உள்ளூர் செய்திகள்

யார் குற்றவாளி?

முனைவர் வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திகைத்தனை போலும் செய்கை' என்று கம்ப ராமாயணத்தில் வாலி, ராமனைப் பார்த்து சொல்வான். அதில் உள்ள திகைப்புக்கு வைரமுத்து சமீபத்தில் ஒரு விழாவில் அளித்த விளக்கம், 'ஐயோ... பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு' என்று பல போராட்டங்களையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன. திகைப்புக்கு அவர் கூறும் பொருள், புத்திசுவாதீனம் இல்லாமை. அதாவது, பைத்தியம்! தமிழ் அகராதி கூறும் அர்த்தம் வியப்பு, மயக்கம். ஒரு சாமானியனுக்கே தெரிந்துள்ள இதற்கான பொருள், தமிழகத்தில் பிறந்து, தமிழை வைத்து பிழைப்பு நடத்தும், தன்னை கவிப்பேரரசு என்று சொல்லிக் கொள்ளும் வைரமுத்துவுக்கு தெரியாதா என்ன? இருந்தும் இப்படி அபத்தமாகப் பேசியுள்ளார் என்றால் என்ன காரணம்? யாரையோ திருப்திபடுத்த, வேண்டுமென்றே ஹிந்து கடவுள் ராமரை இழிவுபடுத்தியுள்ளார். அப்படியிருக்க, வீண் விவாதங்கள் அவசியமா? தவறு என்பது தவறிச் செய்வது; தப்பு என்பது தெரிந்தே செய்வது! தவறு செய்தவன் மன்னிப்பு கேட்பான். தப்பு செய்தவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்க முடியுமா? இது திட்டமிட்டே நடந்தேறியுள்ள நாடகம். தெரியாமல் ஒருவர் காலை மிதித்து விட்டவன், 'சாரி' என்பான். வேண்டு மென்றே, பஸ் மீது கல் விட்டெறியும் ரவுடி மன்னிப்பு கேட்பான் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா? அத்துடன், இவ்விழாவில் வைரமுத்துவுக்கு, 'கம்பன் விருது' வழங்கியுள்ளது ஆழ்வார் ஆய்வு மையம் என்ற பெயரில் ஒளிந்துள்ள திராவிடத் தோல் போர்த்திய ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவராக இருப்பது, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாமே... வைரமுத்து எந்த இடத்தில் நின்று ராமரை இழிவுபடுத்தியுள்ளார் என்பது! மேலும், ஏற்கனவே, வைரமுத்து ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளது தெரிந்திருந்தும், இவரது தராதரம் புரிந்திருந்தும், இவருக்கு விருது வழங்கியுள்ளனர் என்றால், அதற்கு கழகம்தான் குற்றவாளி. அதுதான் மன்னிப்பு கேட்க வேண்டும்; வைரமுத்து அல்ல!  திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவரா? முனைவர்.ப.நாகலிங்கம் பிள்ளை, தாழக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின், 'திறன் மேம்பாட்டு பயிற்சி கமிஷன்' என்பது நாட்டின் முன்னேற்றத்திற்காக அதிகாரிகளின் திறனை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது, பிரதமர் மோடியின் மூளையிலிருந்து பிறந்த குழந்தை என்றே சொல்லலாம்! இந்த அமைப்பின் இயக்குநர் அடில் ஜைய்னுல் சமீபத்தில் ஓய்வு பெற்ற போது, ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். அது, பிரதமருடைய ஆலோசனைகளை பெற்றபின், அதற்குரிய பாடத்திட்டம், பயிற்சி வழிமுறைகள் மற்றும் செயல் திட்டங்களை வகுத்து, பிரதமரிடம் காண்பித்துள்ளார், அடில் ஜைய்னுல். அதைப் பார்த்த பிரதமர் மோடி, 'இதில் முக்கியமான ஒன்று சேர்க்கப்படவில்லையே...' என கேட்டு ள்ளார். அதிர்ச்சி அடைந்த அடில் ஜை ய்னுல், 'விடு பட்ட பகுதி என்ன?' என்று கேட்டுள்ளார். 'இத்திட்டத்தில் எனக்கென்று எதுவும் பயிற்சி இல்லையே...' என்று கூறியுள்ளார். பிரதமரது இக்கேள்வி ஆழ்ந்த அர்த்தமுள்ளது. அவர், தனக்குப் பயிற்சி தேவை என விரும்பியதன் மறைபொருள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் திறன் மேம்பாடு அடைவது அவசியம் என் பதே, அதன் உட்பொருள். ஒரு நாடு திறமையான, நேர்மையான ஆட்சியை பெற வேண்டுமெனில், அதிகாரிகள் மட்டும் திறமை பெற்றவர்களாக இருந்தால் போதாது; அவர்கள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், சட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கி, வழிநடத்தி நிர்வாகம் செய்யும் அரசியல் தலைவர்களும் , திறன் மேம்பாடு உடையவர்களாக விளங்க வேண்டும். அதற்கு அவர்களுக்கும் பயிற்சி தேவை தானே? அப்பணியையும் திறன் மேம்பாடு கமிஷன் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே கமிஷன் இயக்குநரிடம், 'திறன் மேம்பாடு திட்டத்தில் முக்கியமான ஒரு விஷயம் விடுபட்டுள்ளதே...' எனக் கேட்டுள்ளார், பிரதமர். எதிர்காலத்தில், பிரதமரின் இந்த உயரிய எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் திட்டத்தை கமிஷன் செயல்படுத்தினால் நாட்டுக்கு நன்மை விளையும். நடக்குமா இது? பொறுத்திருந்து பார்ப்போம்!  அரசியல்வாதிகள் ஏன் பேசவில்லை? டி.ஆர்.ராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒரு மாநி லத்தின் வாக்காளர் பட்டியலில் வேறு மாநிலத்தவரை சேர்ப்பதால், விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின் உரிமையில் தலையிடும் செயலாக கருதப்படும்' என்கிறார், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம். அப்படியெனில், ஒரு வேட்பாளர் தன் சொந்த தொகுதியை விட்டு, வேறு தொகுதியில் அல்லது வேறு மாநிலத்தில் போட்டியிடுவது சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளர்களின் உரிமையில் தலையிடும் செயல் ஆகாதா? என்று, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்வி சரியே! மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, உ.பி.,யின் ரேபரேலி, அமேதி தொகுதியிலும், 1980ல் ஆந்திராவின் மேடக் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ், அமேதி தொகுதியை தன் குடும்பத்திற்காக குத்தகை எடுத்துக் கொண்டது போல், அவர் மனைவி சோனியா, மகன் ராகுல் என, இப்போது வரை அத்தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் கூட ராகுல், ரேபரேலி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு என இரு தொகுதி களில் போட்டியிட்டார். அரசியல்வாதிகள் தங்கள் வேட்பாளர்களை வேறு மாநிலத்தில் நிற்க வைத்து, வெற்றி பெற செய்கின்றனர். அவர்களால் அம்மாநில மக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்? உதாரணத்திற்கு, 1980ல் இருந்து, 35 ஆண்டுகளுக்கும் மேல், ரேபரேலி, அமேதி தொகுதிகள் காங்கிரஸ் வசம் தான் இருந்தன. அங்கு என்ன வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன? எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன? இப்படி, தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலத்தில் வந்து போட்டியிடும் வேட்பாளர்களால் என்ன நன்மைகள் கிடைத்துள்ளன? இதுவும், தொகுதி மக்களின் உரிமையில் தலையிடும் செயல் தானே? இதை ஏன் அரசியல்வாதிகள் பேச மறுக்கின்றனர். தாங்கள் பாதிக்கப் படுவோம் என்பதாலா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை