்தில், பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், டெல்டா மாவட்டங்களிலேயே, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள எவ்வித வளர்ச்சியும் அடையாத, பின்தங்கிய மாவட்டமான மயிலாடுதுறையில் பல்கலை அமைக்கலாம்!தொழில் வளர்ச்சியில் கூட தமிழகத்திலேயே சென்னை முதலிடமும், மயிலாடுதுறை மாவட்டம் கடைசியிலும் உள்ளது. இங்கு குறிப்பிடும்படி எந்தவொரு தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் இல்லை.அதேநேரம், அருகே உள்ள நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும், மருத்துவக்கல்லுாரியும், மீனவ பல்கலைக் கழகமும் அமைந்துள்ளன.அதேபோன்று, தஞ்சை மாவட்டத்தில் ஏகப்பட்ட கல்வி, தொழில் நிறுவனங்கள், தமிழ் பல்கலை கழகம் போன்றவை உள்ளன. அதிலும், கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்த பின், கடந்த மூன்று ஆண்டுகளாக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மாவட்டமாக அறிவிக்கப்பட்டும், மயிலாடுதுறையில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் கூட பல ஆண்டுகளாக மந்த நிலையில் நடைபெறுகின்றன. மொத்தத்தில் மயிலாடு துறை பேருக்கு தான் மாவட்டம், இங்கு எந்தவித வளர்ச்சி திட்டமும் இல்லை. எனவே, இங்கு கருணாநிதி பல்கலை கொண்டு வந்தால் கல்வி வளர்ச்சி பெறும், புதிய தொழில்கள் துவங்க வாய்ப்பு அமையும், மருத்துவக் கல்லுாரி போன்றவை வரும்.அரசு இதை கவனத்தில் கொள்ளுமா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dharmavaan
மே 01, 2025 08:27

இந்நாட்டின் கேவலமான நிலைக்கு காரணமே கோர்ட்டுகள்தான் குற்றவாளிக்கு கொடுக்கும் ஆதரவுதான்


சமீபத்திய செய்தி