உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  நேரம் தவறாமை எனும் பண்பு வளருமா?

 நேரம் தவறாமை எனும் பண்பு வளருமா?

ரா.ஷண்முகம், அவினாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 'வளரும் தமிழகம்' புத்தொழில் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. காலை, 10:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு, 11:00 மணிக்கு வந்தார், குறு, சிறு தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா.அதுவரை மாணவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள், தொழில் முனைவோர் என நுாற்றுக்கணக்கானோர் காத்திருக்க வேண்டி இருந்தது.ஒரு நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்தில் செல்லக் கூடாது; தாமதமாக சென்றால் தான் கவுரவம் என்ற எண்ணம் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உள்ளது.உண்மையில், இது நிகழ்ச்சிக்கு வந்து காத்திருப்போருக்கு செய்யும் அவமரியாதை; அவர்களின் விலை மதிப்பற்ற நேரத்தை திருடும் களவாணித்தனம்!ஒரு தலைவரின் மதிப்பு, அவர் எவ்வளவு தாமதமாக வருகிறார் என்பதில் இல்லை; அவர் நேரத்தை எப்படி மதிக்கிறார் என்பதில் தான் உள்ளது.ஜப்பான் நாட்டை பாருங்கள்... அங்கு நேரம் தவறாமை என்பது ஓர் ஒழுக்கமாக மட்டுமல்லாமல், தேசிய குணமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.சில விநாடிகள் தாமதமாக வந்தால் கூட, அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கும் பண்பாடு அங்கு உள்ளது. அதனால் தான், இரண்டாம் உலகப் போரில் அந்நாடு சிதைந்து போன போதும், பூகம்பம், சுனாமி, எரிமலை என்று இயற்கை சீற்றங்களால் துவண்ட போதும் அவர்களால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. நிர்வாகத்திலும், தொழில் துறையிலும், உற்பத்தியிலும் உலகிற்கே அவர்களால் முன்னுதாரணமாக திகழ முடிகிறது.ஆனால், நம் நாட்டிலோ ரயில், பேருந்து, விமானம், அரசு நிகழ்ச்சிகள், அலுவலக கூட்டங்கள் என அனைத்து இடங்களிலும் நேரம் தவறுவதை இயல்பாக ஏற்றுக்கொள்வதுடன், 'இந்தியன் டைம்' என்று கூச்சமே இல்லாமல், நம்மை நாமே கிண்டல் செய்து கொள்கிறோம்.சிலர் இதை பெருமையாக வேறு கூறுகின்றனர். தாமதம் என்பது அவமானம் தரும் விஷயம் என்பதை இவர்கள் உணர்வதில்லை.இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் தான்!'நேரம் தவறாமை' என்பதை ஒரு நிர்வாகக் கொள்கையாக அரசு அறிவித்து, அதை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கடைப்பிடிக்க வலியுறுத்தும் போது, மக்களும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வர்.இந்த ஒரு மாற்றம் நடந்தாலே போதும்; நிர்வாகக் கலாசாரத்தில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கும்.வளர்ச்சி என்பது பெரிய திட்டங்களில் மட்டும் இல்லை; மற்றவர்களின் நேரத்தை மதிப்பதில்தான் அதன் முதல் வெற்றியே உள்ளது!

குளத்தில் கூட தாமரை மலராது!

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் எதிர்ப்பு அரசியல் என்பதே ஒரு நகை முரண் தான்! ஒன்று, மத்திய அரசை எதிர்ப்பது; மத்திய அரசு மிஞ்சினால் கெஞ்சுவது என்று, 60 ஆண்டு காலமாக இதே கொள்கையோடு தான் அரசியல் செய்து வருகிறது. கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 'எந்த ரூபத்தில் பா.ஜ., வந்தாலும், அக்கட்சியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்' என, பேட்டை ரவுடிகள் போல், தி.மு.க.,வினர் சங்கநாதம் முழங்கிக் கொண்டிருந்தனர். கூடவே, தன் கூட்டணி கட்சியினரையும், மத்திய அரசுக்கு எதிராக கொம்பு சீவி, பேச வைத்து வேடிக்கை பார்த்தனர். பதிலுக்கு, தி.மு.க.,வை ஊழல் கட்சி என்றும், 'குடும்ப அரசியல், ஹிந்து விரோதிகள்; தமிழக மண்ணில் இருந்து அழிக்கப்பட வேண்டிய கட்சி' என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தனர், பா.ஜ.,வினர். இப்படி எதிரெதிர் துருவங்களாக இருந்த இரு கட்சிகளும், இப்போது உறவு பாலம் அமைக்க நேரம் காலம் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நேச வலை விரிப்புக்கு காரணம், மத்திய பா.ஜ., அரசுக்கு சில மசோதாக்கள் நிறைவேற்ற தி.மு.க.,வின் ஆதரவு தேவையாக உள்ளது. அதேபோல், தங்கள் கட்சியினர் மீது, த.வெ.க., அரசு கைது நடவடிக்கையில் இறங்கினால், அதை தடுக்க, பா.ஜ., ஆதரவு தி.மு.க.,விற்கு தேவையாக இருக்கிறது. இப்படி ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுத்து, சிக்கல் தீர வழி தேட, இருகட்சிகளுக்கும் இந்த உறவு பாலம் தேவைப்படுகிறது. அதனால், 'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; பகைவரும் இல்லை' என்று சந்தர்ப்பவாத கணக்கை எழுத துடிக்கின்றன, இருகட்சிகளும்! இந்த அரசியல் கணக்குப்படி, தி.மு.க., உறவை பா.ஜ., நாடினால், ஏற்கனவே தமிழகத்தில் வாடி வதங்கிப் போய் உள்ள தாமரை, அதன்பின், தமிழக குளத்தில் கூட மலராது!

ரேஷன் கார்டுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்!

அ.ராஜரத்தினம், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் அனைத்தையும், தமிழக வெற்றிக் கழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில், 'அரசின் இலவச சலுகைகள் கிடைக்காமல் போய் விடுமோ' என்று எண்ணி, வசதி படைத்தவர்களும் அரிசி கார்டை வாங்கி வைத்துள்ளனர். இவர்கள் ரேஷன் அரிசியை வாங்கி ஹோட்டல்களுக்கும், மாடு வைத்திருப்போருக்கும், ரைஸ் மில்லுக்கும் விற்பனை செய்கின்றனர். தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு கொடுக்கும் வேட்டி - சேலைகளை குறைந்த விலைக்கு விற்கின்றனர். ரேஷன் பொருட் களை பயன்படுத்தாத இவர்களுக்கு எதற்கு அரிசி கார்டு? இவர்களால் அரசுக்கு தான் வீண் செலவு ஏற்படுகிறது. அதனால், ரேஷன் கார்டு ஒன்று தான் இருக்க வேண்டும். சீனி கார்டு, அந்த கார்டு, இந்தக் கார்டு என்று எதுவும் இருக்கக் கூடாது. அந்த ஒரு ரேஷன் கார்டும் உண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். இதனால், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதும் நடக்காது; உண்மையிலேயே ரேஷன் பொருட்கள் தேவைப்படுவோருக்கு மட்டும் தராளமாக கிடைக்கும்! எனவே, ரேஷன் கார்டுகளை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூலை 23, 2026 19:32

முதல்வரே. 8. மணி. நேரம். தாமதமாக. வந்து. பெண்கள், குழந்தைகள் வெயிலில். காக்க. வைக்கவில்லையா? அமைச்சர்கள் சரியான. நேரத்துக்கு. வந்துவிட்டால். அவர்கள். 'கெத்து'. என்னாவது? போன ஆட்சியில். 'காலை. 9. மணிக்கு கூட்டம். என்று. போடுங்கப்பா, அப்பத்தான். 1. மணிக்காவது. வருவார்'. என்று. ஒருவரைப்பற்றி. பேச்சு.கே. உலவியதையும் நினைக்க வேண்டும்


D.Ambujavalli
ஜூலை 23, 2026 19:27

ரேஷனில். கிடைக்கும். இலவசம். எதற்கும். முதலில். வந்து. நிற்பது. மாதம். 50, 70. ஆயிரம். சம்பாதிப்பவர்கள்தான் சிலர். நாலைந்து. கார்டுகள். கூட. வைத்திருக்கிறார்கள் திமுக ஆட்சியில். உரிமைத்தொகை, தகுதிப்படி வழங்கப்படும். என்றதும். எவ்வளவு. ஆர்ப்பாட்டம். செய்தார்கள். என்பது. நினைவில். இருக்கிறதா?


அரவழகன்
ஜூலை 23, 2026 07:22

பா. ஜ. க தி. மு. க கூட்டணி வைத்தால் அது அரசியல் சாக்கடை என முத்திரை பதிக்கும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை