உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / எதற்கு வரி விலக்கு?

எதற்கு வரி விலக்கு?

கோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல்., போட்டிகளை பி.சி.சி.ஐ., என்ற கிரிக்கெட் நிறுவனம் நடத்தி வருகிறது. அதேநேரம், இதில் ஏகப்பட்ட வரி ஏய்ப்புகளும், சமரசங்களும் நடக்கின்றன!கிரிக்கெட்டை வளர்க்கும் தொண்டு நிறுவனம் பி.சி.சி.ஐ., என்று, அந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் பதிவு செய்திருப்பதை மேற்கோள் காட்டி, வருமான வரி நீக்கம் பெற்றது. ஆனால் உண்மை என்ன?பி.சி.சி.ஐ., ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பிலிருந்து விலகி, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இதன் ஆண்டு வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள்!ஆனால், முழு வரி விதிப்பு விலக்கு!மத்திய அரசின் நேரடி பார்வையில் இந்த வரி இழப்பு நிகழ்கிறது.இன்றைய சூழ்நிலையில், ஐ.பி.எல்., என்பது முழுக்க முழுக்க வியாபாரம். பெரும் பணக்காரர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் கிரிக்கெட் வியாபாரம்!ஊடகங்கள், விளம்பரங்கள் வாயிலாக கிரிக்கெட் ரசிகர்களை மூளை சலவை செய்து, பணத்தை கொள்ளையடிக்கிறது. கிரிக்கெட் ஒரு ஜென்டில்மென் கேம் என்பது தற்போதைய சூழலில் பொருந்தாது. இதை வைத்து பல்வேறு சூதாட்ட 'ஆப்'கள் மக்களின் பணத்தை சுரண்டுகின்றன.அரசு விழித்துக்கொள்ள வேண்டும்; ரசிகர்களும் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்!

பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் பதில் என்ன?

ஆர்.வி.பிரசாந்த், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2022, மார்ச் 18ல், 7,000 கோடி ரூபாய் ஒதுக்கியது, தமிழக அரசு. இத்திட்டத்தின்படி 2022 முதல் 2026 வரை, 15,000 பள்ளிகள் புனரமைக்கப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். அத்துடன், அனைத்து அரசு பள்ளிகளின் புனரமைப்பு மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கும், நுாலகம், விளையாட்டு மைதானம் அமைக்க, இந்த 7,000 கோடி ரூபாய் பயன்படும் என்றும் கூறப்பட்டது. இதில், 2,467 கோடி ரூபாய் செலவில், 7,756 வகுப்பறைகள் புனரமைக்கப்பட்டுள்ளது என்று, கடந்த 2024, நவம்பர் மாதத்தில் செய்தி வெளியிட்டது தமிழக அரசு. மேலும், 18,000 வகுப்பறைகளை உலக தரத்தில் அமைப்பதே தமிழக அரசின் குறிக்கோள் எனவும், அரசு பள்ளிகளை, நவீன கற்றல் மையங்களாக மாற்றுவதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்றும் கூறியது. ஆனால், 2023, ஜன., 14ல், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டத்தை அறிவித்து, இதில் மக்களும், பெரிய தொழில் நிறுவனங்களும் அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக உதவலாம் என்று அறிவித்தது. அதையடுத்து, கடந்த நவம்பரில், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' வாயிலாக, 380 கோடி ரூபாய் உதவித்தொகை கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்தது. இவ்வளவு நிதி ஒதுக்கியும், உதவித்தொகை கிடைத்தும் அரசு பள்ளிகளின் நிலை பெரிதாக முன்னேற்றம் கண்டதாகவோ, தனியார் பள்ளிகளுக்கு இணையான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றதாகவோ தெரியவில்லை!இன்னும் பெரும்பாலான பள்ளிகள் சுற்றுச்சுவர் கூட இல்லாமல் தான் இயங்குகின்றன. ஏன் இந்த அவல நிலை? தி.மு.க.,வின் நான்கு ஆண்டு ஆட்சி, 15,000 பள்ளிகளை புனரமைக்க போதவில்லையா இல்லை அரசு ஒதுக்கிய 7,000 கோடி ரூபாய், தனியார் பங்களிப்பான, 380 கோடி ரூபாய் என, 7,380 கோடி ரூபாய் தான் போதவில்லயா? ஏன் அரசு பள்ளிகள் இன்னும் அதே நிலையில் மாற்றம் இல்லாமல் உள்ளன. பணம் எங்கே போனது? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?

இதுதான் கருத்து சுதந்திரமா?

பி.கார்த்திக் குமார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசு கேள்விகளை எதிர்கொள்ள அஞ்சுவதால், ஊடக அலுவலகங்களில் சோதனை நடத்துகிறது; செய்தியாளர் களை சிறையில் தள்ளுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின். சில ஊடகங்களை தவிர, தமிழகத்தின் அனைத்து பத்திரிகை, யு - டியூபர் மற்றும் காட்சி ஊடகங்களை தங்களுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்து, அரசு செய்யும் தவறுகளையும், முறைகேடான செயல்களையும் மக்களுக்கு தெரியாமல் மூடி மறைக்கும் திராவிட மாடல் அரசு, 'உலக பத்திரிகை சுதந்திர நாளான இன்று, எவருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லை என்றால், மக்களாட்சி இருளில் மாண்டு விடும் என்பதை, நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம்' என்று செய்தி வெளியிடுவது எத்தனை அபத்தம்?தன் ஆட்சி நேர்மை தவறாத, வெளிப்படைத்தன்மை நிறைந்தது என்பது போல் அல்லவா முதல்வர் கூறியுள்ளார்? உண்மையில் தமிழக ஊடகங்கள் எந்த விதமான அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாகவா செயல்படுகின்றன? வெளிப்படைத் தன்மையுடன் தான் செய்திகளை வெளியிடுகின்றனவா?சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறி, எதிர்க்கட்சி ஆதரவாளரான யு - டியூபர் மாரிதாசை கைது செய்த போதும், பெண் காவலர்களை அவதுாறாக பேசினார் என்று சவுக்கு சங்கரை கைது செய்த போதும், ஊடக சுதந்திரம் பேணப்பட்டதா? முதல்வர், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததாக கூறி, மீண்டும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது, சென்னை உயர் நீதிமன்றமே,'ஒரு கருத்தை கூறியதற்காக ஒருவர் மீது வழக்கு தொடுப்பது, பாசிச அணுகுமுறை. வழக்கு தொடுப்பது வேறு; கைது செய்வது வேறு.'காவல்துறையினர் தேவையற்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது' என, காவல்துறை மற்றும் அரசுக்கு கொட்டு வைத்ததை முதல்வர் மறந்து விட்டாரா? உதயநிதி வீட்டிற்கு ரகசியமாக வரவழைக்கப்பட்ட ஜீயர்கள் குறித்த விபரத்தை தன் யு - டியூப் வாயிலாக வெளிப்படுத்திய ரங்கராஜன் மீது, ஏழு வழக்குகளில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்ததுடன், வழக்கில் ஆஜராக வந்த வழக்கறிஞரை நீதிமன்றத்திற்கு வர விடாமல் தடுத்தனரே... இதற்கு பெயர் தான், கருத்துகளை அஞ்சாமல் எதிர்கொள்வதா? ஆளும் அரசு, ஊடக சுதந்திரத்தை மதிக்கிறது, போற்றுகிறது என்றால், ஏன் சில பத்திரிகைகளுக்கு மட்டும் அரசு விளம்பரங்கள் கிடைப்பதில்லை? முதல்வரின் பேச்சு, 'சாத்தான் வேதம் ஓதுவது' போல் உள்ளது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JANAKIRAMAN V.K
மே 09, 2025 15:27

Good thing happened . Many students will concentrate their Education.


Vijay D Ratnam
மே 09, 2025 15:21

மதிப்பிற்குரிய இந்திய இராணுவமே. வேட்டையாடு விளையாடு விருப்பம் போல பொளந்து கட்டு , வீரமாக நடையை போடு - நீவெற்றி எனும் கடலில் ஆடு. இந்த அறிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்திய ராணுவத்திடம் அடிவாங்கி செத்து ஒழிவதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டதுதான் பாகிஸ்தானின் ராணுவமும் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளும். இப்படி ஒரு களம் எளிதில் கிடைக்காது. ஆகவே உங்களிடம் உள்ள எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி சோதனை செய்துகொள்ளுங்கள், இன்னும் இன்னும் ட்ரெயினிங் எடுத்துக்கொள்ளுங்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டுமல்ல கராச்சியை தலைநகராக கொண்ட பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை மட்டும் இந்தியாவோடு சேர்த்துவிடுங்கள்.


Neelachandran
மே 08, 2025 12:46

ஐஎம்எப்பில் பதவி வகித்தவரின் புத்தகத்தை யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏழு கோடி கொடுத்து வாங்குகிறது.ஐசிசிஐக்கு வரிவிலக்கு அளிக்கிறது. என்னதான் நடக்கிறது? ஓர் ஏழை எழுத்தாளருக்கு அரசு ஆதரவு அளிக்குமா?


D.Ambujavalli
மே 08, 2025 04:54

தங்களுக்கு தினமும் ஆரத்தி எடுத்துப் புகழ் பாடும் ஊடக அடிமைகளைத்தவிர மற்றவர்களின் விமர்சனங்கள் அரசுக்கு எட்டிக்காய்தான் கோர்ட்டிடம் இன்னும் எத்தனை கூட்டு கண்டனம் வாங்கினாலும் அதில்மாற்றம் எதுவும் இருக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை